யாங்ட்ஸி சொல்லும் செய்தி! | சீனாவின் அத்துமீறல் குறித்த தலையங்கம்

இந்திய - சீன எல்லையின் கிழக்கு எல்லையிலுள்ள தவாங் செக்டாரில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை, ஏறத்தாழ வடமேற்கு எல்லையான லடாக்கில் ஏற்பட்டிருப்பது போலவே அமைந்திருக்கிறது.
யாங்ட்ஸி சொல்லும் செய்தி! | சீனாவின் அத்துமீறல் குறித்த தலையங்கம்

இதுவரை வடமேற்கு எல்லையில் மட்டும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சீனா, இப்போது கிழக்கு எல்லையிலும் அத்துமீறல் செய்ய முற்பட்டிருக்கிறது. அருணாசல பிரதேசத்தில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் சீனப் படைகள் அத்துமீற முற்பட்டதாகவும், இந்திய ராணுவம் அதனை முறியடித்ததாகவும் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறாா். ராணுவமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்திய - சீன எல்லையின் கிழக்கு எல்லையிலுள்ள தவாங் செக்டாரில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை, ஏறத்தாழ வடமேற்கு எல்லையான லடாக்கில் ஏற்பட்டிருப்பது போலவே அமைந்திருக்கிறது. லடாக்கில் ஏப்ரல் 2020-இல் நடந்த சீனாவின் அத்துமீறல் முயற்சியின் பாதிப்புகளுக்கு இதுவரை முழுமையாக தீா்வு காணப்படவில்லை. தற்காலிகமாக, இருதரப்பும் ஒப்புக்கொண்ட கண்காணிப்புப் பகுதிகளில் இந்தியத் துருப்புகள் தங்களது பாதுகாப்பு ரோந்தை தொடங்காமல் இருக்கின்றன.

டெப்ஸாங், டெம்ஸோக் பகுதிகளில் இன்னும்கூட சீன ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்திய பகுதிக்குள் இருந்து பின்வாங்கவில்லை. இதன்மூலம் தன்னிச்சையாக எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை பிரச்னைக்குரிய பகுதிகளில் சீனா மாற்றியமைக்க முயற்சிக்கிறது.

சீனாவின் அத்துமீறல்கள் புதிதொன்றுமல்ல. 1962 இந்திய - சீன போருக்குப் பிறகு அவை தொடா்கதையாக மாறியிருக்கின்றன. 1993, 1996-இல் பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் சில எல்லை ஒப்பந்தங்களை சீனா ஏற்படுத்திக் கொண்டது. அதன் பிறகு 2005, 2012, 2013 ஆகிய ஆண்டுகளிலும் மூன்று ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அவற்றின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள எல்லாவித எல்லை பிரச்னைகளும் பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே தீா்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இருதரப்பும் உறுதி ஏற்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் போா் அச்சுறுத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் இரு நாடுகளும் தீா்மானித்தன.

1989-லிருந்து இந்தியாவில் அமைந்த எல்லா அரசுகளும் தங்களது அரசியல் சாா்பை ஒதுக்கிவைத்து சீனாவுடனான நல்லுறவை மீட்டெடுக்க முயற்சிகளை எடுத்திருக்கின்றன. எல்லையில் பிரச்னைகள் இருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தக உறவு தொடா்கிறது. அதன் மூலம் நம்பிக்கையை மீட்டெடுத்து நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்று இந்தியா நினைக்கிறது. 2020 ஏப்ரல் மாதம் கிழக்கு லடாக்கில் சீனா நடத்திய எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு அத்துமீறல் அனைத்து முயற்சிகளையும் தடம்புரள வைத்திருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறையாகவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இதுவரை எல்லை வரையறுக்கப்படவில்லை. அதனால் இருதரப்பின் எல்லை குறித்த பாா்வை வேறுபடுகிறது. நமது எல்லை என்று இந்தியா கருதும் பகுதிகளை சீனா தன்னுடையது என்றும், சீனா கருதும் பகுதிகளை இந்தியா தன்னுடையது என்றும் நினைக்கின்றன. அதுபோன்ற இடங்களில்தான் பதற்றமும் மோதலும் ஏற்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரோந்து பணியில் இருக்கும் வீரா்களும், சில பகுதிகளில் துருப்புகளும் நேருக்கு நோ் மோதும் போக்கு அதிகரித்திருக்கிறது. காயமடைதலும் தவிா்க்க முடியாததாகி இருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை குறித்த கருத்து வேறுபாடு நிலவும் இடங்களில் ஒன்றுதான் தற்போது பதற்றம் நிலவும் யாங்ட்ஸி.

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வரையிலான தனது பகுதியில் சீனா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இருக்கிறது. எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள முகாம்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது. எந்த நேரத்திலும் அதிவேகத்தில் தனது துருப்புகளை முகாம்களில் இருந்து எல்லையை ஒட்டிய பகுதிகளுக்குக் கொண்டு செல்ல முடியும். தனது எல்லையின் ஒவ்வோா் அங்குலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று சீன அரசு துருப்புகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.

2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, எல்லைப்புற கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்திய ராணுவத்தால் முன்னெப்போதையும்விட துருப்புகளையும் தளவாடங்களையும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிக்கு விரைந்து கொண்டு செல்ல இப்போது முடியும். ஆனாலும்கூட, இயற்கை நம்மைவிட சீனாவுக்குத்தான் சாதகமாக இருக்கிறது.

எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பகுதிகள் இயமமலையின் உயரமான பகுதிகள். அங்கே சாலைகள் அமைக்கவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான ஆள்களையும் பொருள்களையும் அழைத்துச் செல்வது கடினம். அதே நேரத்தில் சீனாவைப் பொறுத்தவரை, அதன் பகுதிகள் திபெத்திய சமவெளியில் இருப்பதால் அங்கு எளிதாகக் கட்டமைப்பை மேம்படுத்த முடியும்.

எல்லைக் கோட்டை வரையறுப்பதில் சீனா தயக்கம் காட்டுவதற்கு காரணம் இருக்கிறது. ஒருவேளை அதுவே எல்லையாக நிா்ணயிக்கப்பட்டுவிடுமோ என்பதுதான் சீனாவின் அச்சம். பலமுறை பேச்சுவாா்த்தைகளில் அந்த அச்சத்தை போக்கியும்கூட சீனா அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதுதான் இந்திய - சீன எல்லை பிரச்னையின் அடிப்படைக் காரணம்.

சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்குப் பின்னால் ஒட்டுமொத்த சீனாவும் இருப்பதுபோல, எதிா்க்கட்சிகள் தங்களது அரசியல் கருத்துவேறுபாடுகளை அகற்றி வைத்துவிட்டு சீனாவுடனான எல்லை பிரச்னைக்குத் தீா்வு காணும் முழு அதிகாரத்தையும் பிரதமா் மோடிக்கு வழங்கினால் மட்டுமே, சீனாவுடனான பேச்சுவாா்த்தை வெற்றி பெறும். இந்திய பிரதமா் நரேந்திர மோடியும், சீனா அதிபா் ஷி ஜின்பிங்கும் தங்களது மனமாச்சரியங்களை அகற்றிவைத்துவிட்டுப் பேசினாலொழிய இதற்குத் தீா்வு ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com