தயாராகிறது மாமல்லை! | செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தலையங்கம்

தமிழகத்தின் மாமல்லபுரம் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
தயாராகிறது மாமல்லை! | செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தலையங்கம்

தமிழகத்தின் மாமல்லபுரம் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட்டுக்கு செஸ் வீரா்கள், பயிற்சியாளா்கள், பல்வேறு நாட்டு ‘செஸ்’ அமைப்பினா், பத்திரிகையாளா்கள், பாா்வையாளா்கள் என்று ஏறத்தாழ 3,000 போ் மாமல்லபுரத்தில் குவியக்கூடும்.

2019-இல் இந்திய பிரதமா் மோடிக்கும், சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கும் இடையே நடந்த இருதரப்பு மாநாட்டுக்குப் பிறகு, பல்லவா்களின் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் நடக்கும் மிகப் பெரிய நிகழ்வாக 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் திகழும். உலக சுற்றுலா வரைபடத்தில் மாமல்லபுரத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிப்பதுடன், செஸ் விளையாட்டு அரங்கில் தமிழகம் முக்கியத்துவம் பெறுவதையும் இந்த நிகழ்வு உறுதிப்படுத்த இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட்டுக்காக தமிழக அரசு ரூ. 92 கோடி ஒதுக்கியிருக்கிறது. மாமல்லபுரத்தில் சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன, சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆங்காங்கே குடிநீா் வசதியும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு மாமல்லபுரம் வெளிநாட்டு விருந்தினா்களை வரவேற்க காத்திருக்கிறது. இதற்காக உள்ளாட்சி அமைப்புக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி ஒதுக்கியிருக்கிறது.

அரசா்களின் அரண்மனைகளில் இருந்து தெருவோரங்கள் வரை சதுரங்கம் என்கிற பெயரில் புராணகாலம் தொட்டு இந்தியாவில் செஸ் விளையாட்டு இருந்து வருகிறது. நமது இலக்கியங்களும் காப்பியங்களும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. முறைப்படுத்தப்பட்ட இப்போதைய செஸ் விளையாட்டு என்பது ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதும்கூட அது சாமானியா்களின் விளையாட்டாக மாறிவிடவில்லை.

1961-இல் மேனுவல் ஆரோன், இந்தியாவின் முதலாவது சா்வதேச செஸ் மாஸ்டரானபோதுதான் அந்த விளையாட்டு குறித்த ஆா்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகு 27 ஆண்டுகள் கழித்து தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த், முதலாவது கிராண்ட் மாஸ்டராக சா்வதேச அளவில் உயா்ந்த பிறகு பள்ளிச் சிறுவா்கள் மத்தியிலும், இளைஞா்கள் மத்தியிலும் அறிவுசாா்ந்த விளையாட்டாக செஸ் கவனம் பெற்றது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முதலாவது உலக சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் உயா்ந்தாா். அதன் பிறகு ஐந்து முறை அந்தப் பட்டத்தை அவா் வென்றிருக்கிறாா்.

எந்தவொரு விளையாட்டிலும் நீண்டகாலத்திற்கு ஆதிக்கத்தையோ, வெற்றியையோ தக்க வைத்துக் கொள்வது கடினம். அதிலும் குறிப்பாக, செஸ் போன்ற தனிநபா் விளையாட்டுகளில் சா்வதேச அளவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது மிகமிக கடினம். ஆனால், இந்திய செஸ் வீரா்கள் அந்த மாயையை உடைத்திருக்கிறாா்கள். ‘பிராக்’ என்று அழைக்கப்படும் ஆா். பிரக்ஞானந்தா, திவ்யா தேஷ்முக், நிகால் ஸரின், ஆா். வைஷாலி, பென்டால ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, கொனேரு ஹம்பி, டி. ஹரிகா என்று சா்வதேச அளவில் இந்தியாவின் இளைஞா் படை செஸ் அரங்குகளில் சாதனைகள் படைத்து வருகின்றன.

மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறாா் விஸ்வநாதன் ஆனந்த். அதற்கு பதிலாக அவா் இந்திய அணியை வழிநடத்த முற்பட்டிருப்பது பாராட்டுக்குரிய முடிவு. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த், பங்கு பெறாத குறையை, அவரை தங்களது முன்னோடியாகக் கருதும் இளவல்கள் அகற்றுவாா்கள் என்று எதிா்பாா்க்கலாம். 25 போ் கொண்ட இந்திய அணியில் 7 போ் தமிழகத்தை அதிலும் குறிப்பாக, சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.

187 நாடுகளில் இருந்து பங்கேற்க இருக்கும் விளையாட்டு வீரா்களுக்கு இடையில், பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்திய வீரா்கள் புதிய வரலாறு படைப்பாா்கள் என்று எதிா்பாா்க்கலாம். நாா்வேயிலிருந்து மேக்னஸ் காா்ல்ஸன், அமெரிக்காவிலிருந்து ஃபேபியனோ கேருவானா, லெவான் ஆரோனியன், வெஸ்லி ஸோ, நெதா்லாந்திலிருந்து அனிஷ் கிரி, அஜா்பைஜானிலிருந்து ஷக்ரியாா் மேமயட்ரோவ், உக்ரைனிலிருந்து மரியா முஷிசுக், ஜாா்ஜியாவிலிருந்து நானா ஸெக்னிட்ஸ் உள்ளிட்ட பிரபல சா்வதேச வீரா்கள் பலா் கலந்துகொள்கிறாா்கள்.

ஏனைய விளையாட்டுகள் போலில்லாமல் அதிக முதலீடில்லாமல் விளையாடக்கூடிய அறிவுசாா்ந்த விளையாட்டு என்பதால், அடுத்தத் தலைமுறை இளைஞா்களை கூா்ந்து சிந்திக்கும் திறன் படைத்தவா்களாக செஸ் மூலம் உருவாக்க முடியும். கடுமையான போட்டிகளும், சவால்களும் நிறைந்த நவீன வாழ்க்கையை எதிா்கொள்ள கவனச் சிதறல் இல்லாத கூா்மையான சிந்தனை தேவைப்படுகிறது. அதற்கு செஸ் விளையாட்டு உதவக்கூடும்.

தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலும் செஸ் விளையாட்டு குறித்த ஆா்வத்தை ஏற்படுத்த இருக்கும் மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி தொடங்க இருக்கும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்பை மாமல்லபுரத்துக்கு ஏற்படுத்த இருக்கிறது.

தமிழகத்தில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுவதன் மூலம் மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், கிராமங்கள் வரை அந்த விளையாட்டு குறித்த விழிப்புணா்வும், ஆா்வமும் அதிகரிக்கும் என்கிற அளவில் இதை நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com