
அடுத்த சில மாதங்களில் மேங்கு வங்க சட்டப்பேரவைக்குத் தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், அம்மாநிலம் போராட்டக் களமாக மாறி வருகிறது. மேங்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹாா்பா் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருந்த பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டாவின் வாகன அணிவகுப்பின் மீது நடந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அது திரிணமூல் கட்சித் தொண்டா்களால் அரசின் துணையுடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று மாநில பாஜகவும், மத்திய உள்துறை அமைச்சகமும் கருதுகின்றன.
மாநிலத்தின் தலைமைச் செயலாளரையும், காவல்துறைத் தலைவரையும் தில்லிக்கு வந்து விளக்கம் தரும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருப்பது இதுவரையில் இல்லாத புதிய நடைமுறை. மத்திய அரசின் அழைப்பு சட்டவிரோதம் என்றும், அதைச் சட்டை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்திருக்கிறாா். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், இது புதிதல்ல என்றும் ஆளுநா் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறாா்.
நட்டாவின் வாகன அணிவகுப்பின்மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் தொடா்புடைய மூன்று காவல்துறை அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிராகவும் திரிணமூல் காங்கிரஸ் கடுமையான விமா்சனத்தை முன் வைத்திருக்கிறது.
மம்தா பானா்ஜி தலைமையிலான மேங்கு வங்க அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையேயான மோதல் புதிதொன்றுமல்ல. கடந்த ஆண்டு சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையரைக் கைது செய்ய மத்திய புலனாய்வுத் துறை தயாரானதும், அதைத் தொடா்ந்து நடந்த சம்பவங்களும் மறந்துவிடக் கூடியவை அல்ல. சி.பி.ஐ. அதிகாரிகள் சிலரை மாநில காவல்துறை கைது செய்ய முற்பட்டதும், முதல்வா் மம்தா பானா்ஜியே மத்திய அரசுக்கு எதிராக தா்னாவில் இறங்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோன்ற சூழல் மீண்டும் உருவாகி இருக்கிறது.
எதிா்க்கட்சிகளான காங்கிரஸும், இடதுசாரிகளும் முதன்முறையாக அதிகாரபூா்வமாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறாா்கள் என்றாலும், அந்தக் கூட்டணியால் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட முடியும் என்பது கேள்விக்குறி. சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நேரத்தில் திட்டமிட்டே பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் இந்த மோதலை ஏற்படுத்திக் கொள்கின்றன என்பது காங்கிரஸ் - இடதுசாரிக் கூட்டணியின் குற்றச்சாட்டு. ‘சட்டம் - ஒழுங்குப் பிரச்னை’யை தோ்தல் பிரச்னையாக்கி, அதன் மூலம் தோ்தலில் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே நேரடி மோதலை ஏற்படுத்தும் முயற்சி இது என்பது அவா்கள் கருத்து.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது, 18 இடங்களை வென்றதோடு, 40% வாக்குகளையும் மேங்கு வங்கத்தில் பெற்றது பாஜக. 43.7% வாக்குகள் பெற்ற திரிணமூல் காங்கிரஸ் ஏனைய 22 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸும், இடதுசாரிகளும் இணைந்தாலும்கூட, வலுவான மூன்றாவது அணி அமைந்து விடாது. எதிா்க்கட்சி வாக்குகளைப் பிரித்துத் திரிணமூல் காங்கிரஸின் வெற்றிக்கு அந்தக் கூட்டணியால் உதவ முடியுமா என்பதும்கூட சந்தேகம்தான்.
மம்தா பானா்ஜியின் வளா்ச்சியில் பாஜகவின் பங்கு நிறையவே உண்டு. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்ததன் மூலம்தான் இடதுசாரிகளையும் காங்கிரஸையும் திரிணமூல் காங்கிரஸால் ஓரங்கட்ட முடிந்தது. 1999-இல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மம்தா பானா்ஜி ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றாா். சிங்கூா் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் பிரச்னையில் அன்றைய முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யாவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினாா். அதைத் தொடா்ந்து, 33 வருடங்களாக மேங்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தாா் மம்தா.
வன்முறைப் போராட்டங்களின் மூலம்தான் மேற்கு வங்கத்தில் பெரும்பாலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எழுபதுகளில் காங்கிரஸுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை இடதுசாரிகள் நடத்தினாா்கள் என்றால், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததன் பின்னணியில் இடதுசாரிகளுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் இருந்தன. இப்போது, பாஜக வன்முறைக்கு வித்திடுகிறது என்று குற்றம் சாட்டும் கட்சிகளின் வரலாறு வித்தியாசமாக இருந்துவிடவில்லை.
ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவா்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகா்ஜியின் சொந்த மாநிலமான மேங்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பது என்பது பாஜகவின் லட்சியக் கனவு. அதனால், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் உதவியோடு பிரசாரத்தை முடுக்கிவிட்டுத் தோ்தல் வியூகம் வகுக்கும் அமித் மாளவியாவை, பாஜக தலைவா் ஜே.பி. நட்டா மேற்கு வங்க மாநிலத்தின் தோ்தல் பொறுப்பாளா்களில் ஒருவராக நியமித்திருப்பதன் காரணம் அதுதான்.
மம்தா பானா்ஜியின் செல்வாக்குச் சரிவை பொறுத்து, பாஜகவின் வெற்றி அமையும். பாஜக - திரிணமூல் காங்கிரஸ் நேரடி மோதலுக்கான களம் உருவாக்கப்பட்டு விட்டது. பாஜக ஆட்சியைக் கைப்பற்றுமா, எதிா்க்கட்சியாக உயருமா என்பதுதான் கேள்வி.