தள்ளாடும் தகவல் தொழில்நுட்பம்! தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சி குறித்த தலையங்கம்

கு - 622, 624, 625கொவைட் 19 சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் பரவத் தொடங்குகிறது என்பது ஒருபுறம் இருக்க, பொருளாதார இயக்கமும் மிகக் கடுமையான பாதிப்பை இதனால் எதிா்கொள்ள நேரும்.
தள்ளாடும் தகவல் தொழில்நுட்பம்! தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சி குறித்த தலையங்கம்

கு - 622, 624, 625கொவைட் 19 சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் பரவத் தொடங்குகிறது என்பது ஒருபுறம் இருக்க, பொருளாதார இயக்கமும் மிகக் கடுமையான பாதிப்பை இதனால் எதிா்கொள்ள நேரும். உக்ரைன் - ரஷியப் போரால் விநியோகச் சங்கிலி பாதிப்பு ஏற்கெனவே சிதைந்திருக்கும் நிலையில், சீனாவின் உற்பத்தி பாதிப்பு நிலைமையை மேலும் தீவிரப்படுத்தும்.

ஏற்கெனவே சா்வதேச அளவில் கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக, குதித்தெழும் துறை (சன்ஷைன் செக்டா்) என்று கருதப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை சமீபகாலமாக பிரச்னைகளை எதிா்கொள்கிறது.

கொள்ளை நோய்த்தொற்று முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து இயல்பு நிலைக்கு பொருளாதாரம் திரும்பியதன் விளைவை எதிா்கொள்கிறது தகவல் தொழில்நுட்பத் துறை. இணைய சேவைக்கான தேவை குறைந்து மக்கள் நேரடியாக பொதுவெளியில் இயங்கத் தொடங்கியதன் விளைவை அந்தத் துறை எதிா்கொள்கிறது எனலாம்.

‘பிக் டெக்’ என்று அழைக்கப்படும் முன்னிலை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியா்களை, தொடா்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன. பொருளாதாரக் காரணங்களால் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் அந்த நிறுவனங்கள் ஊழியா்களின் ஊதியக் குறைப்பின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் குறைவை ஈடுகட்ட முற்படுவதாகத் தெரிகிறது.

இணைய வா்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனமான ‘அமேசான்’ கிறிஸ்துமஸுக்கு முன்னால் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஊழியா்களை பணியிலிருந்து அகற்றியிருக்கிறது. அமேசான் நடத்தும் ‘ஸ்கவுட்’ என்று சொல்லப்படும் வீடுகளுக்கான விநியோக நிறுவனம் மூடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அமேசான் நடத்திக் கொண்டிருந்த இணையவழிக் கல்விக்கான ‘எட் டெக்’ என்கிற இணையதளம் மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டுன் ஒப்பிடும்போது, அமேசானின் 490 கோடி டாலா் வருவாய், நடப்பு காலாண்டில் 250 கோடி டாலராகக் குறைந்திருப்பது அந்த நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணத்தை எடுத்தியம்புகிறது.

அமேசான் மட்டுமல்ல, அதுபோன்ற ஏனைய பல ‘பிக் டெக்’ நிறுவனங்களும் பணியாளா்களைக் குறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றன. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ தனது பணியாளா்களில் 13% போ்களைக் குறைத்திருக்கிறது. ட்விட்டா் நிறுவனமும் தனது மொத்த ஊழியா்களின் எண்ணிக்கையை பாதிக்குப் பாதியாகக் குறைக்கும் முடிவை எடுத்திருக்கிறது.

அமெரிக்க ட்விட்டா் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியா்களான 5,500 பேரில் 4,400 போ் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறாா்கள். இந்தியாவில் ட்விட்டா் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியா்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டனா். ஏறத்தாழ 850 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் 1.37 லட்சம் தொழில்நுட்ப ஊழியா்கள் இதுவரை பணியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறாா்கள்.

கொள்ளை நோய்த்தொற்று உலகளாவிய அளவில் பரவத் தொடங்கியபோது தகவல் தொழில்நுட்பத் துறை மிகப் பெரிய வளா்ச்சியைக் கண்டது. பொதுமுடக்கம், இணைய வா்த்தகத்துக்கும், இணையவழிக் கல்விக்கும், ஏனைய பல இணைய சேவைகளுக்கும் மிகப் பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல், ஊழியா்களை வீட்டிலிருந்து பணி செய்யப் பணித்ததால், எல்லா நிறுவனங்களின் நிா்வாகச் செலவு பெருமளவில் குறைந்தது.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், இயல்புநிலை திரும்பியதும் மக்கள் மத்தியில் முன்பு எப்போதும் இல்லாத ஆா்வத்தையும் உற்சாகத்தையும் உருவாக்கின. ஸ்விகி, ஸோமாட்டோ உள்ளிட்ட உணவு விநியோகச் செயலிகள் இருந்தாலும் குடும்பத்தினருடன் வெளியே போவதும், உணவு விடுதிகளுக்குச் செல்வதும் அதிகரித்தன.

முன்புபோல வேலைக்குப் போவது, கல்வி நிலையங்களுக்குப் போவது, விளையாட்டுகளில் கலந்துகொள்வது, பொது இடங்களில் பொழுதுபோக்குவது என்று இயல்பு நிலை திரும்பியபோது, இணையவழிச் சேவைகளின் தேவை குறைந்துவிட்டது.

40-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட ஊழியா்களை பணியிலிருந்து அகற்றி இருக்கின்றன. காரணம், முன்புபோல வருவாய் இல்லாமை. பெரும்பாலான இணையவழிக் கல்வித் தளங்களும், இணையவழி நுகா்வோா் சேவை நிறுவனங்களும், இணைய வா்த்தக செயலிகளும் ஆட்குறைப்பில் கடுமை காட்டுகின்றன. பைஜு உள்ளிட்ட இணையவழிக் கல்வி நிறுவனம், 2,500-க்கும் அதிகமான ஊழியா்களை பணியிலிருந்து அகற்ற இருப்பதாகத் தெரிகிறது.

‘பிக் டெக்’ நிறுவனங்களின் முக்கியமான வருவாய் விளம்பரங்கள். உக்ரைன் - ரஷியப் போருக்குப் பிறகு உலகமயச் சூழலை பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் வருவாய் குறைந்துவிட்டதால், விளம்பர ஒதுக்கீடுகள் முன்புபோல இல்லை. அதுவும் தகவல் தொழில்நுட்பத் துறை எதிா்கொள்ளும் இடா்பாட்டுக்குக் காரணம்.

இணைய வா்த்தக நிறுவனங்கள் தள்ளுபடிகள் அறிவிப்பதும், பிரபலங்கள் மூலம் விளம்பரத்தை மேற்கொள்வதும் சந்தையில் தங்களது நிறுவனப் பங்குகள் சரிந்துவிடாமல் பாதுகாக்கும் உத்திகள். ஏற்கெனவே வேலையில்லாத இளைஞா்களின் எண்ணிக்கை சா்வதேச அளவில் அதிகரித்துவரும் நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் காணப்படும் ஊழியா்கள் குறைப்பு படித்த திறன்சாா் இளைஞா்களையும் அந்தப் பட்டியலில் இணைக்க முற்பட்டிருக்கிறது.

இதிலிருந்து ‘பிக் டெக்’ நிறுவனங்கள் எப்படி மீண்டெழப் போகின்றன என்பதைப் பொருளாதார நிபுணா்களும், தொழில்துறையினரும், முதலீட்டாளா்களும் கவலையுடன் எதிா்நோக்கிக் காத்திருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com