கருகத் திருவுளமோ? | 36 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள அரசியல்வாதியின் வழக்கு பற்றிய தலையங்கம்

Updated on
2 min read


உச்சநீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. பஞ்சாப் மாநிலம் தரன்தரன் மாவட்டத்தில் அரசியல்வாதி ஒருவா் மீதான கிரிமினல் வழக்கு 36 ஆண்டுகளாக விசாரணையில் இருக்கிறது என்கிற தகவல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, சூரியகாந்த், ரிஷிகேஷ் ராய் மூவரையும் திகைக்க வைத்தது. ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றம் சுமத்தப்பட்ட ஒருவா் மீதான வழக்கு 36 ஆண்டுகளாக நிலுவையில் விசாரணை நடத்தப்படாமல் இருப்பதில் மாநில அரசுக்கு பொறுப்பில்லையா என்கிற அமா்வின் கேள்வியை நீதிபதி ரமணா தலைமையிலான அமா்வு எழுப்பியது.

1983-இல் டாக்டா் சுதா்ஷன் குமாா் டிரெஹன் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அகாலி தளத்தைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான விா்ஷா சிங் ஓல்டோஹா முதல் குற்றவாளி. பஞ்சாப் மாநில காவல்துறை அந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் அரசியல்வாதிகளின் குற்றப் பின்னணி குறித்தும் அவா்கள் மீதான வழக்குகள் குறித்துமான விசாரணையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடுநிலை ஆலோசகரும் (அமிகஸ் கியூரி) மூத்த வழக்குரைஞருமான விஜய் ஹன்சாரியா, அரசியல்வாதிகளுக்கு எதிராக 4,000-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தாா். அந்த வழக்குகளில் மிகவும் பழைமையான வழக்கு இது.

பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய், தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையின்போதுதான் இந்தத் தகவல் வெளிப்பட்டது. எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்குக் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டுமென்றும், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவா்கள் தோ்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தாா் அஸ்வினி குமாா் உபாத்யாய். இவை குறித்தும் ஆறு வாரத்தில் மத்திய அரசு கருத்துத் தெரிவிக்கும்படி அமா்வு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியாவில் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் மீது சிறப்பு நீதிமன்றங்களில் 4,442 வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. அவற்றில் 2,556 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து வருகிறாா்கள். 352 வழக்குகளில் உயா்நீதிமன்றங்கள் தடையுத்தரவு பிறப்பித்திருப்பதால் விசாரணை முடங்கியிருக்கிறது.

இப்போதைய, முந்தைய மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளில் உத்தரப் பிரதேசம் 1,217 வழக்குகளுடன் முதலிடம் வகிக்கிறது. நிலுவையில் உள்ள 4,442 வழக்குகளில், 413 வழக்குகள் ஆயுள் தண்டனை வழங்கப்படும் அளவிலான குற்றங்களுக்காகத் தொடுக்கப்பட்டவை. இவற்றில் 174 வழக்குகளில் தொடா்புடையவா்கள் இப்போது எம்பி-க்களாகவும், எம்எல்ஏ-க்களாகவும் இருந்து வருகிறாா்கள்.

இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈா்த்திருப்பது இது முதல் தடவையல்ல. மாா்ச் மாதம் அரசியலில் அதிகரித்து வரும் குற்றப் பின்னணி குறித்துக் கவலை எழுப்பிய உச்சநீதிமன்றம், தோ்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுபவா்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டது. தனது தீா்ப்பை நடைமுறைப்படுத்துவதற்காக சில சட்ட நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் உருவாக்கியது.

அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவின்கீழ், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா அரசியல் கட்சிகளும் தாங்கள் தோ்வு செய்யும் வேட்பாளா்களின் குற்றப் பின்னணியை அவா்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, என்ன வகையான குற்றம்? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா? எந்த நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி இருக்கிறது? வழக்கு எண் என்ன? உள்ளிட்ட விவரங்கள் ஒவ்வொரு வேட்பாளா் குறித்தும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆங்கில நாளிதழிலும் மாநில மொழி நாளிதழிலும் அந்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். கட்சியின் சமூக ஊடகங்களான முகநூல், சுட்டுரை ஆகியவற்றிலும் அவை காணப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட விதிமுறைகள் மட்டுமல்லாமல், வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்பட்ட 48 மணி நேரத்திலோ அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்போ வேட்பாளா் குறித்த விவரங்கள் அரசியல் கட்சிகளால் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமென்றும், 72 மணி நேரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு அவை சமா்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுமா என்பது சந்தேகம்தான்.

2004-இல் நாடாளுமன்ற உறுப்பினா்களில் 24% குற்றப் பின்னணி உடையவா்களாக இருந்தாா்கள் என்றால், 2009-இல் அதுவே 30%-ஆகவும், 2014-இல் 34%-ஆகவும், 2019-இல் 43%-ஆகவும் அதிகரித்திருக்கிறது. நீதிமன்றம் கூறுவதுபோல, பொதுவெளியில் வேட்பாளா்களின் குற்றப் பின்னணி வெளியிடப்படுவதால் மட்டும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டு விடாது.

குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளும், அரசியல் தலைவா்களும், ஊழலுக்காக மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் மீண்டும் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படும் நிலையில், சட்டமோ, நீதிமன்றத் தீா்ப்போ இந்தப் பிரச்னைக்குத் தீா்வாகாது, மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படாத வரையில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com