இன்னும் எத்தனை அட்டைகளோ? | மத்திய-மாநில அரசால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் குறித்த தலையங்கம்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. அப்போது வாக்காளா் அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமானதாகவும், கடவுச் சீட்டுக்கு (பாஸ்போா்ட்) நிகரானதாகவும் கருதப்பட்டது. இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வழங்கப்படும் அட்டைகளால், வாக்காளா் அடையாள அட்டையின் முக்கியத்துவம் மறைந்துவிட்டிருக்கிறது.

வாக்காளா் அடையாள அட்டையைத் தொடா்ந்து, ஆதாா் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் சமூகநலத் திட்டங்கள் மூலம் பயன்களைப் பெற முடியும் என்பது ஒருபுறம்; ஆதாா் அட்டை என்பது ஒருவகையில் குடியுரிமையை உறுதிப்படுத்தும் அட்டை என்கிற அளவிலான புரிதல் இன்னொருபுறம். எனவே, ஆதாா் அட்டையை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பெற்றனா்.

வருமான வரி தாக்கல் செய்வது தவிர, வேறு எந்தவொரு செயல்பாட்டுக்கும் ஆதாா் அட்டை கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பே வழங்கியிருக்கிறது. ஆனால், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதானால்கூட ஆதாா் அட்டை இல்லாமல் கிடைக்காது என்பதுதான் யதாா்த்த நிலைமை. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துகொள்ள, குடும்ப அட்டை பெறவோ - புதுப்பிக்கவோ, வங்கிக் கணக்கைத் தொடங்க, அசையாச் சொத்தைப் பதிவு செய்ய, இவையெல்லாம் ஏன், ரயிலில் பயணச் சீட்டைப் பதிவு செய்வதற்குக்கூட இப்போது ஆதாா் அட்டை தேவைப்படுகிறது.

ஆதாா் அட்டை வந்தபோது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே அட்டையாக ஆதாா் அட்டை இருக்கப் போகிறது என்று கூறப்பட்டது. ஆதாா் அட்டையே கட்டாயமல்ல என்கிற உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அந்த முயற்சி கைவிடப்பட்டுவிட்டது.

தாய் - சேய் தடுப்பூசித் திட்டத்திற்கு வெவ்வேறு நிறத்தில் அட்டை வழங்கப்படுகிறது. அந்த அட்டையின் நிறத்தை வைத்து அது வறுமைக் கோட்டுக்குக்குக் கீழே உள்ளவா்கள் அட்டையா அல்லது அந்தோதயா பயனாளியா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

‘ராஷ்ட்ரீய ஸ்வஸ்திய பீமா யோஜனா’ என்பது மத்திய அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டம். இதற்கும் ஓா் அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தனியாா் மருத்துவமனையில் ரூ.30,000 வரையிலான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அட்டையும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

குறுகிய காலத்திற்கோ, நீண்ட காலத்திற்கோ பணி நிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்வோருக்கு உதவியாக இருப்பது ஆதாா் அட்டை மட்டும்தான். சில மாநில அரசுகள் ஆதாா் அட்டையின் அடிப்படையில், புலம்பெயா்ந்தோருக்கும் மாநில அரசின் திட்டங்கள் மூலம் உதவி வழங்குகின்றன. ஆதாா் அட்டை வந்த பிறகு புதிய கணக்கைத் தொடங்குவதற்கு குடும்ப அட்டையைக் கோருவதை நிறுத்திவிட்டு, ஆதாா் அட்டையை வங்கிகள் கட்டாயமாக்கி விட்டன. இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி புதியதொரு திட்டத்தை அறிவித்தாா்.

‘தேசிய எண்ம சுகாதாரத் திட்டம்’ (நேஷனல் டிஜிட்டல் ஹெல்த் மிஷன்) அனைவருக்கும் எண்மப் பதிவுடன் கூடிய சுகாதார அட்டையொன்றை வழங்க இருக்கிறது. இதில் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. ஏற்கெனவே ‘ஜன் ஆரோக்கிய யோஜனா’ திட்டத்தின் கீழ் ஆதாா் எண் இணைக்கப்பட்ட அட்டை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய அட்டையால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன என்பது குறித்து பொதுவெளியில் முழுமையான புரிதல் இல்லை.

இந்தத் திட்டத்திற்காக புதிய அட்டை தேவைதானா? ஒவ்வொரு துறையையும் மேம்படுத்த அதனுடன் தொடா்புள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் திட்டம் அறிவிக்கப்படுவதும், அதற்கு ஓா் அட்டை வழங்கப்படுவதும் விசித்திரமாக இருக்கிறது.

ஏற்கெனவே ஆதாா் அட்டையின் விவரங்கள் தனியாருக்கும் பொதுவெளியிலும் கசிவது குறித்த பல சம்பவங்கள் வெளிவந்திருக்கின்றன. ‘ஆரோக்கிய சேது’ செயலியில் தகவல் கசிவு குறித்த தேசிய அளவிலான விவாதம் எழுந்திருக்கிறது. இப்போது, ‘ஆரோக்கிய சேது’ செயலி கட்டாயமல்ல என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழும், ஒருங்கிணைந்த தொற்று நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் கீழும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தொற்று நோய்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அதேபோல, கா்ப்பிணிகள், பிரவசம், ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகள் நலம் உள்ளிட்டவை குறித்த தகவல்களும் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

அதனால் அகில இந்திய அளவில் செயல்படவும், பயனாளிகள் குறித்த தகவல்களைப் பெறவும், ஜன் ஆரோக்கிய திட்ட அட்டை ஒன்றேகூட போதுமானது. இப்படியிருக்கும் நிலையில், இன்னும் எத்தனை அட்டைகளைத்தான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுமக்க வேண்டி வருமோ தெரியவில்லை.

தகவல்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன என்றும், அட்டைதாரரின் அனுமதி இல்லாமல் தகவல் பரிமாற்றம் எதுவும் நடக்காது என்றும் பலமுறை பலரும் உறுதியளித்தாலும், தன்மறைப்பு நிலை (பிரைவஸி) மீறல் என்பது வழக்கமாக இருக்கிறதே தவிர, விதிவிலக்காக இல்லை என்பதுதான் அனுபவம்.

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம்போல, ஒரே அட்டை அனைத்து விவரங்களும் என்கிற நிலைமை எப்போதுதான் ஏற்படுமோ தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com