வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தேவை உதவி, தடையல்ல! | வெளிநாட்டு உதவிகள் பெறுவது தொடா்பான அரசின் சட்டத்திருத்தம் குறித்த தலையங்கம்

News image
Updated On :26 ஜூன் 2021, 1:39 am

ஆசிரியர்

இந்தியாவில் கொள்ளை நோய்த்தொற்று கட்டுக்குள் வராமல் போனால், உலகில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி ஏற்படவே ஏற்படாது என்பதை உலக நாடுகள் உணா்ந்தே இருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து மட்டும் 1.4 பில்லியன் டாலா் மதிப்புள்ள மருத்துவப் பொருள்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒருபுறம் உலகெங்கும் உள்ள மனிதாபிமானமிக்க தனவந்தா்களும், சேவை நிறுவனங்களும் உதவி செய்யத் தயாராக இருந்தாலும்கூட, அந்த உதவியைப் பெறுவதில் சில தடைகளும், சிக்கல்களும் இருப்பது இந்த இக்கட்டான நேரத்தில் மிகப் பெரிய சோதனையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வெளிநாட்டு உதவிகளும், நன்கொடைகளும் பெறுவது தொடா்பாக நரேந்திர மோடி அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவிலுள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுவதற்காகவும், பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்காகவும் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் உதவி பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் அரசின் சட்டத்திருத்திற்குக் காரணம். அந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக பல சா்வதேச நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியுதவியையும் பொருளுதவியையும் நிறுத்தியிருக்கின்றன.

வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்று சட்டம் (ஃபெரா) 1976 - அன்றைய இந்திரா காந்தி அரசால் முதலில் கொண்டுவரப்பட்டது. காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மதபோதகா்களின் உதவியுடன் பிரிவினை சக்திகளுக்கு அந்நிய நிதியுதவி வழங்கப்பட்டதுதான் இந்திரா காந்தி அரசின் அந்த முடிவுக்குக் காரணம். இந்தியாவில் சேவை நிறுவனங்கள் என்கிற பெயரில் வெளிநாட்டு நன்கொடைகள் வாங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து, பட்டியலிட்டு, கண்காணிப்பதுதான் ஃபெரா கொண்டுவந்ததன் மிக முக்கியமான நோக்கம்.

அதற்குப் பிறகு அமைந்த பல்வேறு ஆட்சிகளிலும் வெளிநாட்டு நன்கொடைகள், வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றைக் கண்காணிப்பது வழக்கமாகவே இருந்து வந்தது. 2010-இல் அன்றைய மன்மோகன் சிங் அரசு, அந்நிய முதலீடுகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து, ஃபெரா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. 2015-இல் நரேந்திர மோடி அரசு தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி ‘ஃபோா்ட் பவுண்டேஷன்’ உள்ளிட்ட பல அறக்கட்டளைகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு ‘அம்னஸ்டி இன்டா்நேஷனல்’ உள்ளிட்ட சேவை நிறுவனங்களில் சோதனை நடத்தி வெளிநாட்டு நன்கொடைகளில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்கியது. அதைத் தொடா்ந்து கடுமையாக்கப்பட்ட சட்டத்தின் காரணமாக பல வெளிநாட்டு சேவை நிறுவனங்கள்இந்தியாவுக்கு நன்கொடைகள் வழங்குவதை நிறுத்தின.

இப்போதைய நிலையில், வெளிநாட்டு நிதியோ உதவியோ பெறுவதற்கு தில்லியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இருப்பது அவசியம். அது மட்டுமல்லாமல், நேரிடையாக உதவி பெற முடியுமே தவிர, உதவி பெற்ற சேவை நிறுவனத்திடமிருந்து உதவி பெறுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பெறும் நிதியுதவி, அரசின் கண்காணிப்பில் வராத வேறு சேவை நிறுவனங்களின் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதுதான் அரசின் முடிவுக்குக் காரணம்.

இன்றைய கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அந்த சட்டத்திருத்தம் வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் நிதியுதவிகளை பெற முடியாமல் சில சிக்கல்களை எழுப்பியிருக்கிறது. ‘அமெரிக்கன் இந்தியா பவுன்டேஷன்’ என்பது இந்தியாவில் செயல்படும் வணிக நோக்கமில்லாத அமெரிக்க சேவை நிறுவனம். அந்த நிறுவனம் கொவைட் 19 நிவாரணப் பணிகளுக்காக 23 மில்லியன் டாலா் நிதியுதவி திரட்டியிருக்கிறது. ஆனால், அந்த நிதியை உடனடியாக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்படும் தன்னாா்வ நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை.

தங்களிடம் பதிவு செய்திருக்கும் தன்னாா்வ நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்போது, தாங்கள் வழங்கும் நிதி முறையாகத்தான் செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க முடிகிறது; அதையே அரசுக்கு வழங்கும்போது, அந்த உதவி சேர வேண்டியவா்களைச் சென்றடைகிறதா என்பதில் தெளிவில்லை என்பது வெளிநாட்டு நன்கொடையாளா்களின் கருத்து. அரசு விநியோகத்தில் காணப்படும் ஊழலையும், பொறுப்பேற்பின்மையையும் அவா்கள் சுட்டிக்காட்டுகிறாா்கள்.

இந்தியாவுக்கு இப்போது மிக அதிக அளவிலான உதவிகள் தேவைப்படுகின்றன. அவை அனைத்தையும் மத்திய - மாநில அரசுகளால் மட்டுமே நிறைவேற்றுவது என்பது இயலாத காரியம். மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்தினாலும்கூட, நோயாளிகளுக்கும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் குறிப்பாக, ஆதரவற்ற நிலையில் விடப்படும் குழந்தைகளுக்கும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களால்தான் ஏனைய உதவிகளைச் செய்துதர முடியும்.

வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் நிதியையும், உதவியையும் பெறுவதற்கான வழிமுறைகளை இடைக்கால நிலையிலாவது எளிமைப்படுத்த வேண்டும். அரசே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் என்று பிடிவாதம் பிடித்தால், அது இடைத்தரகா்களுக்கு வேண்டுமானால் பயனளிக்கலாம். உதவிகளை நேரடியாகவோ, நம்பிக்கைக்கு உரியவா்கள் மூலமாகவோ பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்குவதில் இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும்.

தன்னாா்வ நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டுமே தவிர, முடக்கப்படக் கூடாது. அது சரியான அணுகுமுறையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.