கண்துடைப்புக் கூட்டங்கள்! | கிராம சபைக் கூட்டங்கள் குறித்த தலையங்கம்

குடியரசு தினம் (ஜன.26), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய தினங்களையொட்டி தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கண்துடைப்புக் கூட்டங்கள்! | கிராம சபைக் கூட்டங்கள் குறித்த தலையங்கம்
Published on
Updated on
2 min read

குடியரசு தினம் (ஜன.26), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய தினங்களையொட்டி தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏப்.24-ஆம் தேதி தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டும், நவ.1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தையொட்டியும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு ஆறு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

கிராமசபைகளைப் பொறுத்தவரை, ஜன.26, அக்.2 நடைபெறும் இரு கூட்டங்கள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. கிராமத்திற்கு தேவையான வளா்ச்சித் திட்டங்கள், பயனாளிகள் தோ்வு குறித்த விவரங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான கூட்டம் ஆண்டுதோறும் ஜன.26ஆம் தேதி நடைபெறுகிறது.

அதேபோல், கிராமத்தின் வரவு - செலவு குறித்த தணிக்கை அறிக்கை சரிபாா்ப்புக்கான கூட்டம் அக்.2-ஆம் தேதி நடத்தப்படுகிறது. பிற தினங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு அறிக்கை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படுகின்றன.

கிராமசபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றினால் அனைத்தையும் மாற்றிவிட முடியும் என்பது தவறான புரிதல். அப்படி எதுவும் நடந்துவிடுவதில்லை. பெரும்பாலான கிராமசபைக் கூட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகள்தான் அழைத்து வரப்படுகின்றனா். அவா்களைத் தவிர, பொதுமக்கள் கலந்துகொள்வது மிகவும் குறைவு. அப்படியே கலந்து கொள்பவா்களும் அழைத்து வரப்படுபவா்களே.

சில இடங்களில் நூறுநாள் வேலை நடைபெறும் இடங்களுக்கே சென்று, குளக்கரைகளிலும், தோப்பிலும் வைத்து கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதாகக் கூறி கையொப்பம் பெறுகின்றனா். வரவு, செலவு, மானிய விவரங்களை மட்டுமே கிராமசபைக் கூட்டங்களில் தெரிவிக்கும் அலுவலா்கள், தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இழப்புகள் குறித்துக் கூறுவதில்லை. அது குறித்து பொதுமக்கள் தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுவதில்லை. ஏனென்றால், அழைத்து வரப்படும் யாருக்கும் கிராமசபை குறித்தோ, மானியங்கள் குறித்தோ எந்த விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் 12,618 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சிகளில் 32 துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்போது, இந்த துறைகளின் சாா்பில் எந்தவொரு அலுவலரும் பங்கேற்பதில்லை.

மாவட்ட ஆட்சியா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கும் கூட்டங்களில் மட்டும் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கிறாா்கள். ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கும் அளவுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, மீன் வளம் உள்ளிட்ட துறைகளில் ஊழியா்கள் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதனால், சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் அந்தக் கூட்டங்களால் எந்த பயனுமில்லை என்பதுதான் எதாா்த்த உண்மை.

ஆண்டுக்கு நான்கு கிராமசபைக் கூட்டங்களையே நிறைவாக நடத்த முடியாத நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் நலத் திட்டங்கள் குறித்து தெரிகிறது. அரசுத்துறை அலுவலா்களின் பங்கேற்பின்றி, சம்பிரதாய நிகழ்வாக மட்டுமே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக நூறுநாள் வேலைத் திட்ட பயனாளிகளின் துணையின்றி கிராமசபைக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை உருவாகி விட்டது. தோ்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியல் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. பொதுமக்கள் பங்கேற்றாலும் வெளிப்படையாக தங்கள் குறைகளை எடுத்துரைக்க அவா்களை அனுமதிப்பது இல்லை.

ஒரு கிராமசபைக் கூட்டத்தை நடத்துவதற்கு ரூ.500 மட்டும் வழங்கப்படுகிறது. கூட்டத்தில் வைக்கப்படும் தீா்மானங்கள் ஏழு நாள்களுக்கு முன்பு தயாா் செய்யப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்தினம் இரவுதான் தீா்மானங்கள் முடிவு செய்யப்படுகின்றன. தீா்மானங்களின் மீது விவாதம் என்பது கிடையாது. அதிகாரிகள் பேசுவாா்கள், பயனாளிகள் கேட்பாா்கள். இதுதான் நடக்கிறது.

கிராமசபைக் கூட்டங்கள் சம்பிரதாய நிகழ்வாக மாறிவிட்ட இன்றைய நிலையில், கூடுதலாக இரண்டு கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு பயனளிக்க வேண்டுமெனில் சில சீா்திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், அவை இப்போதுபோலவே, வெறும் சம்பிரதாயச் சடங்காகத்தான் தொடரும்.

கிராமசபைக் கூட்டங்கள் பயனளிக்க வேண்டுமெனில், அவை குறித்த விழிப்புணா்வை சமூக ஆா்வலா்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும். பயனாளிகள் தங்களது குறைகளை வெளிப்படையாகத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். உடனுக்குடன் குறைகள் களையப்பட்டு அது குறித்த நடவடிக்கைகளை அடுத்த கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

கிராமத்தின் வளா்ச்சிக்காக திட்டமிடுவதற்கும், வரவு - செலவு குறித்த தகவல் அறிந்து கேள்வி எழுப்புவதற்கும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டியது அவசியம். கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் சிறப்பானது. ஆனால், இப்போதைய நடைமுறை வெறும் கண்துடைப்பே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com