முற்றுப்புள்ளி அல்ல... அரைப்புள்ளி!

காத்திருந்து காத்திருந்து கடைசியில் லோக்பாலை அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

காத்திருந்து காத்திருந்து கடைசியில் லோக்பாலை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 2013-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசால் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டம் காகிதத்தில் தொடர்ந்ததே தவிர, அடுத்தகட்ட நகர்வு ஏற்படவேயில்லை. 
ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி லோக்பால், லோக் ஆயுக்த நியமனங்கள் பல்வேறு சாக்குப்போக்குகளைக் காரணம் காட்டி தள்ளிப்போடப்பட்டு வந்தன. இப்போது மக்களவைக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், லோக்பால் தேர்வுக் குழு பினாகி சந்திர கோஷை இந்தியாவின் முதல் லோக்பாலாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. 
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் போராட்டத்தைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் 2013-இல்  நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியது என்றாலும், அதன் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டது. அண்ணா ஹசாரே போராட்டத்திற்கும், லோக்பால் சட்டம் கொண்டுவரப்படுவதற்கும் ஆதரவளித்த பாஜகவின் தலைமையில் 2014-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சி அமைத்தவுடன் உடனடியாக லோக்பால் தேர்வு செய்யப்பட்டு லோக்பால் சட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அடுத்த ஐந்தாண்டுகள் கிணற்றில் போட்ட கல்லாக லோக்பால் சட்டம் நரேந்திர மோடி அரசாலும் புறக்கணிக்கப்பட்டது. லோக்பால் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை முன்வைத்தது. இந்தக் காலதாமதத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு முக்கியமான காரணம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
லோக்பால் என்பது ஒரு நியமனம் மட்டுமல்ல. லோக்பால் தலைவராக பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டாலும், அந்தக் குழுவில் மேலும் எட்டு பேர் நியமிக்கப்பட்டாக வேண்டும். அவர்களுக்கு ஊழலுக்கு எதிரான கொள்கை, சமூக அக்கறை, பொது நிர்வாகம், நிதி நிர்வாகம், சட்டம், மேலாண்மை ஆகியவற்றில் குறைந்தது 25 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும் என்கிறது லோக்பால் சட்டம். நியமனக் குழுவால் நியமிக்கப்பட்டிருக்கும் பினாகி சந்திர கோஷைத் தொடர்ந்து இனியும் காலதாமதமில்லாமல் லோக்பால் குழுவில் இடம் பெறும் எட்டு உறுப்பினர்களும் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். மத்தியில் லோக்பால் அமைவது மட்டுமல்லாமல், எல்லா மாநிலங்களிலும் இதேபோல லோக் ஆயுக்தக்கள் நியமிக்கப்பட்டு நடைமுறைக்கு வர வேண்டும்.
இப்போது பினாகி சந்திர கோஷ் லோக்பாலாக அறிவிக்கப்பட்டிருப்பதேகூட, மத்திய அரசின் ஆர்வத்தினாலோ, விருப்பத்தினாலோ அல்ல.  லோக்பால் நியமனத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதை குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை காமன் காஸ் இந்தியா என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் விளைவுதான் இப்போது அவசர அவசரமாக லோக்பால் அறிவிக்கப்பட்டிருப்பது. 
உயர் பதவியிலிருக்கும் அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 2013-இல் அண்ணா ஹசாரேயின் தலைமையில் லோக்பால் நியமனத்தை வலியுறுத்தி ஒட்டுமொத்த தேசமே கொதித்தெழுந்ததைத் தொடர்ந்துதான் அரசு நிர்வாகம் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க முற்பட்டது. 
லோக்பால் அமைக்கப்படுவதாலேயே மேலடுக்கு ஊழல்கள் அகற்றப்பட்டு விடும் என்றோ குறைந்து விடும் என்றோ சொல்லிவிட முடியாது என்றாலும், வழக்கு தொடுப்பதற்கும் விரைந்து விசாரித்து முடிவெடுப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிற அளவில் லோக்பால் கண்காணிப்பு அமைப்பு மிக மிக அவசியம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் லோக்பாலுக்கு தரப்பட்டிருக்கிறது. முதல் கட்ட விசாரணை புகார் பெறப்பட்ட 30 நாள்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் விசாரணைக் காலத்தை அதிகபட்சமாக மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கலாம். 
விசாரணை அறிக்கை லோக்பாலிடம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனடிப்படையில் அந்தப் புகார் நிராகரிக்கப்படலாம் அல்லது முழு விசாரணையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அந்த விசாரணை ஆறு மாதங்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேவை ஏற்பட்டால் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கலாம். அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த ஓர் ஆண்டில் விசாரணை முடிக்கப்பட வேண்டும். தேவை ஏற்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஊழல் வழக்குக்கும் லோக்பால் வழக்குக்கும் வித்தியாசமுண்டு. எந்த ஒரு புகார் குறித்தும் விசாரணை நடத்த லோக்பால் அமைப்பு மத்திய-மாநில அரசுகளிடம் முன்னனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதனால், தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்தி உயர் பதவியில் இருப்பவர்களின் மீதான குற்றச்சாட்டை விசாரிக்காமல் நீர்த்துப் போக வைக்கும் நடைமுறைக்கு லோக்பால் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 
லோக்பால் அமைக்கப்பட்டிருப்பதாலேயே ஊழலுக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடாது என்றாலும், குறைந்தபட்சக் கடிவாளமாவது போடப்படும் என்கிற வகையில் நாம் இதை வரவேற்றாக வேண்டும். பினாகி சந்திர கோஷின் கரங்களை வலுப்படுத்தியாக  வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com