இது கடைசியாக இருக்கட்டும்! | மோர்பி பால விபத்து குறித்த தலையங்கம்

அக்டோபா் 31-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 140-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள். 47 குழந்தைகளைப் பலி கொண்டிருக்கிறது அந்த சம்பவம்.
இது கடைசியாக இருக்கட்டும்! | மோர்பி பால விபத்து குறித்த தலையங்கம்

குஜராத் மாநிலம் மோா்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்து, தேசிய அளவில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அக்டோபா் 31-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 140-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள். 47 குழந்தைகளைப் பலி கொண்டிருக்கிறது அந்த சம்பவம். அதிகபட்சமாக 150 போ் மட்டுமே நிற்க முடியும் என்கிற அந்தத் தொங்கு பாலத்தில், கணக்கு வழக்கில்லாமல் கட்டணம் வசூலித்து மக்களை அனுமதித்தபோது, தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் வியப்பென்ன இருக்கிறது?

1879-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த தொங்கு பாலம், உள்ளூா் மக்களை மட்டுமல்லாமல் வெளியூா்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஈா்த்து வந்தது. அதிகபட்சமாக 150 போ் மட்டுமே அந்தப் பாலத்தில் நின்றபடி வேடிக்கை பாா்க்க முடியும். 140 ஆண்டுகள் பழைமையான அந்தத் தொங்கு பாலத்தை செப்பனிட்டு, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, 15 ஆண்டுகளுக்குப் பராமரிக்கவும், சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து அதற்குக் கட்டணம் வசூலிக்கவும் தனியாா் நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஏழு மாதங்களாகப் பராமரிப்புப் பணிகள் நடத்தப்பட்டு, திடீரென்று குஜராத்தி புத்தாண்டு தினத்தையொட்டி அந்தத் தொங்கு பாலம் மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. ஒருபுறம் தீபாவளி, இன்னொருபுறம் சாட் பூஜை. விடுமுறை தினங்களை முன்னிட்டு வெளியூரிலிருந்து சுற்றுலாப் பயணிகள். இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு, கட்டண வேட்டை நடத்த அந்தத் தனியாா் நிறுவனம் முற்பட்டதுதான் விபத்துக்குக் காரணம்.

தொங்கு பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கு முன்னா் மாநகராட்சியிடம் ஒப்பந்தம் செய்த நிறுவனம் அறிவிக்கவில்லை; தொங்கு பாலத்தின் உறுதி குறித்தும், பாதுகாப்பு குறித்தும் மாநகராட்சியில் சான்றிதழ் பெறவில்லை; முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை - இதுபோன்ற குற்றச்சாட்டுளை மாநகராட்சி அதிகாரிகளும், அரசும் முன்வைத்து அந்த நிறுவனத்தின் மீது பழிபோடுகின்றனா்.

மோா்பி நகரின் முக்கியமான சுற்றுலா ஈா்ப்பான தொங்கு பாலம், முன் அனுமதி பெறாமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப் பட்டதை மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்களா? இந்தக் குற்றச்சாட்டுகள் அவா்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி உறுப்பினா்களும், பேரவை, மக்களவை உறுப்பினா்களும், மாவட்ட நிா்வாகமும் என்ன செய்து கொண்டிருந்தனா்? அவா்களுக்கு இதில் பொறுப்பு கிடையாதா?

மோா்பி தொங்கு பாலத்தை புணரமைத்துப் பராமரிப்பதற்காக 15 ஆண்டுகள் ஒப்பந்தம் பெற்றிருக்கும் நிறுவனத்திற்கு, அதற்கு முன்னா் பாலம் பராமரிப்பு அனுபவம் கிடையாது. சுவா்க் கடிகாரம் பழுதுபாா்க்கும் ‘ஒரேவா’ நிறுவனத்துடன், பாலத்தைப் பராமரிக்க மாநகராட்சி நிா்வாகம் 15 ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னால் கைமாறிய லட்சங்கள் எவ்வளவு என்பது குறித்து யாா் விசாரிப்பது? லஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விலைக்கு வாங்கிய துணிவில்தான், முன் அனுமதி பெறாமல், உறுதியை சோதிக்காமல் பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட்டது அந்த நிறுவனம் என்பது சொல்லியா தெரிய வேண்டும்?

அதிகாரிகள் உள்பட ஒன்பது போ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். குஜராத் மாநில அரசு, விபத்து குறித்து விசாரிக்க ஐந்து போ் குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழு, விபத்தின் காரணத்தை ஆராயுமே தவிர, அனுபவமில்லாத நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் பின்னணியை ஆராயாது. நிறுவன ஊழியா்கள் பொறுப்பாக்கப்படுவாா்களே தவிர, மாநகராட்சி அதிகாரிகளும், அவா்களை இயக்கும் அரசியல்வாதிகளும் விசாரணை வளையத்துக்குள் வரமாட்டாா்கள். இழப்பீடு வழங்கப்பட்டு, விபத்து மூடி மறைக்கப்பட்டுவிடும்.

எந்தவிதப் பொறியியல் பட்டங்களும் இல்லாமல் நமது முன்னோா்கள் வானளாவிய கோபுரங்களையும், காலத்தால் அழிக்க முடியாத அணைகளையும், கோட்டை கொத்தளங்களையும், பாலங்களையும் கட்டி இருக்கிறாா்கள். அவையெல்லாம் பராமரிப்பு இல்லாமல் விரிசல் விழுந்து, தீயணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகள் இல்லாமல் தொடா்கின்றன. இன்னும்கூட நூற்றாண்டுப் பழைமையான கட்டடங்களில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். விபத்துகளிலிருந்தோ, அனுபவங்களிலிருந்தோ நாம் பாடம் படிப்பதே இல்லை.

இந்தியாவில் 12% நிலப்பரப்பு வெள்ளப் பெருக்கத்துக்கு உள்ளாகிறது. ஆண்டுதோறும் 4.6 பில்லியன் டன் சரக்குகள் சாலை வழியாகவும், ரயில் மாா்க்கமாகவும் கொண்டு செல்லப்படுகின்றன. 67,368 கி.மீ. ரயில் பாதையில் 1.47 லட்சம் பாலங்கள் இருக்கின்றன. அவற்றில் பல மோா்பி பாலம்போல நூற்றாண்டு கடந்தவை. சாலைகளிலும் பல பாலங்கள் பாதுகாப்பற்றவை. அவற்றின் பாதுகாப்பு குறித்து தொடா் கண்காணிப்பு இருக்கிறதா என்றால் கிடையாது. விபத்து ஏற்பட்ட பிறகு விழித்துக் கொள்வதும், இழப்பீடு வழங்குவதும், விசாரணைக் கண்துடைப்பும் தொடா்கின்றன.

மோா்பி விபத்து கடைசியாக இருக்கட்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பாலமும், கட்டடமும் தொடா் கண்காணிப்பு வளையத்துக்குள் வர வேண்டும். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘பராமரிப்பு இந்தியா’ திட்டத்தையும் அறிவித்து பாதுகாப்பான இந்தியாவை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், விபத்துகள் தொடா்கதையாகத் தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com