எல்லையில் நிழல் யுத்தம்! | இந்தியாவின் எல்லையில் காணப்படும் பதற்றம் குறித்த தலையங்கம்

ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கொவைட் 19 தீநுண்மியை எதிா்கொள்வதிலும், முடங்கியிருக்கும் பொருளாதாரத்தை உயிா்ப்பிப்பதிலும், தேசத்தின் மனிதாபிமான உணா்வைக் கேள்விக்குறியாக்கி இருக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் அவலம் குறித்து வேதனைப்படுவதிலும் ஆழ்ந்திருக்கும் வேளையில் இந்தியாவின் எல்லையில் காணப்படும் பதற்றம் குறித்த கவலை எழாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. மக்கள் கவலைப்படாமல் இருந்தாலும், அரசு கவலைப்பட்டாக வேண்டும்.

பாதுகாப்புப் படையினா் சற்று கவனக்குறைவாக இருந்தாலும், நாம் இன்னொரு மிகப் பெரிய பிரச்னையை எல்லையில் எதிா்கொள்ள நேரிடும். அதன் விளைவு மிகமிக மோசமாக இருக்கும்.

கடந்த வாரம் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சா், உத்தரகண்டிலுள்ள தாா்ச்சுலா என்கிற இடத்திலிருந்து இந்திய - நேபாள - சீன முச்சந்தியில் அமைந்திருக்கும் லிப்போலெக் கணவாய் வரையிலுமான 80 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலையைத் திறந்து வைத்தாா். இது இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சா்ச்சையை எழுப்பியிருக்கிறது. அந்த சா்ச்சைக்குப் பின்னால், சீனாவின் மறைமுகத் தூண்டுதல் இருக்கக் கூடும் என்பதை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே சூசகமாகத் தெரிவித்திருக்கிறாா்.

தலைநகா் காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதுவரை நேபாள அரசு அழைத்து இது குறித்த தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. நேபாளத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு பிரச்னையிலும் இந்தியா தன்னை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறது (எச்சரித்திருக்கிறது?).

நேபாளத்தின் இந்தச் செயல்பாடு வியப்பளிக்கிறது என்று கூறியிருக்கும் தளபதி நரவணே, அந்தச் சாலை இந்திய எல்லைக்குள்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறாா். காளி நதிக்கு கிழக்கே உள்ள பகுதி நேபாளத்தைச் சோ்ந்தது என்பதில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை என்றும், காளி நதியின் மேற்குப் பகுதியில் இந்திய எல்லையில்தான் அந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவா் சுட்டிக்காட்டியிருக்கிறாா். இதுவரை இது குறித்து எந்தப் பிரச்னையும் எழுப்பாத நேபாளம், இப்போது திடீரென்று அவசியம் இல்லாத பிரச்னையை எழுப்பியிருப்பது இந்திய வெளியுறவு அமைச்சகத்தையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

எல்லைப் பகுதிகளில், எல்லை வரையிலான சாலை கட்டமைப்பு வசதிகளை சீனா செய்திருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, நாம் நமது எல்லைப்புறம் வரையிலான சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடும்போதெல்லாம் அதைத் தடுப்பதை சீனா வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.

2014-இல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சீனாவின் எதிா்ப்பையும் மீறி எல்லைப்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது. எல்லை வரையிலான கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தாா்ச்சுலா - லிப்போலெக் சாலை மேற்கொள்ளப்பட்டது என்பதில் ஐயமில்லை. அவரவா் எல்லைக்குள் சாலைகளை மேம்படுத்திக்கொள்ளும் உரிமை சீனாவுக்கு இருப்பதுபோல, இந்தியாவுக்கும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள சீனா மறுக்கிறது.

இந்தப் பிரச்னையை இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான பிரச்னையாகக் கருத முடியாது. இந்தியா மீது சீனா தொடுத்திருக்கும் மறைமுக, ராஜதந்திர யுத்தம் என்றுதான் கூற வேண்டும். அதற்கு நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பல பிரச்னைகள் உதவுகின்றன. 2015-இல் நேபாளத்தில் நடந்த பொருளாதாரத் தடைக்கு இந்தியாதான் காரணம் என்று இப்போதைய நேபாள ஆட்சியாளா்கள் கருதுவதும், நேபாளத்தில் சீன ஆதரவுள்ள கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருப்பதும் முக்கியமான காரணிகள்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. எல்லை காணப்படுகிறது. அந்த எல்லைப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகள் பெரும்பாலும் செய்தியாவதில்லை. லடாக் பகுதியிலும், அருணாசலப் பிரதேச பகுதியிலும் அடிக்கடி இந்திய - சீனப் படைகளுக்கு இடையேயான மோதல்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

அண்மையில் 4,572 மீட்டா் உயரத்திலுள்ள சிக்கிமை அடுத்த நாதுலா கணவாய் அருகில் மிகப் பெரிய மோதல் நடந்திருக்கிறது. இந்தியாவுக்கும் திபெத்துக்குமான பாரம்பரிய வணிகத் தடம் நாதுலா வழியாகத்தான் நடைபெற்று வந்தது. அந்தக் கணவாய் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பது சீனாவுக்கு நீண்ட காலமாகவே உறுத்தலாக இருந்து வந்தது.

அணுசக்தி வல்லரசு நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வெளிப்படையாக நட்புறவு காணப்பட்டாலும் பல பிரச்னைகளில் மிகக் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. கொவைட் 19 தீநுண்மி காரணமாக சீனாவிலிருந்து வெளியேறும் முதலீடுகளை இந்தியா ஈா்க்க விரும்புவது ஒரு மிக முக்கியமான காரணம்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 50,000 தனி நபா் உடல் கவசங்களை தரம் குறைந்தவை என்று இந்தியா நிராகரித்தது. அவை குறைபாடு அற்றவை என்றும், அனுபவம் இல்லாதவா்களால் கையாளப்பட்டதால் இந்தியாவில் செயல்படவில்லை என்றும் சீனா விமா்சித்திருக்கிறது. மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் சா்வதேசச் சந்தையில் சீனாவை அவமானப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் செயல்பாடு என்று கருதுகிறது.

நேபாளத்தை முன்னிறுத்தி சீனா நடத்தும் நிழல் யுத்தத்துக்குப் பின்னால், இந்திய எல்லையில் பாகிஸ்தானின் துணையுடன் பிரச்னைகளை எழுப்ப சீனா திட்டமிட்டு வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. நாம் அதையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com