தங்கமே தங்கம்! | தங்கக் கடத்தலை ஒழிப்பது பற்றிய தலையங்கம்

 இந்தியாவின் இறையாண்மையையும், பொருளாதாரத்தையும் மிக அதிகமாக பாதிக்கும் தங்கக் கடத்தல் குறித்து, மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாமலே இருந்து வருவது வியப்பை ஏற்படுத்துகிறது. தங்கக் கடத்தலுக்கான வாய்ப்பையும் அவசியத்தையும் மத்திய அரசே ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதுதான் அதைவிட மிகப் பெரிய அவலம்.
 கடந்த 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கச் சந்தை இந்தியாவில் மையம் கொண்டிருப்பதை வரலாறு உணர்த்துகிறது. பிளினியின் ரோமாபுரிப் பதிவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்திய வணிகர்கள் பட்டு, மஸ்லின் துணி, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை திரவியப் பொருள்களை வழங்கி பண்ட மாற்று முறையில் ரோமாபுரியிலிருந்து தங்கத்தை எடுத்துச் செல்வதால், அந்த சாம்ராஜ்யம் பலவீனப்படுவதாக பிளினியின் குறிப்பு காணப்படுகிறது. ரோமாபுரி சாம்ராஜ்யம் திவாலாகாமல் இருப்பதற்காக இந்திய இறக்குமதிகளுக்கு தடை விதித்து, ரோமாபுரி பெண்டிர் இந்திய பட்டுத் துணிகளையும் வாசனை திரவியங்களையும் வாங்குவதை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன என்று அவர் பதிவு செய்கிறார்.
 இன்று வரை உலக அளவில் மிக அதிகமாக தங்கம் வாங்கி சேமிக்கும் நாடுகளாக இந்தியாவும், சீனாவும் திகழ்கின்றன. நமது சமூக, சமய, பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக 2,500 ஆண்டுகளுக்கும் மேலாகத் திகழும் தங்கத்தின் பயன்பாட்டை நிறுத்திவிட முடியாது. அதுமட்டுமல்லாமல், தங்க வணிகம் இந்தியாவை வளமைப்படுத்தியிருக்கிறதே தவிர, ஏழ்மைப்படுத்தவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். அதற்கேற்றாற்போல, சட்டங்களை இயற்றி தங்கத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
 கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் தங்கம், நமது நாணய மதிப்பைக் கடுமையாக பாதிக்கிறது. வெளிநாடுகளிலிருந்து டாலர் அந்நியச் செலாவணியில் வாங்கப்படும் தங்கம், இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. சட்டவிரோத ஹவாலா வழியில் கணக்கில் காட்டப்படாத பணம் வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தங்கக் கடத்தலுக்கான மூலதனம் உருவாக்கப்படுகிறது. அதனால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது.
 ஒரு டன் தங்கத்தின் விலை சுமார் ரூ.500 கோடி. ஆண்டுதோறும் 100 முதல் 200 டன் வரை தங்கம் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது எனும்போது ஏறத்தாழ ரூ.50,000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கடத்தல் வர்த்தகத்தில் புரள்கிறது. இந்தக் கடத்தலை தடுக்காமல் போனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் மேலும் பலவீனமாகிக்கொண்டே போகும்.
 தங்கம் கடத்துவது என்பது மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக இருப்பதால், அதைக் கடத்துவதற்காக இந்திய எல்லையின் பல்வேறு பகுதிகளில் கடத்தல் வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முன்பெல்லாம் தென்னிந்தியக் கடற்கரை வழியாகத்தான் இந்தியாவுக்குள் தங்கக் கட்டிகள் பெரும்பாலும் கடத்தப்பட்டு வந்தன. மியான்மருடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தென்னிந்தியக் கடற்கரைகளை பயன்படுத்துவதை கடத்தல்காரர்கள் பெரும்பாலும் நிறுத்திவிட்டனர். இப்போது இந்தியாவின் கிழக்கு பகுதி, வடகிழக்கு பகுதி, நேபாளம், பூடான் ஆகியவற்றின் வழியேதான் கடத்தல் தொழில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 தங்கம் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கடத்தல் வாயில்களின் மூலமாக போதை மருந்து, மின்னணுப் பொருள்கள் மட்டுமல்லாமல், ஆயுதங்களும் கடத்தப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் கடத்தல் தொழிலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. இந்திய ராணுவத்தினரால் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பகைத்துக்கொள்ள முடியாது என்பதால், காடுகளின் மூலம் மும்முரமாகவே கடத்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், தங்கம் கடத்துவது லாபகரமான தொழிலாக இருப்பதற்கு முடிவு கட்டியாக வேண்டும்.
 கூடுதல் வரிகள் உள்பட தங்கம் இறக்குமதிக்கான வரி இப்போது 16.36%. கடத்தல் மூலம் 16.36% லாபம் கிடைப்பதால்தான் இதில் கடத்தல்காரர்கள் ஈடுபடுகிறார்கள். அதனால், தங்கம் இறக்குமதிக்கான இந்தக் கலால் வரி உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும்.
 தங்கம் இறக்குமதி மீதான வரியைக் குறைக்கும்போது அரசுக்கு ரூ.25,000 கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்பது என்னவோ உண்மை. அதேநேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவும், பாதுகாப்புக்கு இதனால் ஏற்படும் அச்சுறுத்தலும், போதைப் பொருள்களால் உருவாகும் சமூக பாதிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால் அதை ஒரு இழப்பாக நாம் கருத முடியாது.
 தங்கம் மட்டுமல்லாமல், தீவிரவாத இயக்கங்களுக்கான ஆயுதங்களும் இளைய தலைமுறையை சீரழிக்கும் போதைப் பொருள்களும் தங்கத்துடன் இந்தியாவுக்குள் கடத்தல் மூலம் நுழைகின்றன.
 குறைந்த அளவு ஜிஎஸ்டி மூலம் தங்கம் பொதுவெளியில் விற்பனைக்கு வருவதை அரசு அனுமதிக்கும்போது, கலால் வரியில் இழந்த வருவாயை ஈடுகட்டிவிட முடியும். பெரும்பாலான கள்ளத் தங்கம் பொதுச்சந்தைக்கு வந்துவிடும். குறைந்த கலால் வரியும், ஜிஎஸ்டி-யும் சர்வதேசப் பயணிகளை ஆபரணங்களாகவோ, தங்க நாணயங்களாகவோ, தங்கக் கட்டிகளாகவோ இந்தியாவிலேயே சட்டபூர்வமாக தங்கம் வாங்கி சேமிப்பதை ஊக்கப்படுத்தும்.
 தேவையில்லாத சட்டங்களை அகற்றி, கலால் வரியைக் குறைத்து இந்தியாவை சர்வதேச தங்கச் சந்தையாக பழைய காலத்தைப்போல மாற்ற வேண்டும். அதன் மூலம் கள்ளக்கடத்தலை ஒழித்து, நமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com