கட்டுப்பாடற்ற காட்சி ஊடகங்கள்! | தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் குறித்த தலையங்கம்

கட்டுப்பாடற்ற காட்சி ஊடகங்கள்! | தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் குறித்த தலையங்கம்

அண்மையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா "சமீபகாலமாக, முக்கியத்துவம் வாய்ந்த, பரபரப்பான விஷயங்களில் ஊடகங்கள் நீதிமன்றங்கள்போல விசாரணை நடத்துகின்றன. இதனால், அனுபவம் வாய்ந்த நீதிபதிகள்கூட முடிவுகள் எடுப்பது கடினமாகி உள்ளது.
நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக அரைகுறை தகவல்களுடன், உள்நோக்கத்துடன் கூடிய விவாதங்கள் ஜனநாயகத்துக்கு பாதகமாக அமைகின்றன. ஊடகங்களால் பரப்பப்படும் ஒரு சார்பான கருத்துகள் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்வது மட்டுமின்றி, சீர்குலைப்பதாகவும் உள்ளன. இந்த விவகாரத்தில் அச்சு ஊடகங்கள் ஓரளவு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கின்றன. மின்னணு ஊடகங்கள் சிறிதளவும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதில்லை. சமூக ஊடகங்களின் நிலை அதைவிடவும் மோசம்' என்று வேதனையுடன் குறிப்பிட்டார். மேலும் அவர், "ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காவிடில், கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலைக்கு நீதித்துறை தள்ளப்படும்' என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விஷயத்தில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் சூழலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி துரதிருஷ்டவசமாக இறந்த துயர நிகழ்வை, சில சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொண்டு சமூக வலைதளங்களில் தகவல்களைப் பரப்பியதால் ஏற்பட்ட விபரீதத்தை கடந்த மாதம் கண்டோம்.
சமூக வலைதள தகவல்களையடுத்து அங்கு திரண்ட கும்பல் பள்ளியையே சூறையாடியது. 37 பள்ளிப் பேருந்துகள், கார்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட 67 வாகனங்கள், காவல்துறையின் பேருந்து, போலீஸாரின் இரு சக்கர வாகனங்கள் ஆகியவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தாக்குதலில் 108 போலீஸார் காயமடைந்தனர். அப்போதும் அடங்காத வெறி கொண்ட கும்பல், 3,200 மாணவர்களின் ஜாதி சான்றிதழ்கள், கல்வி மாற்றுச் சான்றிதழ்களை தீவைத்துக் கொளுத்தியது.
இது ஒரு புறமிருக்க, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அடூர் பிரகாஷ் "தொலைக்காட்சி விவாதங்களில் வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுவது குறித்தும், தரக்குறைவான விமர்சனங்கள் குறித்தும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் கேபிள் டிவி நெட்வொர்க் விதிகளை மீறியதாக 163 சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் - ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பதிலளித்தார்.
"தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில சம்பவங்களில் மன்னிப்பு கோரும்படி உத்தரவிடப்பட்டது. சில சம்பவங்களில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது' என்று அமைச்சர் விளக்கம் அளித்தார். இதே போன்று, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக போலி செய்திகளைப் பரப்பிய எட்டு யூடியூப் சேனல்களுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த யூடியூப் சேனல்கள், அரசால் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகவும், திருவிழா கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் நாட்டில் மத மோதல்கள் நடைபெறுவதாகவும் போலி செய்திகளைப் பரப்பி உள்ளன. இந்த எட்டு சேனல்கள் கூட்டாக 114 கோடி பார்வையாளர்களையும், 85.73 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தொலைக்காட்சியில் நடைபெறும் பெரும்பாலான விவாதங்கள் கூச்சல் களமாகவே மாறிவிட்டன. ஒருவர் கூறும் கருத்தை மற்றவர்கள் கேட்கும் குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல் பலரும் ஒரே நேரத்தில் கூச்சல் போடுகின்றனர். யார் அதிகம் கூச்சல் போடுகிறாரோ அவர் தன்னைத்தானே வெற்றியாளராக நினைத்துக் கொள்கிறார்.
இதுபோன்றதொரு விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா ஆவேசமாகப் பேசியது சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டார். நூபுர் சர்மாவின் கருத்துக்குப் பழிதீர்க்கும் விதமாக, இந்தியாவில் ஆளும் கட்சி உறுப்பினரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர்
ரஷியாவில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். நூபுர் சர்மா பேச்சு விவகாரம் இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
பார்வையாளர்களிடையே தங்கள் டிஆர்பி-யை அதிகப்படுத்திக் கொள்ளும் உத்தியாக சாதாரண செய்திகளைக்கூட தொலைக்காட்சி சேனல்கள் பரபரப்பாக்கி விடுகின்றன. ஒன்றுமே இல்லாத செய்திகளைக்கூட "பிரேக்கிங் நியூஸ்' என்று கூறி பரபரப்பாக்குகின்றன. இது போன்ற சேனல்களுக்கு கனியாமூர் பள்ளி போன்ற சம்பவம் வெறும் வாயை மெல்லுபவருக்கு அவல் கிடைத்தது போல ஆகிவிடுகிறது. இது போன்ற செய்திகளை ஒளிபரப்புவதால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு விநாடி நிகழ்வையும் நேரலையில் ஒளிபரப்புகின்றன. இதில் சேனல்களுக்கிடையே கடும் போட்டியே நிலவுகிறது.
சுய கட்டுப்பாடு இல்லாத தொலைக்காட்சி சேனலாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிவிடுபவர்களாக இருந்தாலும் சரி அதற்கு கடிவாளம் போட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com