தவிர்த்திருக்கக்கூடிய போர்! | உக்ரைன் மீதான ரஷியாவின் போர் குறித்த தலையங்கம்

வான்வழி, கடல்வழி, தரைமார்க்கம் என ரஷியா மேற்கொண்டிருக்கும் பலமுனைத் தாக்குதல்  உக்ரைனை மட்டுமன்றி, பிற நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தவிர்த்திருக்கக்கூடிய போர்! | உக்ரைன் மீதான ரஷியாவின் போர் குறித்த தலையங்கம்
Updated on
2 min read

உலக நாடுகள் அச்சமடைந்தவாறே உக்ரைன் மீது போரைத் தொடங்கியுள்ளது ரஷியா. வான்வழி, கடல்வழி, தரைமார்க்கம் என ரஷியா மேற்கொண்டிருக்கும் பலமுனைத் தாக்குதல்  உக்ரைனை மட்டுமன்றி, பிற நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றின் மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைக்காட்சியில் அறிவிக்கும்போது, கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் பிராந்தியங்களில் வாழும் ரஷிய மொழி பேசும் மக்களை உக்ரைன் அரசுப் படையினரிடமிருந்து காக்கும் நோக்கிலேயே ராணுவ நடவடிக்கைக்கு தான் உத்தரவிடுவதாகத் தெரிவித்தார். ஆனால், தலைநகர் கீவ், லட்ஸ்க், இவானோ-ஃபிராங்கிவிஸ்க், ஒசேஸô, மரியுபோல், கார்கிவ் என முக்கிய நகரங்கள் மீது ரஷிய விமானங்கள் குண்டுமழை பொழிவதும், ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும் உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணுவ பலம் என எடுத்துக்கொண்டால் ரஷியாவைவிட பல
மடங்கு பின்தங்கியுள்ளது உக்ரைன். ரஷியாவில் சுமார் 9 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். உக்ரைனில் 3.60 லட்சம் வீரர்களே உள்ளனர். பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு சுமார் 60 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4.51 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்கிறது ரஷியா. உக்ரைனோ அதில் பத்தில் ஒரு பங்கு அதாவது சுமார் 6 பில்லியன் டாலர்தான் 
(ரூ.45,166 கோடி) ஒதுக்கீடு செய்கிறது. என்றாலும், சோவியத் யூனியன் உடைந்தபிறகு நடத்திய போர்களைவிட அதிக சவாலை இந்தப் போரில் ரஷியா எதிர்கொள்ள நேரிடும்.

இதை உக்ரைன்-ரஷியா இடையிலான பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. இது அமெரிக்கா-ரஷியா இடையிலான இரண்டாவது பனிப்போர் என்றால் மிகையில்லை. 

சோவியத் யூனியன் 1991-இல் உடைந்து சிதறியபோது அதி
லிருந்து பிரிந்த உக்ரைன், தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்துகொண்டது. அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளுடன் உக்ரைன் நெருக்கமாக இருந்து வருவது ரஷியாவுக்கு நீண்டகாலமாகவே கோபத்தை ஏற்படுத்தி வந்தது. உக்ரைனை தன் தலைமையிலான "நேட்டோ' அமைப்பில் இணைக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதையும் ரஷியா விரும்பவில்லை. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைக்கப்பட்டால், ரஷியாவின் எல்லையில் நேட்டோ, படைகளைக் குவிக்க முடியும். அப்படி ஒரு சூழல் உருவானால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அதிபர் புதின் கருதுகிறார்.

கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டுள்ள நேட்டோ படை
களைத் திரும்பப் பெற வேண்டும்; உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்கக் கூடாது என்று ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி 
வந்தது. ரஷியாவின் கோரிக்கைகளை நிராகரித்த அமெரிக்கா, 
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதாரத் தடை 
உள்ளிட்ட பல்வேறு தீவிர விளைவுகளை ரஷியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்தது.

இந்த விஷயத்தில், கடந்த கால வரலாற்றிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. 2008-இல் ஜார்ஜியாவை ரஷியா தாக்கியபோதும், உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014-இல் தன்னுடன் இணைத்துக்கொண்டபோதும் அமெரிக்காவாலும், ஐரோப்பிய யூனியனாலும் ரஷியாவுக்கு எதிராகப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியவில்லை. அதேபோலத்தான் தற்போது உக்ரைனில் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது ரஷியா.

உலகையே பதைபதைப்புக்கு உள்ளாக்கியிருந்தாலும், இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்தியா பங்காற்ற முடியும் என்பது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததுடன், உக்ரைனில் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்; நேட்டோவுடனான பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதும், உக்ரைன்-ரஷியா பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருவதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்ததும் அதை உறுதிப்படுத்துகின்றன.

உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் ரஷியாவுக்கு எதிராக விதித்த தடைகள் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளபோதிலும், ரஷியா தனியாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை, ஊடுருவல் என்று ஒப்புக்கொள்ள சீனா மறுக்கிறது. மேலும், ரஷியாவிடமிருந்து கோதுமை இறக்குமதிக்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் ரஷியா தன் மீதான பொருளாதாரத் தடையின் 
தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். அத்துடன் பெலாரஸூம் 
ரஷியாவுக்கு ஆதரவாக உள்ளது.

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நேட்டோ செய்து வந்தாலும், நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இல்லாததால் அந்த நாட்டுக்கு ஆதரவாக நேரடியாகப் போரில் ஈடுபட முடியாது. அதுதான் "ரஷியாவுக்கு எதிரான போரில் எங்கள் நாடு தனித்துவிடப்பட்டிருக்கிறது' என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸலென்ஸ்கியை வேதனையுடன் சொல்ல வைத்திருக்கிறது. அமெரிக்காவோ ரஷியாவோ ஏதோவொரு நாடு சற்று இறங்கி வந்திருந்தாலும் இந்தப் போர் தவிர்த்திருக்கக்கூடியதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com