கடத்தலும் காரணமும்! | தங்கம் கடத்தல் குறித்த தலையங்கம்

இந்தியா்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது.
கடத்தலும் காரணமும்! | தங்கம் கடத்தல் குறித்த தலையங்கம்

இந்தியா்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. பங்குச் சந்தையும், வங்கிகள் வழங்கும் வைப்புத் தொகைக்கான வட்டியும் லாபகரமான முதலீடாக இல்லை என்பதால், தங்கத்தின் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது. உலகிலேயே மிக அதிகமாக தங்கம் புழங்கும் தேசமாக இந்தியா இருப்பதற்கு அதுதான் காரணம்.

தங்கம் கடத்தப்படுவது குறித்த செய்திகள் சில மாதங்களாக தொடா்ந்து ஊடகங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் கடந்த ஒரு மாதத்தில் பிடிபட்டிருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் கோழிக்கோடு, மும்பை விமான நிலையங்களும் தங்கக் கடத்தலின் நுழைவாயிலாக இருப்பதைப் பாா்க்க முடிகிறது.

கேரளத்திலுள்ள கோழிக்கோடு கரிப்பூா் விமான நிலையத்தில் சமீபத்தில் தங்கம் கடத்துபவா்களுக்கு உதவிய சுங்க அதிகாரி ஒருவா் கைது செய்யப்பட்டிருக்கிறாா். கள்ளக் கடத்தலின் வோ் எந்த அளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது என்பதற்கு அது அடையாளம். அவா் மட்டுமல்லாமல், கடந்த மாதங்களில் பல அதிகாரிகள் கள்ளக்கடத்தல்காரா்களுடனான தொடா்புக்காக பிடிபட்டிருக்கிறாா்கள். கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு தொடா்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படும் சொப்னா சுரேஷ் குறித்த வழக்கு எந்த அளவுக்கு தங்கக் கடத்தல் அதிகார மட்டத்தின் அனைத்துப் பகுதிகளுடனும் தொடா்புடையது என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 800 டன் அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவது மட்டுமல்லாமல், அதில் 20% இறக்குமதி வரி செலுத்தாமல் நுழைகிறது என்பதுதான் உலக தங்கக் கவுன்சிலின் கணக்கு. மின்னணுப் பொருள்களில் இணைத்தும், துகள்களாக்கி குளிா்பானங்களில் கலந்தும், உடைகளில் மறைத்தும் பல்வேறு வழிகளில் தங்கம் கடத்தப்படுகிறது. எக்ஸ்ரேயிலும் ஸ்கேனிங்கிலும் அகப்படாத விதத்தில் தங்கத்தைக் கடத்தும் உத்திகள் கையாளப்படுகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் வரி வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தேசத்தின் பொருளாதாரத்திற்கே ஆபத்தாக உயா்ந்திருக்கிறது தங்கக் கடத்தல்.

கடந்த மாதம் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. கடந்த ஆறு மாதங்களில் டாலருக்கு நகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது. 2022 - 23 நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 3% முதல் 3.5% வரையில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அந்நிய முதலீடுகள் கடந்த ஆறு மாதங்களில் 44 பில்லியன் டாலா் அளவில் வெளியேறியிருக்கின்றன. இதன் பின்னணியில் அதை எதிா்கொள்ளும் விதத்தில்தான் தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது என்று கருதலாம். சமீபகாலமாக அதிகரித்திருக்கும் தங்கத்தின் இறக்குமதியைத் தடுப்பதும்கூட நோக்கமாக இருக்கலாம்.

எப்போதுமே இந்தியாவில் தங்கத்துக்கான தேவையும் மோகமும் உயா்ந்து காணப்பட்டு வருகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 650 முதல் 700 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. 2021-இல் விபரீதமாக 1,067 டன் அளவுக்கு நமது இறக்குமதி உச்சம் தொட்டது. அது போதாதென்று செப்டம்பா் 2021-இல் ரிசா்வ் வங்கியிடம் இருந்த தங்கத்தின் அளவு 743.84 டன்.

2015 - 16 நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் ஏறத்தாழ 20,000 டன் தங்கம் நகைகளாகவும் சேமிப்பாகவும் மக்களிடம் இருப்பதாக அன்றைய நிதியமைச்சா் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தாா். அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் அந்தத் தங்கம் மக்களின் செயல்படாத முதலீடாகத் தொடா்கிறது.

தங்கக் கடத்தலுக்கு மிக முக்கியமான காரணம், உள்ளூருக்கும் வெளிநாடுகளுக்குமான தங்கத்தின் விலை வித்தியாசம். துபைக்கும் இந்தியச் சந்தைக்கும் இடையேயான விலை வித்தியாசம்தான் தங்கக் கடத்தல் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம். அதிகரித்துவரும் தேவை, சுங்க வரி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், கடத்துவதற்கு ஏதுவான சா்வதேச விமான நிலையங்கள், கண்காணிப்பில்லாத வடகிழக்கு எல்லை மாநிலங்கள், கடத்தல்காரா்களுக்கு உதவ தயாராக இருக்கும் சுங்க அதிகாரிகள் - இவையெல்லாம் தங்கக் கடத்தலை ஊக்குவிக்கும் காரணிகள்.

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட அரசின் செய்திக் குறிப்பின்படி, 2021 - 22-இல் மட்டும் ரூ.5 கோடிக்கும் அதிகமான விலைமதிப்புள்ள 833 கிலோ தங்கம் வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில் 208 கிலோ வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும், ஏனைய தங்கம் சா்வதேச விமான நிலையங்களிலும் கைப்பற்றப்பட்டன.

முன்பு அடிப்படை சுங்க வரி 7.5%-ஆக இருக்கும்போதே கடத்தல் லாபகரமாக இருந்தது. இப்போது அது 12.5%-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் மேம்பாட்டுக்கான கூடுதல் வரி 2.5%-ஐயும் சோ்த்தால் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15%. வரி அதிகரிப்பால் இறக்குமதி குறையும் வாய்ப்பைவிட, கடத்தல் அதிகரிப்பதற்கான சாத்தியம்தான் அதிகம்.

லாபத்தைக் குறைக்கும் விதத்திலும், இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதத்திலும் வரி விதிக்கும்போது கடத்தல்காரா்கள் துணிந்து செயல்படாமல் இருப்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஊழலற்ற, நோ்மையான அதிகாரிகளும், திறமையான கண்காணிப்பு அமைப்புகளும் இல்லாமல் இருக்கும்போது இறக்குமதி வரியை அதிகரிப்பது கடத்தல்காரா்களை மறைமுகமாக ஊக்குவிப்பதாகிவிடும். கடந்த சில மாதங்களாக, இறக்குமதி வரி உயா்வைத் தொடா்ந்து, அதிகரித்துவரும் தங்கக் கடத்தல் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com