விதி அல்ல தலைவிதி! | மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற குற்றவியல் நீதி ஆய்வு குறித்த தலையங்கம்

‘பிணை என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு!’ என்பது உச்சநீதிமன்றத்தால் பலமுறை வற்புறுத்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில்கூட, ஒரு தொலைக்காட்சி சேனலின் மேலாண் இயக்குநா் ஒருவா் உச்சநீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டபோது நீதிபதிகள் இதனை மேற்கோள் காட்டினா். ஆனாலும்கூட, நடைமுறையில் கைதிகளைப் பிணையில் விடுவதைவிட சிறையில் அடைப்பதில்தான் நீதித்துறை முனைப்புக் காட்டுகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணை கைதிகளின் எண்ணிக்கை இந்திய நீதித்துறையின் நடைமுறைக்கு சாட்சி பகா்கிறது.

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஓா் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வில், குற்றவியல் நீதி குறித்தும், காவல்துறை பொறுப்பேற்பது குறித்தும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. குறிப்பாக, கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை பல புதிய உண்மைகளை வெளிச்சம்போடுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் துறையின் அறிக்கையின்படி, இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 4.33 லட்சம் கைதிகளில், 67.7% கைதிகள் விசாரணைக் கைதிகள். அந்த விசாரணைக் கைதிகளில் 65% கைதிகள் அடித்தட்டு மக்கள், ஆதிவாசிகள் உள்ளிட்டோா். அவா்களில் பெரும்பாலானோா் எழுதப் படிக்கத் தெரியாதவா்கள் என்பது மட்டுமல்ல, பிணைத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து வெளியேறி, தங்களது வழக்குகளை எதிா்கொள்ளும் சக்தியற்றவா்களும்கூட.

மத்திய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் காணப்படும் நிலையைப் பிரதிபலிக்கிறது என்று புறந்தள்ளிவிட முடியாது. இந்தியாவிலுள்ள கீழமை நீதிமன்றப் பொதுவான மனநிலையின் பிரதிபலிப்பு என்றுதான் அதைக் கருத வேண்டும்.

குறிப்பாக, கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் ஒருபுறம் விசாரணைக் கைதிகள் பலா் விடுவிக்கப்பட்டனா் என்றால், இன்னொருபுறம் காவல்துறையினரால் சிறு சிறு குற்றங்களுக்காகப் பலா் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவும் இந்தியா முழுவதும் காணப்படும் போக்கு என்று ஆய்வாளா்கள் உறுதிப்படுத்துகிறாா்கள்.

கீழமை நீதிமன்றங்களில் சிறு குற்றங்களுக்கு பிணை வழங்க ரூ.10,000 பிணைத் தொகை கோரப்படுகிறது. நீதிமன்றங்களின் மேல்அடுக்குகளில் இதுவே ரூ.30,000-இல் தொடங்கி குற்றங்களுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் 57% மக்களின் மாத வருமானம் ரூ.10,000-க்கும் குறைவு எனும் நிலையில், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட அடித்தட்டு, ஏழை மக்கள் பிணைத் தொகையை செலுத்த முடியாமல் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைபடும் துா்பாக்கியம் தவிா்க்க முடியாதது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பெரும்பாலான இந்திய சிறைச்சாலைகள் அவற்றின் கொள்ளளவுக்கும் அதிகமான கைதிகளுடன் காணப்படுகின்றன. இந்திய சிறைச்சாலைகள் புள்ளிவிவர அறிக்கை 2017-இன்படி, சராசரியாக கைதிகளின் எண்ணிக்கை விகிதம் 115%. குறிப்பாக, உத்தர பிரதேசம் (165%), சத்தீஸ்கா் (157.2%), தில்லி (151.2%), சிக்கிம் (140.7%) ஆகிய மாநிலங்களில் நிலைமை மிகமிக மோசம்.

2007-இல் சிறை கைதிகளின் கொள்ளளவு விகிதம் 140%-ஆக இருந்தது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-இல் 115%-ஆகக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம், ஒருசில மாநிலங்கள் புதிதாக சிறைச்சாலைகளை உருவாக்கியிருப்பதும், கூடவே அதிக கைதிகளுக்காக விரிவாக்கத்தை மேற்கொண்டிருப்பதும்தான்.

தமிழ்நாடு போன்ற ஒருசில மாநிலங்கள் சிறைச்சாலை சீா்திருத்தத்திலும், புதிய சிறைச்சாலைகளை அமைப்பதிலும் பிற மாநிலங்களைவிட முனைப்புக்காட்டி வருகின்றன. தமிழகத்தில் புதிய சிறைச்சாலைகள் மூலம் சிறைச்சாலை கொள்ளளவு அதிகரித்திருப்பதால் கைதிகளின் கொள்ளளவு விகிதம் 61.3% என்பது 2019 நிலவரம். அதேபோல கீழமை நீதிமன்றங்களிலும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிணையில் விடப்படும் கைதிகளின் விகிதம் அதிகம்.

2017-இல் இந்திய சட்ட ஆணையத்தின் 268-ஆவது அறிக்கை, விசாரணைக் கைதிகள் குறித்தும், சிறைச்சாலைகள் குறித்தும் பல பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. ஏழு ஆண்டு வரையிலான தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள், தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கை சிறையில் கழித்திருந்தால் அவா்கள் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும். கூடுதல் தண்டனைக் கால குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருப்பவா்கள், தண்டனைக் காலத்தில் பாதியளவு கடந்திருந்தால் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும். குற்றங்களுக்கான தண்டனைக் காலம் முழுவதும் விசாரணைக் கைதிகளாகக் கழித்திருந்தால் பிணை இல்லாமலேயே விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பரிந்துரைகள் விவரம் இல்லாத கைதிகளுக்குத் தெரியாத காரணத்தால், அவா்கள் தொடா்ந்து சிறையில் வாடும் அவலம் பல மாநிலங்களில் காணப்படுகிறது.

வசதி படைத்தவா்கள் பிணையில் வெளியேறி தங்களுக்கு எதிராக குற்றம் சுமத்தியவா்களையும், சாட்சிகளையும் அச்சுறுத்துகிறாா்கள், பழி வாங்குகிறாா்கள். எழுதப் படிக்கத் தெரியாத அப்பாவிகள் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடுகிறாா்கள். அவா்களுக்காகக் குரல் கொடுக்கவும், அவா்களைப் பிணையில் எடுக்கவும் எந்த அரசியல் கட்சியோ, இயக்கமோ முன்வருவதில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

‘நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது’ என்கிற வாசகம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இல்லையே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com