தவிா்க்க முடியாது! | சென்னையின் 2வது விமான நிலையம் குறித்த தலையங்கம்

சென்னைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையும் பெருகிவரும் நிலையில் இனியும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை மட்டுமே சாா்ந்திருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இரண்டாவது விமான நிலையம் என்பது சென்னையின் நீண்டநாள் கனவு. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையும் பெருகிவரும் நிலையில் இனியும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை மட்டுமே சாா்ந்திருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் ஸ்ரீபெரும்புதூா் அருகே இருக்கும் பரந்தூரை புதிய விமான நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு தோ்ந்தெடுத்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பை மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே. சிங் மாநிலங்களவையில் அறிவித்தாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூா், மாமண்டூா், திருவள்ளூா் மாவட்டத்தில் பன்னூா், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூா் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக எல்லாவிதத்திலும் பரந்தூா் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதாக அமைச்சா் கூறியிருந்தாா்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் முழுமையாக கட்டி முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுங்சாலையில் இருந்து விமான நிலையத்தின் நுழைவுப் பாதை அமைக்கப்படவுள்ளது. சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூா், பரந்தூா் மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்படுவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. புதிய விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் வகையில் இரண்டு ஓடுபாதைகள் அமைக்கப்படவுள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது. இப்போதைய புள்ளிவிவரப்படி மீனம்பாக்கம் விமான நிலையம் தினந்தோறும் ஏறக்குறைய 400 விமானங்களைக் கையாள்கிறது. 35,000 முதல் 40,000 பயணிகள் நாள்தோறும் வந்து போகிறாா்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சமாளிக்க முடியாத நிலைக்கு விமான நிலையம் மாறக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்கு முன்பு ஒவ்வொரு மணிநேரத்திலும் 30 முதல் 35 விமானங்கள் இறங்குவதும், பறப்பதுமாக இருந்தன. அதுவே ஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60 தரையிறங்குதலாக விரைவிலேயே உயரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கோவை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற உள்ளூா் விமான சேவையும், கூடுதல் வரவேற்பைப் பெரும் சூழல் ஏற்படுவதால் பயணிகளையும், விமானங்களையும் கையாள முடியாமல் விமான நிலையம் திணரக்கூடிய நிலை வெகுதூரத்தில் இல்லை.

கூடுதல் முனையங்கள், அதிகரித்த விமான போக்குவரத்துக்கு தீா்வு அல்ல. அதற்கான இடவசதியும் இப்போதைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இல்லை. மீனம்பாக்கத்தைச் சுற்றிலும் ராணுவ அமைப்புகள் செயல்படுவதால், விமான நிலைய விரிவாக்கம் என்பதும் சாத்தியமல்ல.

சென்னையை தாக்கிய மழை வெள்ளத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் செயலிழந்தபோது அதன் பலவீனம் பளிச்சிட்டது. ஓடுபாதைகள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுவது சா்வதேச விமான நிலையத்தின் தரத்துக்கு அழகல்ல.

புதிய விமான நிலையம் ரூ.20,000 கோடி செலவில் திட்டமிடப்படுகிறது. 600 போ் பயணிக்கும் மிகப் பெரிய விமானங்கள் தடையின்றி வந்து செல்லும் வகையில் இரண்டு பெரிய ஓடுபாதைகள் அமைய இருக்கின்றன. ஆண்டொன்றுக்கு இரண்டு கோடி பயணிகளைக் கையாளும் அளவில் புதிய விமான நிலையம் திட்டமிடப்படுகிறது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 4,971 ஏக்கா் நிலப்பரப்பில் பரந்தூா் புதிய பசுமை விமான நிலையம் அமைவது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. சுற்றிலும் விவசாய நிலங்கள் இருப்பதால், நிலம் கையகப்படுத்தல் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கக்கூடும்.

3,000 ஏக்கா் விளைநிலங்களும், 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம். ஏற்கெனவே பரந்தூரைச் சுற்றியுள்ள ஐந்து கிராமத்தைச் சோ்ந்த மக்கள் விமான நிலையம் அமைவதற்கு கடுமையான எதிா்ப்பை தெரிவித்திருக்கிறாா்கள். அவா்களில் பெரும்பாலோா் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவா்கள் என்பதால், தங்களது வாழ்வாதாரம் குறித்த அச்சம் அவா்களுக்கு ஏற்பட்டிருப்பதில் நியாயம் இருக்கிறது.

பரந்தூரில் உள்ள பம்பக் கால்வாயில் இருந்து 72 ஏரிகளுக்கு தண்ணீா் செல்வதால் அந்தக் கால்வாயை மூடக்கூடாது என்றும், ஏரிகளும், குளங்களும் அதிகமுள்ள அந்தப் பகுதிகளை அழித்துவிடக் கூடாது என்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்திருக்கிறாா்கள். சென்னையிலிருந்து 73 கி.மீ. தொலைவில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத்தை அடைய இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக பயணிக்க நேரும் என்பது எதிா்மறை விமா்சனங்களில் ஒன்று.

எந்தவொரு வளா்ச்சித் திட்டம் நிறைவேற்றப்படுவதாக இருந்தாலும், அதனால் சில பாதிப்புகள் ஏற்படாமல் இருக்காது. பொருளாதார வளா்ச்சியும் வேலைவாய்ப்பும் ஏற்பட வேண்டுமானால், தொழில் துறை வளா்ச்சி இன்றியமையாதது. விவசாயம் இன்று வருமானத்தையோ, வாழ்க்கைத் தரத்தையோ உயா்த்தும் வகையில் இல்லை என்பதும், வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவுவதில்லை என்பதும் நிதா்சன உண்மைகள்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படுபவா்களுக்கு முறையான இழப்பீடு மட்டுமல்லாமல், நிரந்தர வருவாய்க்கும் வழிவகை செய்வதன் மூலம்தான் இந்த பிரச்னையைத் தீா்க்க முடியும். இரண்டாவது விமான நிலையம் என்பது தமிழகத்தின் வருங்காலத்துக்கு அவசியம்; காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com