காணொலி மாநாட்டின் மிக முக்கியமான அம்சம் ராணுவ, பாதுகாப்பு ஒப்பந்தங்கள். அதிலும் குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பகுதி குறித்த இரு நாடுகளின் கருத்தொற்றுமையும், பாதுகாப்பு அக்கறையும் ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்கள். அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், ஆசியப் பகுதியிலுள்ள பல்வேறு நாடுகளும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியிலுள்ள ஜப்பான், தென் கொரியா, வியத்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடனான தங்களது நட்புறவையும், கூட்டுறவையும் அதிகரித்து வருவதன் காரணம் அதுதான்.