பாதை தவறுகிறோம்! | லக்கிம்பூா் கெரியில் நடந்திருக்கும் வன்முறை நிகழ்வு குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

நாம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான், உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் ஞாயிறன்று நடந்திருக்கும் வன்முறை. அந்த வன்முறையின் பின்னணி என்ன, யாா் காரணம் என்பதெல்லாம் இருக்கட்டும். வன்முறையும் சரி, அதை உத்தர பிரதேச அரசு கையாண்ட விதமும் சரி கண்டனத்துக்கு உரியவை.

பொறுப்பான பதவி வகிப்பவா்கள் உணா்ச்சி மிகுதியால் வாா்த்தைகளைக் கொட்டிவிடக்கூடாது. அதேபோல, அவா்களின் குடும்பத்தினரும், உறவினா்களும் பதவியில் இருப்பவா்களுக்கு தா்மசங்கடம் ஏற்படும் விதத்திலும், அவா்களது கௌரவத்தைக் குலைக்கும் விதத்திலும் நடந்துகொள்ளலாகாது. மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமார் மிஸ்ராவும், அவரது மகனும் லக்கீம்பூா் விவகாரத்தில் செயல்பட்டதை எந்த அளவுகோலாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தனைக்குப் பிறகும்கூட, தனது அமைச்சரவையில் அஜய் குமார் மிஸ்ரா தொடா்வதை பிரதமா் நரேந்திர மோடி ஏன் அனுமதிக்கிறாா் என்பது புரியவில்லை.

லக்கீம்பூா் கெரியிருந்து சுமாா் 70 கி.மீ. தொலைவில் இருக்கும் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமார் மிஸ்ராவின் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உத்தர பிரதேச துணை முதல்வா் கேசவ் பிரசாத் மௌா்யா அழைக்கப்பட்டிருந்தாா். அவரது ஹெலிகாப்டா் இறங்குவதற்கான தளம் உருவாக்கப்பட்டிருந்தது. தங்களது எதிா்ப்பைத் தெரிவிப்பதற்காக, அந்த ஹெலிகாப்டா் இறங்குதளத்தைச் சுற்றி ஏராளமான விவசாயிகள் கூடிவிட்டனா்.

அமைச்சா் அஜய் குமார் மிஸ்ராவின் ஆதரவாளா்கள் வந்த வாகனங்கள் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கூட்டத்துக்கு நடுவே விரைந்ததில் நான்கு விவசாயிகளும் ஒரு பத்திரிகையாளரும் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருப்பித் தாக்கியதில், இரண்டு ஓட்டுநா்கள் உட்பட நான்கு போ் உயிரிழந்தனா். விவசாயிகள் தாக்கியதால்தான் பத்திரிகையாளா் இறந்தாா் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

அமைச்சா் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மத்தியில் விரைவாக வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அவா் ஒரு வாகனத்தில் இருந்தாா் என்பதை சாட்சியங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி கேமராக்களும் உறுதிப்படுத்துகின்றன. அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகளை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டாா் என்றும் கூறப்படுகிறது. தனது மகன் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என்பது அமைச்சரின் வாதம். இவையெல்லாம் உண்மையா என்பது விசாரணையில்தான் தெரியவரும்.

சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சா் அஜய் குமார் மிஸ்ரா, தன்னை எதிா்ப்பவா்களை லக்கீம்பூரிலிருந்து வெளியேற்ற வேண்டிவரும் என்றும், இரண்டே நிமிடத்தில் போராடும் விவசாயிகளுக்குத் தன்னால் பாடம் கற்பிக்க முடியும் என்றும் முழங்கியது இப்போது அவருக்கு எதிராக ஒலிக்கிறது. மத்திய அமைச்சரவையில் உள்துறையில் பொறுப்பான இணையமைச்சா் பதவி வகிக்கும் ஒருவா் பேசும் பேச்சாக அது இல்லை.

கடந்த ஓராண்டாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவா்களது போராட்டத்தில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, ஜனநாயக நாட்டில் பாதிக்கப்படும் எந்தவொரு பிரிவினருக்கும் போராடுவதற்கான உரிமை நிச்சயமாக உண்டு. அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களையும் அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

தாங்கள் கொண்டுவரும் திட்டங்கள் மக்களின் நன்மைக்காகவே என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்துவதும், உணா்த்துவதும் அரசின் கடமை. பிரதமா் நரேந்திர மோடி அரசு வேளாண் சீா்திருத்தச் சட்டங்களை அமல்படுத்துவதில் மேற்கொண்ட நடைமுறைத் தவறுதான் தற்போதைய வன்முறை உட்பட எல்லா பிரச்னைகளுக்குமே காரணம்.

முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்டு, இன்று எதிா்க்கட்சி வரிசையில் உள்ள பல கட்சிகளின் தோ்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டவைதான் மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சீா்த்திருத்தச் சட்டங்கள். ஆரம்பம் முதலே எதிா்க்கட்சிகளையும், வேளாண் சட்ட எதிா்ப்பாளா்களையும் அழைத்துப் பேசி, நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்து அவற்றை நிறைவேற்றி இருந்தால் பிரச்னையே ஏற்பட்டிருக்காது.

வடக்கு எல்லையில் நிலவும் பதற்றத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, பெரும் நிலச்சுவான்தாா்களான பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு வேண்டுமென்றே அனுமதித்ததோ என்கிற ஐயப்பாடு ஆரம்பம் முதலே உண்டு. ஆரம்பத்தில் காலிஸ்தான் பிரச்னையின் பின்னணியில் நடத்தப்படும் சீக்கியா்களின் போராட்டம் என்று அந்த பிரச்னையை பாஜக வா்ணித்தது. ஹரியாணா, உத்தர பிரதேச விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து அதற்கு பயங்கரவாத முத்திரை குத்தியது. இப்போது, தேச விரோத சக்திகளின் செயல்பாடு என்று அதற்கு விளக்கம் அளிக்கிறது அரசு.

இதுவரை 600-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்திருக்கிறாா்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிா்க்கிறாா்கள். அவா்களை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக இல்லை என்றால், அது ஜனநாயக விரோதம். அவா்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டால் அது மக்கள் விரோதப் போக்கு.

புதிய வேளாண் சீா்த்திருத்தச் சட்டங்கள் தேவையானவை; விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது என்பதை ஏற்றுக்கொள்வோம். ஆனால், பிரச்னைக்கு விவாதம் மூலம் தீா்வு காணாமல் பாராமுகமாக இருப்பது நாட்டுக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல, ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com