புவிக்குளே முதன்மை யுற்றாய்! | அண்ணல் காந்தியடிகள் குறித்த தலையங்கம்

புவிக்குளே முதன்மை யுற்றாய்! | அண்ணல் காந்தியடிகள் குறித்த தலையங்கம்

உலகுக்கு நான் விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறீர்கள்? எனது வாழ்க்கைதான் உலகுக்கு நான் விடுக்கும் செய்தி! என்று சொன்ன அண்ணல் காந்தியடிகள்தான் உலகுக்கு இந்தியா விடுக்கும் செய்தி.

காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டு இன்று நிறைவு பெறுகிறது. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இன்றைய உலகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகள் அனைத்துக்குமான விடை அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையில் இருக்கிறது என்று உலகமே வியந்து கொண்டாடுகிறது. நமக்குத்தான் அது தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளவும் நாம் தயாராக இல்லை. சுற்றியுள்ள எல்லாவற்றையும் நாம் பார்க்கிறோம். ஆனால், நம்மை நாமே பார்த்துக் கொள்வதில்லை. அதுபோலத்தான் அண்ணல் காந்தியடிகளின் பெருமை இன்றைய தலைமுறை இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது.

காந்தியைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்றா கேட்கிறீர்கள்? இமய மலையைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்பதுபோல இருக்கிறது அது. அவர் நடமாடும் இமயம்! - சொன்னவர் ஜார்ஜ் பெர்னாட் ஷா.
இடுப்பில் வெறும் நான்கு முழத்துண்டுடன் இந்தியாவில் வாழ்ந்தவர் அவர். ஆனால், காந்தி இறந்தபோது மனித இனமே அழுதது என்று சொன்னவர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை என்கிற நூலை எழுதிய பிரபல அமெரிக்க எழுத்தாளர் லூயி ஃபிஷர்.

நானும் என்னைப் போன்றவர்களும் புரட்சியாளர்களாக இருக்கலாம். ஆனால், நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாங்கள் எல்லோருமே காந்திஜியின் சீடர்கள்தான் என்றவர் வியத்நாமில் கம்யூனிஸ்ட் புரட்சி மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றிபெற்ற ஹோசிமின்.

வருங்கால சந்ததிகளுக்கெல்லாம் முன்மாதிரி மனிதராகத் திகழ்பவர் மகாத்மா காந்தி மட்டுமாகத்தான் இருப்பார். நமது காலத்தில் வாழும் எல்லா அரசியல், சமூகச் சிந்தனையாளர்களிலும் தலைசிறந்த சிந்தனையாளர் காந்திதான் என்று சொன்னார் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஏசுநாதர் நமக்கு இலக்கைத் தந்தார். அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைத் தந்தவர் மகாத்மா காந்தி என்பது அமெரிக்கக் கருப்பர் இன மக்களின் தனிப் பெரும் தலைவர் மார்ட்டின் லூதர் ஜூனியரின் பதிவு.

தென்னாப்பிரிக்காவின் மாற்றத்திற்கு அண்ணல் காந்தியடிகளின் தத்துவமும் வழிமுறைகளும்தான் காரணம். காந்திஜியின் அடியொற்றி நடந்ததால்தான் எங்களால் நிறவெறியை எதிர்கொண்டு வெற்றிபெற முடிந்தது என்று, தான் உரையாற்றிய எல்லா சர்வதேச மன்றங்களிலும் அறிவித்தவர் நெல்சன் மண்டேலா.

மறைந்தவர்கள், இருப்பவர்கள் என்று என்னில் பாதிப்பை ஏற்படுத்திய பலர் இருக்கிறார்கள். ஆனால், வாழ்க்கையில் எனது கதாநாயகர் யார் என்று கேட்டால், அது மகாத்மா காந்தியாக மட்டுமே இருக்கும் என்றவர் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.

உலகை மாற்றிவிட முடியும் என்று நினைப்பவர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்! என்று அண்ணல் காந்தியடிகளை மேற்கோள்காட்டி, காந்தியடிகளின் படத்துக்கு முன்னால் நின்றபடி, நிறைந்து வழிந்த அரங்கத்தில் 1997-இல் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த உலகமும் அண்ணாந்து பார்த்து வியக்கும் ஒப்பாரும் மிக்காருமில்லாத ஆளுமையாக அண்ணல் காந்தியடிகள் வலம் வருவதற்கு அவரது ஆக்கப்பூர்வ அணுகுமுறைதான்  காரணம். துவேஷத்தை விதைத்து அதில் அரசியல் ஆதாயம் தேட அவர் முயற்சித்ததே இல்லை. மாறாக, எதிரியிடமும் அன்பு பாராட்டத் தயங்காத பரந்த மனமும் புரிதலும் அவருக்கு மட்டுமேதான் இருந்தது. அதனால்தான் அவர் மகாத்மா!

இன்றைக்குப் போல ஊடகங்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, தொழில்நுட்ப வசதிகள் எதுவுமே இல்லை. ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்த நிலைமை. அதையும் மீறி, காந்தியடிகள் செல்லுமிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் அவரைக் காணத் திரண்டெழுந்ததே, எதனால்?

சென்னையிலிருந்து மதுரைக்குத் தொடர் வண்டியில் பயணிக்கிறார் காந்தியடிகள். ரயில் பாதையின் இருபுறத்திலும் அவரைக் காண மக்கள் கூட்டம் காத்துக் கொண்டிருந்த  காட்சியை ஆசிரியர் சாவியும், டி.எஸ்.எஸ். ராஜனும் எழுத்தில் வடித்திருக்கிறார்கள். புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய தமிழக, இந்தியத் தலைவர்களில் ஒருவருக்காவது அதுபோன்ற பேராதரவு இல்லையே, ஏன்? 

காந்திஜியிடம்  உண்மை இருந்தது. எளிமை இருந்தது. நேர்மை இருந்தது. தான் சொன்ன கருத்திலும், கொள்கையிலும் உறுதி இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது அணுகுமுறையின் அடித்தளத்தில் மனிதாபிமானம் இருந்தது.
துவேஷத்தை விதைக்காத அவரது ஆக்கப்பூர்வ அணுகுமுறையை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நாம் சரியாகச் செய்யாமல் போனால், பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி மனித இனம் அழிந்துவிடும்.

அண்ணல் காந்தியடிகள் குறித்த மகாகவி பாரதியின் தீர்க்கதரிசன வரிகள் இவை:

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!
அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்,
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குளே முதன்மை யுற்றாய்!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com