காங்கிரஸ் ஜோடோ! | காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்த தலையங்கம்

காங்கிரஸ் ஜோடோ! | காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்த தலையங்கம்

காங்கிரஸ் "மகாசபை'யின் "காரிய கமிட்டி' கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றிருக்கிறது என்பதே, நூற்றாண்டு கடந்த அந்த இயக்கம் ஏதோ ஒருவகை கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறி என்றுதான் கூற வேண்டும். கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மட்டுமல்ல, அவரது மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும், அவரது மகள் பிரியங்கா காந்தியும் காணொலி மூலம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து கலந்து கொண்டனர். கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி உள்கட்சித் தேர்தலை அறிவிப்பதும், அதை ஒத்தி வைப்பதும், நியமன உறுப்பினர்கள் மூலம் தலைவரைத் தேர்ந்தெடுப்பதும் புதிதொன்றும் அல்ல. கடந்த ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூடி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்கட்சித் தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இப்போது அது அக்டோபர் மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் போன்ற நாடு தழுவிய அளவில் உள்ள தேசியக் கட்சியின் உள்கட்சித் தேர்தல் என்பது விளையாட்டாக நடத்தப்படுவதல்ல. கிராம கமிட்டியில் தொடங்கி, ஒன்றிய கமிட்டி, நகர கமிட்டி, மாவட்ட கமிட்டி, மாநில கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, இறுதியில் காங்கிரஸின் காரிய கமிட்டி (செயற்குழு) தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மூலம் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடிப்படை உறுப்பினர் சேர்க்கை, முறையாகவும் முழுமையாகவும் நடைபெறுவதற்கே பல மாதங்கள் பிடிக்கும்.
இந்தியாவின் பல மாநிலங்களில், கட்சிக்கு அமைப்பே இல்லாத நிலைமை. அப்படியே அமைப்புகள் இருந்தாலும் அவை அனைத்திலும் நியமனம் மூலம் பதவி வகிப்பவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் கட்சித் தலைமைக்குத் தேர்தல் என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, கட்சியை வலுப்படுத்துவதாக இருக்கப் போவதில்லை.
தேர்தலுக்குத் தேர்தல் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸிலிருந்து பிரிந்து போனவர்கள், அவரவர் மாநிலத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் சரத் பவார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, புதுவையில் ரங்கசாமி, அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா என்று காங்கிரஸிலிருந்து வெளியேறி வெற்றி கண்டவர்களின் பட்டியல் நீளமானது.
அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர்கள் கபில் சிபலும் குலாம் நபி ஆசாதும். இந்திரா காந்தியின் காலத்திலிருந்து ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி, சோனியா காந்தி என்று பல காங்கிரஸ் தலைவர்களின் கீழ் பணியாற்றிய குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியாததை கட்சித் தலைமையின் பலவீனம் என்றுதான் கூற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் மட்டுமல்ல, ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட பல இளம் தலைவர்களும் விலகும் அவலம் புறந்தள்ளக் கூடியதல்ல. ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, ஆர்.பி. சிங், மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த சுஷ்மிதா, குஜராத்தில் ஹார்திக் படேல், ராகுல் காந்தியால் ஹரியாணா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாநிலங்கள் தவிர இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்திருப்பது மட்டுமல்ல, அமைப்பு ரீதியான கட்டமைப்பும் இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும், காங்கிரஸிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றவையாகவோ, கொள்கை ரீதியாக மாறுபட்டவையாகவோ இருக்கின்றன. அவை எதுவும் காங்கிரஸ் மீண்டு வருவதையோ, பலம் பெறுவதையோ விரும்பாது என்பதுதான் எதார்த்த உண்மை.
2017-இல் ராகுல் காந்தி தலைவரானபோது, காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறும் என்கிற நம்பிக்கை கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது. 2019 பொதுத் தேர்தலில் கட்சி தோல்வியைத் தழுவியவுடன் அவர் பதவி விலகியபோது, அவரது தலைமைப் பண்பு மீது மக்களுக்கு மட்டுமல்ல, தொண்டர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. "தோல்வியில் துவளாமை' என்பது தலைவனின் அடிப்படைப் பண்பு என்பதை அவர் உணராததன் விளைவுதான், அவருக்கு நெருக்கமானவர்களே அவர்மீது நம்பிக்கை இழந்து விலகத் தொடங்கியதற்கு முக்கியக் காரணம்.
காங்கிரஸ் கட்சி, செப்டம்பர் 7-ஆம் தேதி, கன்னியாகுமரியில் "பாரதத்தை இணைப்போம்' என்கிற கோஷத்துடன் "பாரத் ஜோடோ' பாதயாத்திரையைத் தொடங்க இருக்கிறது. மகாத்மா காந்தியும் பண்டித ஜவாஹர்லால் நேருவும், சர்தார் வல்லபபாய் படேலும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாதபடி பாரதத்தை ஏற்கெனவே இணைத்து விட்டார்கள். இன்றைய காங்கிரஸ் தலைமைக்கு பாரதத்தை இணைப்பதற்கான தேவையும் இல்லை, இணைக்கும் வேலையும் இல்லை. அதன் இன்றைய தேவை, பிரிந்தவர்களையும், அகன்றவர்களையும் இணைக்கும் "காங்கிரஸ் ஜோடோ'தான்!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com