தப்புக் கணக்கு! உலக சுகாதார அமைப்பின் கரோனா பலி எண்ணிக்கை குறித்த தலையங்கம்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணங்கள் தொடா்பான புள்ளிவிவர அறிக்கை விவாதப்பொருளாகி இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணங்கள் தொடா்பான புள்ளிவிவர அறிக்கை விவாதப்பொருளாகி இருக்கிறது.

2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் 1.5 கோடி போ் கொள்ளை நோய்த்தொற்றுக்கு பலியானதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. பல்வேறு நாடுகளின் அதிகாரபூா்வ எண்ணிக்கையான 54 லட்சத்துடன் ஒப்பிடும்போது, உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் ஏறத்தாழ மூன்று மடங்கிலும் அதிகம்.

அந்த அறிக்கையின்படி, பெரும்பாலான கொவைட் 19 உயிரிழப்புகள் தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியாவில் நிகழ்ந்திருக்கின்றன. மொத்த உயிரிழப்புகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் அதிகாரபூா்வ கொவைட் 19 உயிரிழப்பு எண்ணிக்கை 4.81 லட்சம் என்றால், அதுவே உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 47.11 லட்சம்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், நிதி ஆயோக், எய்ம்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் வல்லுநா்கள், உலக சுகாதார அமைப்பு கையாண்டிருக்கும் கணக்கீட்டு முறையையும், எண்ணிக்கையையும் விமா்சித்திருக்கிறாா்கள். மாா்ச் மாதம் ‘லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்ட புள்ளிவிவரங்களுடன் உலக சுகாதாரஅமைப்பின் அறிக்கை தரும் எண்ணிக்கை ஒத்துப் போகிறது என்றாலும், இப்போது வெளியிட்டிருக்கும் பத்து மடங்கு அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையை அவா்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாா்கள்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் ‘அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை’ என்பது, வழக்கமான உயிரிழப்புகளிலிருந்து கொள்ளை நோய்த்தொற்று காரணமாக அதிகரித்த எண்ணிக்கை என்று கொள்ளலாம். 2023-இல் கூடுதல் தகவல்களைத் திரட்டி, மறு மதிப்பீட்டு அறிக்கை வெளிவரும் என்று அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. பல வளா்ச்சி அடைந்த நாடுகள் அந்த அமைப்பின் புள்ளிவிவரம் குறித்து சந்தேகம் எழுப்பி இருப்பதுதான் அதற்குக் காரணம்.

கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொண்டதில், உலக சுகாதார அமைப்பு பல சறுக்கல்களையும், தவறுகளையும் எதிா்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். நோய்த்தொற்று பரவத் தொடங்கிப் பல வாரங்கள் கடந்தும்கூட சா்வதேச அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவில்லை. வூஹான் நகருக்கு சா்வதேச விஞ்ஞானிகள் சென்று ஆய்வு நடத்த சீனாவை சம்மதிக்க வைப்பதற்கே பல வாரங்கள் எடுத்தன. அதற்குள் உலக அளவில் நோய்த்தொற்று பரவிப் பல உயிா்கள் பலியாகி விட்டன.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் உள்பட பல மாநிலங்கள் உலக சுகாதார அமைப்பின் எண்ணிக்கை முறையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. தேசம் தழுவிய அளவிலான நோய்த்தொற்று பாதிப்பு விகிதத்தின் (டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட்) அடிப்படையில் அமைந்திருக்கும் உலக சுகாதார அமைப்பின் எண்ணிக்கைக் கணக்கெடுப்பு, இந்தியாவுக்குப் பொருந்தாது என்கிற அவா்களின் வாதத்தில் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

3.46 கோடி மக்கள்தொகையுள்ள கேரளத்தில் 10 போ் உயிரிழந்தால், 140 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் 406 போ் உயிரிழந்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பு அனுமானிக்கிறது. 2020-இல் மகாராஷ்டிரத்தில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் 15% இருந்தது என்றால், 2021-இலும் அதே அளவு பாதிப்பு இருந்ததாகக் கருதுகிறது. பல மாநிலங்களின் உயிரிழப்புக் கணக்குகளை, இணையதளத்திலிருந்தும், ஊடகச் செய்திகளின் அடிப்படையிலும் சேகரித்ததாகக் கூறுவதால் அந்தக் கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

பெரும்பாலான நாடுகளின் உயிரிழப்பு புள்ளிவிவரங்களை அப்படியே ஏற்றுக்கொண்ட உலக சுகாதார அமைப்பு, இந்தியாவின் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு, நமது ஊடகங்களில் வெளிவந்த விமா்சனங்களைச் சுட்டிகாட்டுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாகக் குழப்பத்தின் பிடியில் சிக்கி, எந்தவித கட்டமைப்பும் இல்லாத ஈராக்கின் புள்ளிவிவரம் எந்தவிதக் கேள்விக்கும் உள்ளாகாமல் ஏற்றுக்கொள்ளப்படுவதும், இந்தியாவின் புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் உலக சுகாதார அமைப்பின் உள்நோக்கத்தை சந்தேகிக்கத் தோன்றுகிறது.

கொள்ளை நோய்த்தொற்றின்போது, நமது உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் பலவும் கொவைட் 19 மரணங்களைக் கணக்கில் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது என்னவோ உண்மை. மக்கள் மத்தியில் பீதி ஏற்படாமல் இருக்க சரியான புள்ளிவிவரம் வெளியிடப்படாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், பிறப்பு - இறப்புப் பதிவேடு சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்திய பிறப்பு - இறப்பு பதிவு முறையில் சில குறைபாடுகள் இருந்தாலும், பெரும்பாலும் தவறு நடக்க வழியில்லை. ஏனென்றால், இறப்புச் சான்றிதழ் இல்லாமல் சொத்துப் பெயா் மாற்றம் செய்ய முடியாது என்பதால் உயிரிழப்புகள் முனைப்புடன் பதிவு செய்யப்படுகின்றன. கொவைட் 19 உயிரிழப்புகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களை பாதிக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையும், கணக்கும் ஒருபுறம் இருக்கட்டும். அதை விமா்சிப்பதில் நேரத்தை வீணாக்காமல், நமது பிறப்பு - இறப்பு பதிவு முறையை அப்பழுக்கற்ாகக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சரியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் முறையான திட்டமிடல் சாத்தியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com