காத்திருக்கும் முதலீட்டாளர்கள்! | எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு குறித்த தலையங்கம்

காத்திருக்கும் முதலீட்டாளர்கள்! | எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு குறித்த தலையங்கம்

இந்திய அரசு நடத்தும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப்பங்கு வெளியீடு, சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக தாமதமாகி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் போர் உலகளவில் முதலீட்டாளர்களின் உணர்வைச் சீர்குலைத்துள்ளது. மேலும், இந்திய சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீடுகளை தொடர்ந்து திரும்பப் பெற்று வருகின்றனர். அவர்கள் கடந்த அக்டோபரில் இருந்து இதுவரை, நிகர விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர்.
 பிப்ரவரியில் மட்டும் பங்குச்சந்தையில் இருந்து ரூ.45,700 கோடிக்கு மேல் திரும்பப் பெற்றுள்ளனர். ஜனவரியில் ரு.41,346 கோடி, டிசம்பரில் ரூ.35,494 கோடி, நவம்பரில் ரூ.39,902 கோடி, அக்டோபரில் ரூ.25,572 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர். இம்மாதத்தில் (மார்ச்) இதுவரை ரூ.43,303 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
 நிறுவனப் பங்குகள் நல்ல ஆதாயத்துடன் செயல்பட வேண்டும் என்றால், உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் ஆதரவு அவசியம் தேவை. அது இல்லாமல் இருந்தால் பங்குகள் மீதான நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்துவிடும். பங்கின் விலையும் வெகுவாக வீழ்ச்சியடைந்து, கீழ்நோக்கி மட்டுமே செல்லும். முன்மொழியப்பட்ட எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிதாக இருக்கும். எனவே, அதைச் சரியாக செயல்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். எல்ஐசி ஐபிஓவைக் கருத்தில் கொண்டு, சுமார் 1 கோடி பாலிசிதாரர்கள் டீமேட் கணக்குகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
 எல்ஐசி ஐபிஓ வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, அரசின் 2022 நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கான ஜிடிபியில் 6.4 சதவீதத்துக்கு முக்கியமானதாகும். மேலும், மதிப்பிடப்பட்ட ரூ.63,000 கோடி திரட்டப்பட வேண்டும். அது ஒத்திவைக்கப்பட்டால், நடப்பு நிதியாண்டின் பங்கு விலக்கல் இலக்குகளை எட்ட முடியாது. இது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். குறிப்பாக, 2023 நிதியாண்டில் அதிகக் கடன்களுக்கு வழிவகுக்கும். எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படலாம்.
 எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் 5 சதவீதத்தை பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 5% பங்குகளை ஊழியர்களுக்கும், 10% ஐ பாலிசிதாரர்களுக்கும் விற்பனை செய்ய எல்ஐசி திட்டமிட்டுள்ளது. எல்ஐசி நிறுவனம் 31 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 885 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. ஒவ்வொரு பங்கின் முகமதிப்பு ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதற்கிடையே, எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டுக்கான இறுதி வரைவறிக்கையை மத்திய அரசு, "செபி'யிடம் விரைவில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த இறுதி ஆவணங்களில்தான், எல்ஐசி ஒரு பங்கின் விலை, சில்லறை வர்த்தகர்கள், பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு எத்தனை சதவீதம், எவ்வளவு தள்ளுபடி, எத்தனை பங்குகளை விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படும். ஆனால், பங்குச்சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. ஒருநாள் வர்த்தகம் ஏற்றத்தில் முடிகிறது; மறுநாள் கீழே சென்று முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. ஆதலால், பங்குச்சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
 எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு வரவுள்ள நிலையில், டிசம்பருடன் முடிந்த 3-ஆவது காலாண்டில், அந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.234.91 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் 15-ஆம் தேதிக்குள்ளாக எல்ஐசி ஐபிஓ வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷியா - உக்ரைன் போரால் பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்த நேரத்தில் எல்ஐசி ஐபிஓவை வெளியிட்டால், எதிர்பார்க்கும் நிதி கிடைக்காது என்பதால் மத்திய அரசு மெளனம் காத்து வருகிறது.
 இந்தச் சூழலில், நிகழ் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் எல்ஐசி நிறுவனத்திற்கு ரூ.234.91 கோடி நிகர லாபமாகக் கிடைத்துள்ளது. இந்த நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் எல்ஐசி நிறுவனத்தின் லாபம் ரூ.1,642.87 கோடியாக அதிகரித்துள்ளது. இவை, பங்குகளை வாங்குவதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும்.
 பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி எல்ஐசி வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த வரைவு ஆவணங்களுக்கு "செபி' அண்மையில் அனுமதி அளித்தது. இந்த ஐபிஓ மூலம் மத்திய அரசு ரூ.63 ஆயிரம் கோடி முதல் ரூ.75ஆயிரம் கோடிவரை திரட்டி, நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. எல்ஐசி ஐபிஓ மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு பேடிஎம் ஐபிஓ மூலம் ரூ.18,300 கோடி நிதி திரட்டப்பட்டது. ஆனால், சந்தையில் ரூ.1,955-இல் பட்டியலான பேடிஎம், பலத்த அடி வாங்கி தற்போது ரூ.776-இல் உள்ளது.
 ஒரு நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், கணிசமான சந்தை பணப்புழக்கம் தேவை. ஆனால், தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டால், அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. இந்த நிதியாண்டிற்குள் எல்ஐசியை பட்டியலிடுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், அதனை நேரமும் காலமும்தான் முடிவு செய்யும். ஆனாலும், எல்ஐசி ஐபிஓ-வுக்காக முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com