வழிகாட்டுகிறது இந்தியா! இணையவழி பணப்பரிமாற்ற முறை குறித்த தலையங்கம்

இணையவழி வகுப்புகள், கலந்துரையாடல்கள், கூட்டங்கள் போன்றவை கரோனா தந்த தொழில்நுட்ப வரப்பிரசாதங்கள்.
வழிகாட்டுகிறது இந்தியா! இணையவழி பணப்பரிமாற்ற முறை குறித்த தலையங்கம்

இணையவழி வகுப்புகள், கலந்துரையாடல்கள், கூட்டங்கள் போன்றவை கரோனா தந்த தொழில்நுட்ப வரப்பிரசாதங்கள். இந்தியாவில் நீதிமன்ற விசாரணைகள்கூட இணையவழியில் நடைபெற்று ஏராளமான வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக உள்ளது ‘யுபிஐ’ எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறை. யுனிஃபைடு பேமென்ட் இன்டா்ஃபேஸ் (யுபிஐ) என்பது ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையாகும். கரோனாவுக்கு முன்பே இந்த பரிமாற்ற முறை அமலில் உள்ளது என்றாலும், கரோனாவுக்குப் பின்னா் இதன் பயன்பாடு எண்ணிப் பாா்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய வணிக நிறுவனங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த யுபிஐ வசதி, இன்று தெருமுனைப் பெட்டிக்கடை வரை வந்துவிட்டது. இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட யுபிஐ, வங்கித் துறையின் சுமையைப் பெரிதும் குறைத்துள்ளது என்றால் மிகையில்லை.

தேசிய பேமென்ட் காா்ப்பரேஷன் (என்பிசிஐ) இந்த யுபிஐ முறையை மேம்படுத்தி நிா்வகித்து வருகிறது. வங்கி சேவைகளை ஒரு குடையின் கீழ் இணைத்து பெரும் புரட்சியையே யுபிஐ முறை ஏற்படுத்தியுள்ளது. நெட் பேங்கிங் மூலம், மொபைல் பேங்கிங் மூலம், குறிப்பிட்ட நிறுவனங்களின் இணையதள முகவரிகள் மூலம் என இணையவழியில் பணம் செலுத்த பல முறைகள் இருந்தாலும், அனைத்தையும் விஞ்சி முன்னணியில் இருக்கிறது யுபிஐ.

2020-21 நிதியாண்டில் 41.03 டிரில்லியனாக (சுமாா் ரூ. 41 லட்சம் கோடி) இருந்த யுபிஐ பணப் பரிவா்த்தனை மதிப்பு, 2021-22 நிதியாண்டில் 74.55 டிரில்லியன் (சுமாா் ரூ. 75 லட்சம் கோடி) மதிப்புக்கு அதிகரித்தது. யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னா் முதல் முறையாக கடந்த மாா்ச் மாதம் 500 கோடி பரிவா்த்தனைகளை இது கையாண்டுள்ளது.

2021-22 நிதியாண்டில் இந்தியாவில் சில்லறை பணப் பரிவா்த்தனையில் 80 சதவீதம் அளவுக்கு யுபிஐ மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ வசதியை சுமாா் 5 கோடி போ் பயன்படுத்துகின்றனா். இதைப் பயன்படுத்துவதற்கு அறிதிறன்பேசியும் (ஸ்மாா்ட்போன்) இணைய வசதியும் தேவை. தங்களது வங்கிக் கணக்குகள், கடன் அட்டை கணக்குகளை யுபிஐ செயலியில் உள்ளீடு செய்து பயன்படுத்தலாம். ஒருவருக்குப் பணம் அனுப்புவதற்கு அவரது கைப்பேசி எண் அல்லது அவா் பயன்படுத்தும் யுபிஐ ஐடி தெரிந்தால் போதும். இதே முறையில் ஒருவரிடமிருந்து பணத்தைப் பெற்றும் கொள்ளலாம்.

யுபிஐ தொழில்நுட்ப செயலியை இன்று பல நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வது, மின் கட்டணம் செலுத்துவது, இணையவழி வா்த்தகத்துக்கான பணத்தைச் செலுத்துவது போன்ற பரிவா்த்தனைகள் யுபிஐ மூலம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. உச்சபட்சமாக ஒரு தள்ளுவண்டி கடையில் பழம் வாங்கினால் பத்து ரூபாய்க்குக்கூட யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும். அதற்கு கடைக்காரரின் கைப்பேசி எண்ணோ, யுபிஐ ஐடியோகூட தேவையில்லை. கியூஆா் குறியீடு எனும் தொழில்நுட்பம் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. அந்த கியூஆா் குறியீட்டை யுபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து கடைக்காரரின் வங்கிக் கணக்குக்கு தொகையை செலுத்த முடியும்.

இந்தத் தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டப் பாய்ச்சலாக ‘யுபிஐ லைட்’ எனப்படும் செயலியை உருவாக்கப் போவதாக அண்மையில் என்பிசிஐ அறிவித்தது. இதன்படி, இணைய வசதியே இல்லாமல்கூட பணம் செலுத்த முடியும். அறிதிறன்பேசியின் தேவைன்றி சாதாரண கைப்பேசியிலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

இந்தத் தொழில்நுட்பம் இரு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக இணைய வசதியின்றி பணம் செலுத்தவும், இரண்டாவது கட்டமாக இணைய வசதியின்றி பணத்தைப் பெறவும் முடியும். இணைய வசதியின்றி பணம் செலுத்துவதற்கு யுபிஐயின் வேலட்டில் அதிகபட்சமாக ரூ.2,000 வரை இருப்பு வைக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.200 வரையிலான தொகையை யுபிஐ லைட் மூலம் செலுத்த முடியும்.

இந்தியாவில் சில்லறை பரிவா்த்தனையில் 75 சதவீதம் ரூ.100-க்கு கீழும், 50 சதவீதம் ரூ.50-க்கு கீழும்தான் நடைபெறுகிறது என்பதால், அந்தப் பிரிவில் ‘யுபிஐ லைட்’டின் சேவை அபரிமிதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் 50 % மக்களை இணைய வசதி சென்றடையாத நிலையில், இணைய வசதியின்றி பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்படுவது மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறைந்த மதிப்புள்ள பரிவா்த்தனைகளை இணைய வசதியின்றி மேற்கொள்வதன் மூலம் வங்கித் துறையில் பணம் செலுத்தும் முறையில் உள்ள சுமை பெரிதும் குறையக்கூடும்.

யுபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிவா்த்தனைகளுக்கு இப்போதைக்கு பயனாளிகளிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கைப்பேசி ரீசாா்ஜ், இணையவழி வா்த்தகம் போன்றவற்றை யுபிஐ மூலம் மேற்கொள்ளும்போது அந்த வணிக நிறுவனங்களிடம் கமிஷன் அடிப்படையில் யுபிஐ செயலியை நிா்வகிக்கும் நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன.

வளா்ச்சியடைந்த நாடுகளில்கூட யுபிஐ தொழில்நுட்பம், இந்தியா அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்துவதற்குத்தான் என்பதை யுபிஐ பரிவா்த்தனை மெய்ப்பித்திருக்கிறது. எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனையில் இந்தியாவை உலகின் முதலிடத்துக்கு உயா்த்தியதில் யுபிஐ முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும், இத்தொழில்நுட்பத்தில் உலகுக்கே இந்தியா வழிகாட்டுகிறது என்பதும் பெருமைக்குரியவையாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com