அரசியல் பிழைத்தோர்க்கு...| மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது குறித்த தலையங்கம்

அரசியல் பிழைத்தோர்க்கு...| மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது குறித்த தலையங்கம்
Updated on
2 min read

சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக, மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி மகாராஷ்டிரத்தில் உள்ளது. இங்கு மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நவாப் மாலிக். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை மாநகரத் தலைவரும் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் ஆவார். 1996 முதல் 2019 வரை - இடையே 2014 ஆம் ஆண்டு தவிர்த்து - தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருபவர். மாநிலத்தில் உள்ள கூட்டணி அரசின் முக்கியமான புள்ளி இவர்தான்.
 இவர் மீது முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பல ஆண்டுகளாக ஊழல் புகார்களைக் கூறி வருகிறார். குறிப்பாக, மும்பை புறநகரான குர்லாவில் உள்ள பிரதானமான இடத்தில் சுமார் 2.8 ஏக்கர் நிலத்தை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து 1999-இல் நவாப் மாலிக் வாங்கியதாக பட்னவிஸ் குற்றம் சாட்டுகிறார்.
 பல கோடி மதிப்பிலான நிலத்தை மிகக்குறைந்த விலையில் வாங்கியதாகவும், இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, சிவசேனை கட்சியும் நவாப் மாலிக்கிற்கு எதிராக இதே புகாரை முன்வைத்திருந்தது.
 பிரபல பாலிவுட் நடிகரான ஷாரூக் கானின் புதல்வர் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக். 3 அன்று, மும்பை அருகே உல்லாசக் கப்பலில் கைது செய்யப்பட்டபோது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி சமீர் வான்கடேவுக்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானவர் நவாப் மாலிக். அதற்காக, கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் மன்னிப்புக் கோரினார். இவரது மருமகன் சமீர் கானும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி 8 மாதங்கள் சிறையில் இருந்தவர்தான்.
 நவாப் மாலிக் மீதான பணமோசடி குற்றச்சாட்டு 1999-இல் இருந்தே கூறப்பட்டு வந்தாலும், அண்மையில்தான் இவ்வழக்கு விறுவிறுப்படைந்தது. அதுவும் கடந்த பிப். 23-ஆம் தேதி அமைச்சர் நவாப் மாலிக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அவரைக் கைது செய்தது. அவரது விசாரணைக் காலம் மார்ச் 3-இல் முடிகிறது.
 சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் அமைச்சர் மாலிக் உடனே பதவி விலக வேண்டும் என்று பாஜக கோருகிறது. மாறாக, எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து விசாரணை அமைப்புகளை முடுக்கிவிட்டு அதிகார துஷ்பிரயோகத்தில் மத்திய அரசு ஈடுபடுவதால், அமைச்சர் பதவி விலக மாட்டார் என்கிறது மகா விகாஸ் அகாடி கூட்டணி.
 மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, தேசியப் புலனாய்வு முகமை ஆகியவற்றின் உதவியுடன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள தனது எதிரிகளை பாஜக குறி வைத்து தாக்குவதாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநில அமைச்சர் பாலாசாகேப் தோரட் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும், சிவசேனை தலைவர் சஞ்சய் ரெளத்தும் அமைச்சர் மீதான நடவடிக்கையைக் கண்டித்திருக்கிறார்கள்.
 இதுபோன்ற எதிர்க்கட்சியினரின் புகார்கள் புதியவை அல்ல. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் மீது மாநில கூட்டுறவு வங்கி ஊழலில் தொடர்புடைய பண மோசடி வழக்கு 2019-இல் பதிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன், உ.பி. மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் நண்பர்கள் வீட்டில் திடீர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வருமானத்துக்கு மீறிய வகையில் ரூ.75 கோடி சொத்து குவித்ததாக 2020 அக்டோபரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவரை கைது செய்தது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வரின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி நிலக்கரி ஊழல் வழக்கில் சிபிஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு 2021 பிப்ரவரியில் அவர்மீது வழக்கு பதியப்பட்டது.
 ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசேன் கெலாட் மீது உர மோசடி வழக்கு 2020 ஜூலையில் பதிவானது. ஜம்மு - காஷ்மீர் மூத்த காங்கிரஸ் தலைவர் தாஜ் மொஹிதீன் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு 2020 நவம்பரில் சிபிஐ-யால் பதிவு செய்யப்பட்டது. கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு மிகவும் நெருக்கமான ஸ்வப்னா சுரேஷ் மீது தங்கக் கடத்தல் வழக்கு தீவிரமாக நடந்து வருகிறது.
 அரசியல்வாதிகள் மீதுள்ள வழக்குகளில் சட்டம் தன் கடமையைச் செய்துதான் ஆக வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை, அரசியல் எதிரிகளால் தாங்கள் வேட்டையாடப்படுவதாக மக்கள் மன்றத்தில் முறையிட முடியும். அதற்கான வாய்ப்பை நமது மக்களாட்சி முறை அளித்திருக்கிறது. ஆனால், அரசியல் தலைவர்கள் தங்கள் மனசாட்சிக்குப் பயந்தே ஆக வேண்டும்.
 ஊழல் புகார்களுக்குக் காரணமாகிவிட்டு, அதை அரசியல் பழிவாங்கலாக திசைதிருப்புவது, பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு அழகல்ல. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதை அரசியல்வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com