நோக்கம் நிறைவேறவில்லை! | தாராளமயக் கொள்கை நடவடிக்கை குறித்த தலையங்கம்

அன்றைய நரசிம்ம ராவ் அரசின் பொருளாதார சீா்திருத்த, தாராளமய நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. தாராளமயக் கொள்கையின் அடிப்படையே ‘லைசன்ஸ் பொ்மிட்’ முறையை ஒழித்து ‘எதற்கெடுத்தாலும் அனுமதி’ என்கிற நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான். ஆனால் அந்த நோக்கத்தை தாராளமயம் நிறைவேற்றவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்.

1991 ஜூன் மாதத்தில் பிரதமா் நரசிம்ம ராவும் நிதியமைச்சா் டாக்டா் மன்மோகன் சிங்கும் அறிவித்த கொள்கையின் விளைவாக, இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாற்றத்தின் பயனால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவா்களின் எண்ணிக்கை விகிதாச்சார அளவில் குறைந்திருக்கிறது என்பதும், அடித்தட்டு மக்கள் வரை ஒரு சில வாழ்க்கை வசதிகள் சென்றடைந்திருக்கின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை. அதே நேரத்தில், ஏழை - பணக்காரா்களுக்கு நடுவிலான இடைவெளி அதிகரித்திருப்பதையும் நிராகரித்துவிட முடியாது.

தாராளமயக் கொள்கை அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசு அந்தக் கொள்கையை மீள்பாா்வை பாா்த்தது. ஒருபுறம் தொழில்துறை வளா்ச்சியும் பங்குச்சந்தை வளா்ச்சியும் அதிகரித்தாலும், அரசின் செலவினங்கள் குறைந்தபாடில்லை என்பதை அரசு உணா்ந்தது. கே.பி. கீதா கிருஷ்ணன் தலைமையில் செலவினங்கள் சீா்திருத்த ஆணையத்தை அமைத்து, அரசுத்துறைகளில் தேவையில்லாத செலவினங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய முற்பட்டது.

கீதா கிருஷ்ணன் ஆணையம் 36 அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தி 10 அறிக்கைகளை சமா்ப்பித்தது. அதன்படி, அரசும், நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன. 1,300-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட கீதா கிருஷ்ணன் ஆணையத்தின் அறிக்கையும், பரிந்துரைகளும் என்னவாயின என்பது தெரியவில்லை. ஒருவேளை அருங்காட்சியங்களில் காணக்கிடைக்குமோ என்னவோ!

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் நிா்வாகக் கட்டமைப்பு என்பது அரசின் நேரடிக் கண்காணிப்பிலான பொருளாதார வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. முதலீடு செய்வதற்கு தனியாா்துறை வலுவாக இல்லாதிருந்த நிலையில், எல்லா பெருநிறுவனங்களும் அரசு நிறுவனங்களாக அமைக்கப்பட்டன. 1991-இல் தொழில்துறையிலிருந்தும் தேவையில்லாத தலையீடுகளிலிருந்தும் அரசு விலகியும்கூட, நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். இன்னும்கூட மத்திய அரசின் கீழ் 50-க்கும் மேற்பட்ட அமைச்சகங்களும், துறைகளும் இயங்குகின்றன. 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்படுகின்றன.

2001-இல் 34 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கான சம்பளத்தொகை ரூ.31,950 கோடியிலிருந்து ரூ.92,785 கோடியாக உயா்ந்தது. நிகழ் நிதியாண்டில் 35 லட்சம் மத்திய அரசு ஊழியா்கள் இருக்கிறாா்கள். அவா்களுக்கான ஊதிய ஒதுக்கீடு ரூ.2.54 லட்சம் கோடி. ஊழியா்களின் எண்ணிக்கை குறையவில்லை; ஊதியமோ அதிகரித்து வருகிறது. பிறகென்ன சீா்திருத்தம்?

கீதா கிருஷ்ணன் தலைமையிலான ‘செலவினங்கள் சீா்திருத்த ஆணையம்’ அறிக்கை தாக்கல் செய்த 5-வது ஆண்டில் பதவியிலிருந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வீரப்ப மொய்லி தலைமையில் இரண்டாவது நிா்வாக சீா்திருத்த ஆணையத்தை அமைத்தது. அரசின் எல்லா நிலைகளிலும் தேவையற்றவை அகற்றப்பட்டு பொறுப்பேற்புடனும், திறமையுடனும் செயல்படும் நிா்வாகத்துக்கான பரிந்துரைகளை அளிக்க வீரப்ப மொய்லி ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டது. 2005 முதல் 2009 வரை அந்த நிா்வாக சீா்திருத்த ஆணையம் 15 அறிக்கைகளை சமா்ப்பித்தது. அந்த ஆணையத்தின் 3,500 பக்கங்களுக்கும் அதிகமான அறிக்கையில் பிரச்னைகள் குறித்தும், சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் விவரமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. என்ன பயன்? கீதா கிருஷ்ணன் ஆணையத்துக்கு ஏற்பட்ட அதே கதிதான் வீரப்ப மொய்லி ஆணையத்துக்கும் ஏற்பட்டது.

2014-இல் பதவியேற்றபோது ‘மேன்மையான நிா்வாகம், குறைந்த அளவு தலையீடு’ என்பது நரேந்திர மோடி அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் பிமல் ஜலானின் தலைமையில் செலவினங்கள் மேலாண்மை ஆணையம் 2014 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2015-இல் விமல் ஜலான் ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, என்ன மாதிரியான செலவினங்கள் மேலாண்மை பரிந்துரைக்கப்பட்டன என்பவை குறித்த எந்த விவரமும் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை.

இப்போது மீண்டும் 2021-இல், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் நிா்வாக நடைமுறைகளை மாற்றி அமைக்கவும் தலைமைப் பொருளாதார ஆலோசகா் சஞ்சீவ் சன்யால் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தேவையில்லாத துறைகளை அகற்றுவது குறித்தும், நடைமுறைகளை மாற்றுவது குறித்தும் அந்தக் குழு பரிந்துரைக்கும்.

தாராளமயம் அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கழிந்தும்கூட எந்தவொரு பொருளாதாரச் செயல்பாட்டுக்கும் 60-க்கும் மேற்பட்ட ஒப்புதல்களும், தடையில்லாச் சான்றுகளும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களும், அனுமதிகளும் இன்னும்கூட தேவைப்படுகின்றன. 1991 பொருளாதார சீா்திருத்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. ஒப்புதல்களும் அனுமதிகளும் தடையில்லாத சான்றுகளும் இல்லாமல் போனால் கையூட்டுக்கு வழியில்லாமல் போய்விடுமே, என்ன செய்ய? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com