காஷ்மீரின் மறுபக்கம்!

தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடந்த மனித உரிமை கழகத்தின் 42ஆவது

தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடந்த மனித உரிமை கழகத்தின் 42ஆவது கூட்டத்தில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிஷேல் பாஷ்லெட் வெளியிட்டிருக்கும் கருத்து ஒருதலைப்பட்சமானது. காஷ்மீர் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என்கிற கருத்தைத் தெரிவிக்க அவருக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஆனால், இந்தியாவை மட்டுமே குறிப்பிட்டு அந்தக் கருத்தை அவர் தெரிவித்திருப்பது, காஷ்மீரப் பிரச்னை குறித்த முழுமையான புரிதல் அவருக்கு இல்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. 
1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் ஜம்மு  காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. இப்போது பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீரின் பகுதிகளும் அந்த சமஸ்தானத்தைச் சேர்ந்தவை என்பதால், இப்போது அவை பாகிஸ்தானின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் இருக்கின்றன என்பதுதான் பொருள். அதனால், காஷ்மீர் பிரச்னையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதுபோல, விவாதத்துக்குரியது பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் குறித்துத்தானே தவிர, இந்தியாவுடன் இணைந்துவிட்ட பகுதிகள் குறித்து அல்ல.
சட்டப் பிரிவு 370உம், சட்டப்பிரிவு 35ஏஉம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதிகள். அவற்றைத் திருத்தவோ, மாற்றவோ இந்தியாவுக்கு அதிகாரம் உண்டு. பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தையோ, ஐ.நா. சபையின் சார்ட்டரையோ மாற்றிவிடவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு ஜம்மு  காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்தியா பிரித்திருக்கிறது, அவ்வளவே. இதிலும்கூட இந்தியாவைக் குறைகூற பாகிஸ்தானுக்கு எந்தவித அருகதையும் கிடையாது.
ஐ.நா.வின் போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, தனது ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் பகுதியை 1949இல் பாகிஸ்தான் இரண்டாகப் பிரித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ஒரு பகுதியாகவும், கில்ஜித்  பல்திஸ்தான் பகுதிகள் மத்திய கட்டுப்பாட்டிலுள்ள வடக்குப் பகுதி என்றும் பிரித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1969இல் மத்திய கட்டுப்பாட்டிலுள்ள வடக்குப் பகுதிக்கு ஓர் ஆலோசனைக் குழுவை நியமித்தது. 
1994இல் அந்த ஆலோசனைக் குழுவை வடக்குப் பகுதி கவுன்சில் என்று பெயர் மாற்றியது. 1999இல் அதை வடக்குப் பகுதி சட்டப்பேரவையாக மாற்றியது. 2009இல் கில்ஜித்  பல்திஸ்தான் சட்டப்பேரவை என்று பெயர் மாற்றி, அதற்கு தன்னாட்சி உரிமையை வழங்கியது. அதனடிப்படையில், 1963இல் 5,000 ச.கி.மீ. நிலப்பரப்பை சட்டவிரோதமாக சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது பாகிஸ்தான். 
1927இல் காஷ்மீர் சமஸ்தானத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்டப்பிரிவு 35ஏ சேர்க்கப்பட்டது. அதை இப்போதுதான் இந்திய அரசு அகற்றியிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் சரி, கில்ஜித்  பல்திஸ்தான் பகுதிகளிலும் சரி 1927இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 1984இல் அகற்றப்பட்டது. அங்கே யார் வேண்டுமானாலும் குடியேறவும், சொத்துகள் வாங்கவும் பாகிஸ்தான் அரசு வழிகோலியது. இதனால், பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியின் அடிப்படைத் தோற்றமே மாறியிருக்கிறது. பாகிஸ்தான் அரசின் இந்த செயல்பாடுகளின் பின்னணியில், இந்தியா தனது அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை செய்ததை சர்வதேச அரங்கில் விமர்சிக்கும் உரிமை பாகிஸ்தானுக்குக் கிடையாது.
ஜம்மு  காஷ்மீரத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்பவையெல்லாம், இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னைகள். இதுகுறித்து விமர்சிப்பதற்கு பாகிஸ்தானுக்கு எந்தவித தார்மிக உரிமையும் கிடையாது. பாகிஸ்தானில் காணப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா விமர்சிக்க முற்பட்டால் அதை எதிர்க்கவோ, மறுக்கவோ பாகிஸ்தானால் முடியாது என்பதுதான் நிஜம். 
மனித உரிமை மீறல்கள் காஷ்மீரில் நடைபெறுகின்றன என்று குற்றம்சாட்டும் பாகிஸ்தானின் தேசிய மனித உரிமைகள் ஆணையம், கடந்த மூன்று மாதங்களாக செயலிழந்து முடங்கிக் கிடக்கிறது. அதன் தலைவர் மட்டுமல்ல, ஏழு உறுப்பினர்களில் ஆறு பேருடைய நான்கு ஆண்டு பதவிக்காலம் கடந்த மே 30ஆம் தேதி நிறைவு பெற்று இன்னும்கூட புதிய நியமனம் அறிவிக்கப்படவில்லை. அதற்குக் காரணம், பாகிஸ்தானின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சுதந்திரமாக இயங்கும் அமைப்பு என்பதுதான். 
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு  காஷ்மீர் பகுதிகளிலும், பலுசிஸ்தான் பகுதிகளிலும் காணப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அந்த ஆணையம் கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்ததால், இம்ரான் கான் அரசு தனது கைப்பாவைகளை அந்த ஆணையத்தின் உறுப்பினர்களாகவும், தலைவராகவும் நியமிக்க விரும்புகிறது. அதை பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் தடுத்துக்கொண்டிருக்கிறார். அதனால், ஆணையம் முடக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் மிஷேல் பாஷ்லெட், இந்தியா குறித்த கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் ஒருபோல மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் கவலைப்பட வேண்டும். 
ஜம்மு  காஷ்மீரில் விரைவில் இயல்பு நிலை திரும்புவதை உறுதிப்படுத்துவதன் மூலம்தான் இதுபோன்ற விமர்சனங்களை இந்தியா எதிர்கொள்ள முடியும். நமது பலவீனங்களை பாகிஸ்தான் பரப்புரை செய்வதை தடுத்துவிட முடியாது. ஆனால், பாகிஸ்தானின் உண்மை நிலவரத்தை நம்மால் உலகுக்கு எடுத்தியம்ப முடியும். அதற்கு நாம் ஏன் தயங்குகிறோம்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com