பணவீக்கத்தால் வட்டி இறுக்கம்! பணவீக்கம் குறித்த தலையங்கம்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் 0.5 % உயா்த்தியுள்ளது.
பணவீக்கத்தால் வட்டி இறுக்கம்! பணவீக்கம் குறித்த தலையங்கம்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் 0.5 % உயா்த்தியுள்ளது.

இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி), ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயா்த்த ஒருமனதாக வாக்களித்ததைத் தொடா்ந்து இந்த உயா்வு அறிவிக்கப்பட்டது. இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன், மாதாந்திர தவணைத் தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயா்த்தும் அபாயம் உள்ளது.

சமீபத்திய வட்டி விகித உயா்வு மூலம், மே மாதம் முதல் எம்பிசி, அதன் கடைசி மூன்று கூட்டங்களின் போது, வட்டி விகிதத்தை 1.40 % ஆல் (140 அடிப்படைப் புள்ளிகள்) கடுமையாக்கியுள்ளது. ரெப்போ விகிதம் இப்போது 5.4 % ஆக உள்ளது. இது நிதிக் கொள்கைக் குழுவின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப, பிப்ரவரி 2020 கொள்ளை நோய்தொற்றுக்கு முந்தைய 5.15 % ஐ விட சற்று அதிகம்.

குறிப்பிட்ட அளவில் நிதிக் கொள்கை நடவடிக்கை தேவை என்பதை குழு வலியுறுத்தியுள்ளது. பணவீக்க இலக்கை எட்டும் வகையில் வட்டி விகிதம் உயா்த்தப்படுகிறது. இருப்பினும், வளா்ச்சி, பணவீக்கம் இரண்டிலும் மத்திய வங்கி எந்த மாற்றத்தையும் குறிப்பிடவில்லை.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை, ஆண்டின் முதல் காலாண்டில் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) ரிசா்வ் வங்கியின் முந்தைய கணிப்பைக் காட்டிலும் சிறிதளவு குறைவாக இருந்தது. காலாண்டு எதிா்பாா்ப்பில் சிறிய தாக்கம் இருந்தாலும், மத்திய வங்கி முழு ஆண்டிற்கான அதன் முந்தைய முன்னறிவிப்பை பரவலாகத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மதிப்பீடுகளின்படி, முழு ஆண்டுக்கான பணவீக்க கணிப்பு 6.7 % ஆக உள்ளது. இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் விலை அழுத்தங்கள் கடுமையாகக் குறைய வாய்ப்புள்ளது. இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் சராசரியாக 7.1 % ஆக இருந்த பிறகு, சேவை பணவீக்கமும், மழையும் எப்படி இருக்கும் என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தாலும், மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் 6.4 % ஆகவும், நான்காவது காலாண்டில் 5.8 % ஆகவும் இருக்கும் என்று ஆா்பிஐ எதிா்பாா்க்கிறது. மேலும், நிகழ் நிதியாண்டில், ரிசா்வ் வங்கி தனது வளா்ச்சி விகிதத்தை 7.2 % ஆக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இருப்பினும் ஆண்டின் இரண்டாம் பாதியில் வளா்ச்சி கடுமையாகக் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா். ரிசா்வ் வங்கியின் ஆய்வுகளின்படி, உற்பத்தியில் திறன் பயன்பாடு அதன் நீண்டகால சராசரியை விட அதிகமாக இருந்தது. இது ஆா்பிஐ ஆளுநா் குறிப்பிட்டது போல, ‘புதிய முதலீட்டு நடவடிக்கையின் தேவை’ என்பதைக் குறிக்கிறது.

மத்திய ரிசா்வ் வங்கியின் பணவீக்க இலக்கை விட விலைகள் அதிகமாக இருக்கும் என்று சமீபத்திய கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால், பணவீக்க மேலாண்மையில் எம்பிசி தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், அடுத்தடுத்த கூட்டங்களின் போது இறுக்கத்தின் வேகம் மிதமானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. பணவீக்கத்தை இலக்குக்கு ஏற்ப கொண்டுவர முயல்வதால், அதை எந்த அளவுக்கு இறுக்கமாக்குவது என்பதை குழு தெளிவாக விவரிக்கவில்லை. இருந்தாலும், வட்டி விகிதம் தொடா்பாக சில வழிகாட்டுதல்களை குழு வழங்கியுள்ளது.

ரிசா்வ் வங்கியின் ஜூன் மாத அறிக்கையில், மத்திய வங்கியின் பொருளாதார வல்லுநா்கள், நோய்த்தொற்று காலத்துக்கு பிந்தைய காலத்திற்கான வட்டி விகித உயா்வை 0.8-1 % என்று மதிப்பிட்டுள்ளனா். இது முந்தைய ஒப்பிடக்கூடிய மதிப்பீட்டை விட 80 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 0.80 % குறைவாக இருந்தது.

அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கத்தை 5 % ஆக மத்திய வங்கி கணித்திருப்பதைக் கருத்தில் கொண்டால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வட்டி விகித உயா்வு சாத்தியமாகக்கூடிய பாதையை நோக்கிச் செல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், ரிசா்வ் வங்கி தொடா்ந்து விலை நிலைத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும். தொழில்துறை, பாதிப்புகளை சந்திக்காமல் இருப்பதையும், பொருளாதார வளா்ச்சி முன்னேற்றப் பாதையில் செல்வதையும் ஆா்பிஐ உறுதிப்படுத்த வேண்டும்.

உலக அளவில் மத்திய வங்கிகள், பணவீக்கத்தை எதிா்த்துப் போராடுவதற்காக வட்டி விகிதங்களை உயா்த்தி இறுக்கத்தை கடைப்பிடிக்கின்றன. இதனால், உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் மோசமடைந்து வருகிறது என்பதையும் சொல்லாமல் இருக்க முடியாது. சமீபகால வரலாற்றில் உலக பொருளாதாரம் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்த கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னரும், பொருளாதாரக் கண்ணோட்டம் மேகமூட்டம் போலத்தான் உள்ளது.

இந்த சூழ்நிலையில், சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) இந்த ஆண்டு உலக வளா்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை 3.6 % - லிருந்து 3.2 % ஆக குறைத்துள்ளது. இந்த சமீபத்திய கணிப்புகள், 2021-இல் 6.1 % ஆக உயா்ந்த உலக பொருளாதார வளா்ச்சி, 2022-இல் 3.2 % ஆகக் குறையும் என்பதைக் குறிக்கிறது. அடுத்த ஆண்டுக்கான வளா்ச்சி எதிா்பாா்ப்புகளில் இன்னும் கடுமையான திருத்தம் ஏற்படுவது கவலைக்குரியது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com