பலவீனத்தை மறைக்கும் பலம்! | சீனாவின் 70ஆவது தேசிய தினம் குறித்த தலையங்கம்

கம்யூனிஸ சீனா என்று பரவலாக அறியப்படும் சீன மக்கள் குடியரசு உருவான 70-ஆவது ஆண்டு தினம் அந்த நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த அக்டோபர் 1-ஆம் நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மிகப் பெரிய ராணுவ அணிவகுப்புடன் நடத்தப்பட்ட அந்தக் கொண்டாட்டத்தை ஒட்டுமொத்த உலகமும் வியப்புடனும் பிரமிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தது. 
கடந்த 40 ஆண்டுகளில் சீனா அடைந்திருக்கும் பொருளாதார வெற்றிகள் ஒன்றோ, இரண்டோ அல்ல. 70 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டிருக்கிறது கம்யூனிஸ சீனா. சீன மக்களின் ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது, கல்வியறிவு வளர்ந்திருக்கிறது, வருவாய் அதிகரித்திருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய உற்பத்தியாளராகவும் அந்த நாடு மாறியிருக்கிறது. வர்த்தகத்தில் மட்டுமல்லாமல், அந்நியச் செலாவணி இருப்பிலும் உலகிலேயே முதன்மை இடத்தை சீனா பிடித்திருக்கிறது. 
அதே நேரத்தில் சில கடுமையான சட்டங்கள் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதையும் மறுப்பதற்கில்லை. "கர்ப்பக் கண்காணிப்பு' என்று கேலி பேசும் அளவுக்கு குடும்பத்துக்கு ஒரு குழந்தைக்கு மேல் கூடாது என்பதை சீன அரசு நடைமுறைப்படுத்தியதைப் பலரும் ரசிக்கவில்லை. மாசே துங் காலத்தில் நடந்த கலாசாரப் புரட்சியும், மாற்றமும் கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்தது இன்னும்கூட சீன மக்களால் கலவரத்துடன் நினைத்துப் பார்க்கப்படுகிறது. அவற்றையெல்லாம் பழைய வரலாறு என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, இன்றைய சீனாவின் வளர்ச்சியை மட்டுமே இப்போதைய அரசு வெளிச்சம் போடுகிறது.
1949-இல் மாசே துங்கின் கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து, அக்டோபர் 1-ஆம் தேதி சீன மக்கள் குடியரசு உருவானது. இப்போது போலவே அப்போதும் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டபோது, கம்யூனிஸ சீனாவிடமிருந்த 16 விமானங்களையும் இரண்டு முறை மீண்டும் மீண்டும் பறக்கவிட்டுத்தான் தனது பலத்தைப் பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. இப்போது நிலைமையே வேறு. இப்போதைய அணிவகுப்பில் 160 அதிநவீன போர் விமானங்களும், 580 ராணுவத் தளவாடங்களும் இடம்பெற்றன. அதிபர் ஷி ஜின்பிங் பார்வையிட்ட அந்த அணிவகுப்பில், காட்சிக்கு வைக்கப்பட்ட அத்தனைத் தளவாடங்களும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை.
அந்த அணிவகுப்பில் பங்கு பெற்ற "டாங்பெங் 41' என்கிற சர்வதேச அணு ஏவுகணை முக்கியமானது. 12,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் வலிமையுள்ள "டாங்பெங் 41'-ஐ காட்சிக்கு வைத்ததன் மூலம் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் நிகரான அணு ஆயுத பலத்தை தான் பெற்றிருப்பதை உலகுக்கு உணர்த்த சீனா முற்பட்டிருக்கிறது. "டாங்பெங் 41' மட்டுமல்ல, "டாங்பெங் 17' என்கிற ஏவுகணையும் அதில் குறிப்பிடத்தக்கது. எந்த ராடாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிலான தொழில்நுட்பத்துடன் கூடியது "டாங்பெங் 17' ஏவுகணை. 
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் 40,000 டன் எடையுள்ள தாக்குதல் போர்க் கப்பல் சில நாள்களுக்கு முன்புதான் சீன கடற்படையில் இணைக்கப்பட்டிருக்கிறது. தைவானுக்கும் தென்சீன கடலோரத்தில் இருக்கும் நாடுகளுக்கும் ஹாங்காங்குக்கும் அச்சுறுத்தலாக அமையும் அந்தக் கப்பல், சீனாவின் கடற்படை வலிமையை எடுத்தியம்புகிறது. 
தனது ராணுவ பலத்தையும் அதிகார பலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும்கூட, மிகப் பெரிய எதிர்ப்பையும், கிளர்ச்சிகளையும், பிரச்னைகளையும் சீனா எதிர்கொள்கிறது. ஒருவேளை தனது ராணுவ பலத்தைக் காட்சிப்படுத்தியதே அந்தப் பலவீனத்தை மறைப்பதற்காகக்கூட இருக்கலாம்.
சீனாவின் மேற்குப் பகுதியில் திபெத் இப்போதும் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோல, சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் 15 லட்சத்துக்கும் அதிகமான உயிகர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தென்கிழக்கிலுள்ள ஹாங்காங்கில் கடந்த 17 வாரங்களாக நடந்து வரும் சீன அரசுக்கு எதிரான போராட்டம், இப்போது துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து மேலும் கடுமையாகியிருக்கிறது. சீனாவுக்கு தைவான் அடிபணியத் தயாராக இல்லாமல் இன்னும் சுதந்திர நாடாகவே தொடர்கிறது.
இவையெல்லாம் அரசியல் பிரச்னைகள் என்று சொன்னால், சீனப் பொருளாதாரம் இரண்டு இலக்கு வளர்ச்சியிலிருந்து தடம்புரண்டு இப்போது பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்னை கடுமையாகியிருக்கிறது. 1970-ஆம் ஆண்டு வரை பொதுவுடைமை சமுதாயமாக இருந்த சீனா, இப்போது ஏற்றத்தாழ்வு அதிகரித்திருக்கும் சமுதாயமாக மாறியிருப்பது அதன் பொருளாதார வளர்ச்சியின் பலவீனம்.
எதிர்பாராத வளர்ச்சி மக்கள் மத்தியில் மிக அதிகமான எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டது. வயதானவர்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்து அவர்களுக்குப் போதிய சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆண், பெண் விகிதம் இன்னொரு பிரச்னை. கட்சியிலும் ஆட்சியிலும் அதிகரித்துவிட்டிருக்கின்ற ஊழல் வேறு ஒரு பிரச்னை. கம்யூனிஸ சீனா தனது 70-ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது, கூடவே சீனாவின் இறங்குமுகத்துக்கான இதுபோன்ற அறிகுறிகளும் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.
"கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் போயிருந்தால் இன்றைய புதிய சீனா உருவாகியிருக்காது' என்பது 30 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் பரவலாக எழுப்பப்பட்ட கோஷம். இப்போதும்கூட அந்தக் கோஷம் எழுப்பப்படுகிறது. உணர்வுப்பூர்வமாக அல்ல, அரசின் நிர்ப்பந்தத்தால்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com