தடை தீர்வாகிவிடாது!

தமிழகத்தில் நெகிழி பயன்பாட்டுக்கான தடை ஏற்கெனவே அமலில் உள்ளது.


தமிழகத்தில் நெகிழி பயன்பாட்டுக்கான தடை ஏற்கெனவே அமலில் உள்ளது. புதுச்சேரியில் நெகிழிக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வரும் ஜூன் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை இந்தியாவின் பல மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நெகிழிக்கு எதிரான கடும் நட
வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2022-ஆம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்பாட்டு நெகிழிகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் நிலைமையை ஏற்படுத்துவதுதான் இலக்கு. 

உலகளாவிய அளவில்  ஒரு மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயமாக நெகிழி உருவெடுத்திருக்கிறது. சர்வதேச அளவில் கடந்த 40 ஆண்டுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை 60% குறைந்திருக்கிறது என்றால், அதற்குக் காற்று மாசு, வனம் அழிப்பு, பருவநிலை மாற்றம் மட்டுமல்லாமல், நெகிழியால் ஏற்பட்டிருக்கும் 

சுற்றுச்சூழல் பாதிப்பும் மிக முக்கியமான காரணம். சர்வதேச அளவில் எடுத்துக் கொண்டாலும்கூட, நாள்தோறும் உருவாகும் நெகிழியில் வெறும் 9% மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. நெகிழியைக் கையாள்வதில் இந்தியாவின் நிலைமை  மிகவும் மோசம். 

இந்தியாவைப் பொருத்தவரை 26,000 டன் நெகிழி நாள்தோறும் வீணாக்கப்பட்டு, குப்பையில் கலக்கிறது. இவற்றில் பெரும்பகுதி கடலில் கொண்டு கொட்டப்படுகிறது. ஆரம்பக் கட்டத்திலேயே வீணாகத் தூக்கி எறியப்படும் நெகிழி பிரிக்கப்பட்டால், பிரச்னைக்கு இடமே இருக்காது. ஆனால், அது குறித்த விழிப்புணர்வோ, முறையான  முன்னேற்பாடுகளோ செய்யப்படாமல் இருப்பதால் மேலை நாடுகளைவிட இந்தியாவில் நெகிழியால் ஏற்படும் பாதிப்பு கடுமையானதாக  இருக்கிறது.

மத்திய-மாநில அரசுகள் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி,  வீணாக்கப்படும் நெகிழிக் கழிவுகளை பிரித்தெடுத்து அகற்றுவதில் முனைப்புக் காட்டியிருந்தால், நெகிழிக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. 

பல்வேறு விதமான நெகிழிகளை எவ்வாறு கையாள்வது, எப்படி மறு சுழற்சிக்கு உட்படுத்துவது என்பது குறித்த தெளிவையும் விதிமுறைகளையும் 20 ஆண்டுகளுக்கு முன்பே "இந்தியத் தர நிர்ணய அமைப்பு'  ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அதை யாரும் பின்பற்றுவதாகவோ, செயல்படுத்துவதாகவோ இல்லை. 

ஒவ்வொரு மாநிலத்திலும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலரின் தலைமையில் குப்பை மேலாண்மை குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு மாதந்தோறும் எவ்வளவு நெகிழிக் கழிவு உருவாகிறது, சேகரிக்கப்படுகிறது, அவற்றில் என்னென்ன ரசாயனக் கலவைகள் இருக்கின்றன, அவை எப்படி  அகற்றி அழிக்கப்படுகின்றன என்பது குறித்து அறிக்கை  தயாரிக்க முற்பட்டால், ஓரளவுக்கு மக்கள் மத்தியில்  நெகிழியைத் தனியாகப் பிரித்து அகற்றும் எண்ணம் ஊக்குவிக்கப்படும்.

வீடுகளிலும், கடைகளிலும் மக்கும் குப்பையையும், நெகிழி உள்ளிட்ட மக்காத குப்பையும் தனித்தனியாகப் பிரிப்பது குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை. அதற்கு அதிகாரப்பூர்வ ஆதரவோ, போதுமான வசதிகளோ இல்லாத நிலையில்,  மக்கும் குப்பையையும், மக்காத குப்பையையும் பிரித்தெடுத்து, அகற்றும் முறை மக்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை. பெரிய வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், அலுவலகங்கள் என்று அதிக அளவில் மக்காத குப்பையை உருவாக்குபவை கூட, சட்டப்படி குப்பையைப் பிரித்து வழங்கும் முறையை கையாளாமல் இருக்கும்போது, தனி நபர்கள் விழிப்புணர்வு பெற்றுச் செயல்படுவார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? 

மக்கும் குப்பையும், மக்காத குப்பையும் பிரிக்கப்படாமல் மொத்தமாக குப்பைகளைச் சேகரிக்கும் முறைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். குப்பைகள் பிரிக்கப்படாமல் இருக்கும் வரை நெகிழியைத் தனியாக அகற்றி, அழிப்பதோ, மறு சுழற்சிக்கு உட்படுத்துவதோ சாத்தியமல்ல.

நெகிழி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் அவர்களால் அறிமுகப்படுத்தி விற்கப்படும் நெகிழியைத் திரும்பப் பெறும் முறையை எவ்வாறு கையாள வேண்டும் என "2016-ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை விதிமுறை' தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. இது குறித்த சட்டம் இயற்றப்பட்டு அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும்கூட, சுற்றுச்சூழல் அமைச்சகம் அதை வலியுறுத்தவோ, நடைமுறைப்படுத்தவோ முனைப்புக் காட்டவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 

மேலும், நெகிழித் தடையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது சிறுதொழில் தயாரிப்பாளர்கள், தொழிற்சாலைகள் மட்டுமே. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், இணைய வணிக நிறுவனங்கள் ஆகியவை மிக அதிக அளவில் நெகிழிக் கழிவுகளுக்குக் காரணமாக இருந்தும்கூட, எந்தவித பாதிப்பும்  ஏற்படாமல் தொடர்கின்றன. அதனால்தான் கழிவுகள் சேகரிக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான டன்கள் திடக்கழிவுகளுடன் நெகிழிக் கழிவு கலந்து அவற்றை அழிக்கவோ, அகற்றவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. 

தடை ஏற்படுத்துவதில் அரசு காட்டியிருக்கும் அதே முனைப்பை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதிலும் காட்ட வேண்டும். நெகிழியை மக்கள் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம், அவை விலை குறைவானவை, சுலபமாகக் கையாளக்கூடியவை என்பதால்தான். இதற்கு மாற்று, அதேபோல விலை குறைவானதாகவும், சுலபமாகக் கையாளக்கூடியதாகவும் இருந்தால் மட்டுமே மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நெகிழி மீதான தடை, அதன் பயன்பாட்டை ஓரளவுக்குக் குறைக்குமே தவிர, இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com