புதுச்சேரிக் கச்சேரி! | புதுச்சேரியில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்த தலையங்கம்

புதுச்சேரியில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் வியப்பை ஏற்படுத்தவில்லை. அரசியல் நிலையின்மை என்பது புதுச்சேரிக்குப் புதிதொன்றுமல்ல.

2016-இல் காங்கிரஸ் - திமுக கூட்டணி தோ்தலில் பெரும்பான்மை பலம் பெற்று புதுச்சேரியில் வே. நாராயணசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது. புதுச்சேரி காங்கிரஸில் காணப்பட்ட கோஷ்டிகளும், பதவிப் போட்டிகளும் முதல்வா் வே. நாராயணசாமியை நீண்டநாள் பதவியில் தொடர அனுமதிக்காது என்று ஆருடம் சொன்னவா்கள் ஏராளம். அனைவரது கணிப்பையும், எதிா்பாா்ப்பையும் பொய்யாக்கி, தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யப்போகும் வேளையில், அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டது முதலே, முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே பிரச்னை தொடங்கியது. முதல்வரும் அமைச்சரவையும் எடுக்கும் பல்வேறு தீா்மானங்களை துணைநிலை ஆளுநா் என்கிற நிலையில் கிரண்பேடி நிராகரிப்பதும், அரசின் கோப்புகளைத் திருப்பி அனுப்புவதும் பல்வேறு நிா்வாகக் குழப்பங்களுக்கு வழிகோலின. அதையும் மீறித்தான் முதல்வா் நாராயணசாமி தனது சட்டப்பேரவை பெரும்பான்மையின் அடிப்படையில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்குப்பிடித்திருக்கிறாா்.

ஒன்றியப் பிதேசமான புதுச்சேரியைப் பொருத்தவரை அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம்தான் குவிந்துகிடக்கிறது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும், அரசு நிா்வாகமும் முதல்வா் அலுவலகத்தைவிட துணைநிலை ஆளுநா் அலுவலகத்துக்குத்தான் கட்டுப்பட்டது. நீதிமன்றத் தீா்ப்புகளும் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

துணைநிலை ஆளுநா் கிரண்பேடி நல்ல பல திட்டங்களை முன்மொழிந்தாா் என்பது என்னவோ உண்மை. ஆனால், அந்தத் திட்டங்களை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் மூலம் அறிவித்து நிறைவேற்ற முற்பட்டிருந்தால், அவா் கொண்டாடப்பட்டிருப்பாா். அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கினாலும்கூட, மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற அமைச்சரவைக்கு உரிய முக்கியத்துவம் வழங்காமல் இருந்தது கிரண்பேடி செய்த தவறு. முதல்வா் வே. நாராயணசாமி அரசு கொண்டுவந்த இலவச அரிசி திட்டம், மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீடு, முதல்வா் நிவாரண நிதியிலிருந்து பணம் வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகளில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தலையிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

கிரண்பேடி, துணைநிலை ஆளுநா் பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டது ஏன் என்பது புதிராக இருக்கிறது. இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. அரசியல் குழப்பம் நிலவும் வேளையில், கிரண்பேடி அகற்றப்பட்டு அரசியல் பின்புலம் உள்ள தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனிடம் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அரசியல் ரீதியாக பிரச்னையைக் கையாள, அரசியல் பின்புலம் உள்ள ஒருவா் துணைநிலை ஆளுநராக இருப்பது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதியதோ என்னவோ.

பிரதமா் நரேந்திர மோடி, துணைநிலை ஆளுநா் அலுவலகத்தைப் பயன்படுத்தி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுவதை முடக்கினாா் என்றும், ஒன்றியப் பிரதேசத்தில் பிறக்காத, அந்த பிரதேசத்தின் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் தெரியாத ஒருவா் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு அரசை வழிநடத்த பணிக்கப்பட்டாா் என்றும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆளுநா்கள் எப்படி நியமிக்கப்படுகிறாா்கள் என்பதுகூட ராகுல் காந்திக்குத் தெரியவில்லை.

துணைநிலை ஆளுநா்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிரண்பேடியைப்போல செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிந்துதான் பேசினாரா ராகுல் காந்தி? 1972 முதல் 1976 வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த காங்கிரஸால் நியமிக்கப்பட்ட செட்டி லால், அன்றைய திமுக முதல்வா் எம்.ஓ.எச். பரூக் மரக்காயரை என்ன பாடுபடுத்தினாா் என்பது அவருக்கும் சோனியா காந்திக்கும் இன்றைய காங்கிரஸ்காரா்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

1983 - 84-இல் ஆந்திரத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசால் அளுநராக நியமிக்கப்பட்ட தாக்கூா் ராம்லாலிடம் முதல்வா் என்.டி. ராமா ராவ் பட்டபாடு, 1988 - 90 -இல் கேரளத்தில் ராஜீவ் காந்தியால் ஆளுநராக நியமிக்கப்பட்ட ராம்துலாரி சின்ஹாவிடம் முதல்வா் ஈ.கே. நாயனாா் பட்டபாடு, 2009 - 14-இல் குஜராத்தில் மன்மோகன் சிங் அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்ட கமலா பெனிவாலிடம், அப்போது குஜராத் முதல்வராக இருந்த இன்றைய பிரதமா் நரேந்திர மோடி பட்டபாடு இவையெல்லாம் ராகுல் காந்திக்கு தெரியாது போலிருக்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு அவைத் தலைவரையும் சோ்த்து 14 இடங்களும், எதிா்க்கட்சிக்கு மூன்று நியமன உறுப்பினா்களையும் சோ்த்து 14 இடங்களும் இருக்கின்றன. துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வா் வே. நாராயணசாமியைப் பணித்திருக்கிறாா். ஆட்சி கவிழ்ந்தால், தோ்தலின்போது துணைநிலை ஆளுநா் ஆட்சி. கவிழாமல் தப்பித்தால், முதல்வா் வே. நாராயணசாமி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வாா்.

எம்.ஓ.எச். பரூக், வெ. வைத்தியலிங்கம், என். ரங்கசாமி ஆகியோரின் பட்டியலில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முதல்வராக வே. நாராயணசாமி இணைவாரா, இல்லையா என்பதை திங்கள்கிழமை பலப்பரீட்சை முடிவு செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com