ஒப்புக்கொரு விலைக்குறைப்பு! | பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு பற்றிய தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

 எதிர்வரும் ராபி பருவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உதவுவதற்காக டீசல் மீதான கலால் வரியில் ரூ.10-உம், பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-உம் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தீபாவளிப் பண்டிகைக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் இந்த இனிப்பான அன்பளிப்புக்கு, நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் கசப்பான பின்னடைவுதான் காரணம் என்பதை ஊகிக்க முடிகிறது.
 ஏற்கெனவே, தமிழ்நாடு, மேகாலயம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது மத்திய அரசும் தனது கலால் வரியைக் குறைத்திருக்கிறது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் தங்களது மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்கள், தங்களுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் வருமானத்தை இழக்க முடியாது என்று கைவிரித்திருக்கின்றன.
 நாம் பெட்ரோல், டீசலுக்குக் கொடுக்கும் விலையில் பாதிக்கும் அதிகமாக மத்திய, மாநில அரசுகளின் வரிகள் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மக்களின் வரிப்பணத்தில்தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்பது எதார்த்தமான உண்மை என்றாலும்கூட, பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்து வந்த வரிகள் அநீதியானவை என்பதை மனசாட்சி உள்ள எவருமே மறுக்க மாட்டார்கள்.
 மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர் அளவுக்கு உயர்ந்தபோது, அந்த விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதற்காக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல், ரூ.1.34 லட்சம் கோடி அளவில் கடன் பத்திரங்கள் வழங்கியது. கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ.3,500 கோடி அளவிலான அசல் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் கடனை முழுவதுமாக வட்டியுடன் திருப்பிக் கொடுக்க இன்னும் ஐந்து ஆண்டுகளாகும் என்பது நிதியமைச்சரின் விளக்கம்.
 மத்திய அரசின் கலால் வரி வருவாயில் பெரும்பகுதி, பெட்ரோல், டீசலிலிருந்துதான் கிடைக்கிறது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை அதிகரித்ததன் மூலம் மட்டுமே மத்திய அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3.35 லட்சம் கோடி. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டபோது, கலால் வரியை அதிகரித்து கடன் பத்திரங்களை மீட்பதற்கு பதிலாக, அரசின் நிர்வாகச் செலவுக்கு எடுத்துக் கொண்டதை சாமர்த்தியமாக மறைக்கிறது நிதியமைச்சகம்.
 கடந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதிக்கும் மே 5-ஆம் தேதிக்கும் இடையில் பெட்ரோலுக்கு ரூ.13.32 -உம், டீசலுக்கு ரூ.15.92-உம் கலால் வரி அதிகரிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல மாநிலங்களின் வரியும் சேர்ந்தபோது, இரண்டு மடங்கு விலை உயர்ந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இப்போதைய விலைக்குறைப்பு என்பது கண்துடைப்புதானே தவிர பெரிய அளவிலான சலுகையொன்றும் அல்ல.
 விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதித்திருப்பதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டுகளையும், காங்கிரûஸயும் அகற்றி நிறுத்தி பிரதான எதிர்க்கட்சியாக உயர்ந்த பாஜக, தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் மூன்றில் வைப்புத் தொகையைக்கூடப் பெற முடியவில்லை. பாஜக ஆளும் ஹிமாசல பிரதேசத்திலும், ஹரியாணாவிலும் தோல்வி முகம். விரைவில் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், அதிருப்தியை அகற்றியாக வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க இயலாது என்று பிடிவாதம் பிடித்த மத்திய அரசு இப்போது சற்று இறங்கி வந்து சிறிய அளவில் வரியைக் குறைத்திருப்பதற்கு, இடைத்தேர்தல் தோல்விகள் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. அரசின் நேரடி, மறைமுக வரி வசூல் அதிகரித்திருப்பதும் ஒரு முக்கியமான காரணம். நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் எதிர்பார்ப்பைவிட அதிகமான வரி வருவாய் எதிர்பார்க்கப்படுவதால், கலால் வரியில் சற்று சலுகை அளிக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கலாம்.
 இரண்டாவதாக, விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுக்குள் வைத்திருக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பது பலனளிக்கக்கூடும். மூன்றாவதாக, மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்து, அதன் தொடர் விளைவாகக் கூடுதல் செலவழிப்பு ஏற்படும் என்பதும் அரசின் எதிர்பார்ப்பு.
 பெரிய அளவிலான பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு ஏற்படாமல் இந்த வரிக் குறைப்பால் விலைவாசி குறையும் என்றோ பொருளாதாரம் ஊக்கம் பெறும் என்றோ எதிர்பார்த்துவிட முடியாது. அரசின் மீதான அதிருப்தி குறைந்துவிடுமா என்றால், அதுவும் சந்தேகம்தான்.
 வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.266 அதிகரிக்கப்பட்டு ரூ.2,000-க்கும் அதிகமாகி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் பயன்பாட்டுக்கான குடும்ப அட்டை மண்ணெண்ணெய்யின் விலை ஒரே நாளில் ரூ.8 உயர்த்தப்பட்டு ரூ.55-க்கு வழங்கப்படுகிறது. விமானப் பயன்பாட்டுக்கான பெட்ரோலைவிட, சாலை வாகனப் பயன்பாட்டுக்கான பெட்ரோல் விலை அதிகம். அதனால், பெட்ரோல், டீசலின் விலைகள் குறைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதே வேளையில், இதெல்லாம் போதாது என்பதை உரக்கவே சொல்லத் தோன்றுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com