வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உண்மையை மறைப்பானேன்? | உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்கள் குறித்த தலையங்கம்

News image
Updated On :21 ஜூன் 2021, 2:03 pm

ஆசிரியர்


சர்வதேச அளவிலான உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரமொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 89 நாடுகளில் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புள்ளிவிவரப்படி, 89 நாடுகளின் அதிகாரபூர்வ மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையைவிட, உண்மையான உயிரிழப்பு 1.6 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இன்னொரு புள்ளிவிவரம், மே 3, 2021 வரையிலான கணக்கெடுப்பில் சர்வதேச அளவில் 69.3 லட்சம் பேர் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. இது பல்வேறு நாடுகளின் மொத்த உயிரிழப்பான 32.4 லட்சத்தைவிட இரு மடங்கு அதிகம். இதிலிருந்து உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்களைப் பல்வேறு நாடுகள் துல்லியமாகக் கணக்கெடுப்பதில்லை அல்லது தெரிவிப்பதில்லை என்று தெரிகிறது. 

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மக்கள் பீதியடைந்துவிடக் கூடாது என்பதற்காக, உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவது என்பது நீண்டகால நிர்வாக நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் அமைப்பின் மே 3-ஆம் தேதி புள்ளிவிவரப்படி, உலகின் மொத்த உயிரிழப்புகளில் 10%, அதாவது 6,54,395 பேர் என்பதுதான் இந்தியாவின் உயிரிழப்பு எண்ணிக்கை. அரசு புள்ளிவிவரத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம். 

ஏப்ரல் 16-ஆம் தேதி குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 78. அதே நாளில் கொவைட் 19 விதிமுறைகளுக்கு உள்பட்டு தகனம் செய்யப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 689. 

ஒடிஸா மாநிலத்தின் உயிரிழப்பு விகிதம் சுமார் 0.4%. கேரளம், மிஜோரம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மிகக் குறைவான உயிரிழப்பு ஒடிஸாவில் காட்டப்படுகிறது. ஒடிஸாவில் தினசரி உயிரிழப்பாக அதிகபட்சமாகக் காட்டப்பட்டிருப்பது கடந்த மாதம் 20-ஆம் தேதி 25 உயிரிழப்புகள். கடந்த ஆண்டு எண்ணிக்கையையும் சேர்த்தாலும்கூட ஒடிஸாவில் இதுவரையிலான மொத்த கொவைட் 19 உயிரிழப்பு 2,403 தான். 

இரண்டாவது அலையில், 10 நாள்கள் முன்பு வரையிலான உயிரிழப்பு எண்ணிக்கை 485. தினசரி தொடர்ந்து 10,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில், ஒடிஸா அரசின் உயிரிழப்புப் புள்ளிவிவரம் ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் எழுப்புகிறது. 

மயானங்களில் இரவு - பகல் என்றில்லாமல் சடலங்கள் எரியூட்டப்படும் நிலையில், அரசு கணக்கெடுப்பின்  உண்மைத்தன்மை கேள்விக்குறியாகிறது. இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், அரசின் அறிக்கைகள் தரும் எண்ணிக்கைகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலமும் இந்தப் போக்குக்கு விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை. 

கடந்த ஆண்டு தமிழ்நாடு, தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இணை நோய் உள்ளவர்களின் உயிரிழப்பு கொவைட் 19 பாதிப்பு உயிரிழப்பாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு அந்த குறைபாடு சரி செய்யப்பட்டது. 

இந்தியாவில் மூன்றில் இரண்டு உயிரிழப்புகள் பாதிக்கப்பட்டோரின் வீடுகளில் ஏற்படுகின்றன. 14% உயிரிழப்புகள் பதிவாவதில்லை. மாநிலங்களுக்கு உள்ளேயே எத்தனை உயிரிழப்புகள் உண்மையாக நிகழ்ந்தன என்பது குறித்த பதிவுகளும், அவற்றில் கொவைட் 19 நோய்த்தொற்று உயிரிழப்புகள் எத்தனை என்பதும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு தொகுக்கப்படுவதில்லை என்பதுதான் நிஜ நிலைமை. தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டக் கூடாது என்றும், உண்மை நிலையைச் சொன்னால்தான் மக்களுக்கு பயத்துடன் விழிப்புணர்வும் ஏற்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது சரியான புரிதல். தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என்றாலும், இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 0.8%-கூடத்  தாண்டாத இறப்பு விகிதம், தற்போது ஏறத்தாழ 2%-ஆக உயர்ந்திருக்கிறது. 

கடந்த 10 நாள்களில் பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 25% குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த 21-ஆம்  தேதி நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் 467  என்றால், மே 31-ஆம் தேதி அந்த எண்ணிக்கை 478. இந்த எண்ணிக்கைகூட சரியான புள்ளிவிவரம்தானா என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கெடுப்பதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட ஒருவர் ஓரளவுக்குக் குணமாகி 14 நாள்களுக்குப் பிறகு இறக்கும்போது, அவரது சளி மாதிரியைப் பரிசோதித்தால் அதில் தொற்று காணப்படுவதில்லை. அதனால் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர் என்கிற கணக்கில் அவரை சேர்த்துக் கொள்வதில்லை. 

நீண்டநாள் சிகிச்சைபெற்று கொள்ளை நோய்த்தொற்றின் எதிர்விளைவுகளாலும், குறைந்துவிட்ட எதிர்ப்பு சக்தியாலும் அவர்களது இணை நோய்கள் காரணமாக உயிரிழப்போர் பலர். அவர்களது இறப்புகளும் கொவைட் 19 உயிரிழப்புகளாகக் கணக்கிடப்படுவதில்லை. 

மத்திய - மாநில அரசுகள் சரியான விவரங்களை வெளியிடுவது, அரசின் மீதான நம்பிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மருத்துவத்துறையினரும், நிர்வாகமும் நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை செம்மைப்படுத்தவும் உதவும். புள்ளிவிவரங்கள் பொய் சொன்னாலும், மயானப் புகை உண்மையை உணர்த்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.