

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருப்பது, நமது உயர்கல்வியின் தரத்தை கேள்விக்குறியாக்குகிறது. சர்வதேச அளவில் தமிழகத்திலிருந்து பட்டம் பெறும் பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பு இதனால் பாதிப்படையக்கூடும்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளை வழங்கிவரும் கல்லூரிகள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அனுமதியையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக ஆண்டுதோறும் பெற வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த 476 கல்லூரிகளில் பேராசிரியர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் 225 கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 23 கல்லூரிகள் தகுதியற்ற முதல்வர்களைக் கொண்டு செயல்படும் அதிர்ச்சித் தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. பி.காம், பி.ஏ. போன்றவை மாணவர்களின் பெருவிருப்பமாக இருந்தன. அதன் பின்னர், தொழில் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியதும் பொறியியல் பாடப் பிரிவுகள் பிரபலம் அடைந்தன.
அதனால் பொறியியல் கல்லூரிகள் பெருகி, தமிழகத்தில் பொறியியல் கல்லூரி இல்லாத மாவட்டமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. அப்படித் தொடங்கப்பட்ட பெரும்பாலான கல்லூரிகளுக்கு தகுதியான பேராசிரியர்கள் கிடைக்கவில்லை. பல கல்லூரிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்தும் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டது.
இந்த ஆண்டு 470-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதலாமாண்டு பருவத் தேர்வு எழுதிய சுமார் 1.30 லட்சம் மாணவர்களில் வெறும் 38% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கரோனா காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றது இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினாலும், கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் இல்லாததும் காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலை உள்ளன என்கிற எதார்த்தத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு (2021-22) சுமார் 1.28 லட்சம் இடங்களே நிரப்பப்பட்டன. சுமார் 72 ஆயிரம் காலி இடங்களில் மாணவர்கள் சேர முன்வரவில்லை. பொறியியல் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 494 தனியார் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேராததன் காரணமாக அங்கீகாரம் பெறுவதற்கு 10 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை. இதன் காரணமாக அவை மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த வீழ்ச்சி திடீரென ஏற்பட்டதல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்து வருகிறது. 2018-இல் மொத்தம் இருந்த 1.77 லட்சம் இடங்களில் சுமார் 78 ஆயிரம் இடங்களும், 2019-இல் 1.73 லட்சம் இடங்களில் 90 ஆயிரம் இடங்களும், 2020-இல் 1.61 லட்சம் இடங்களில் 83 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படவில்லை. பொறியியல் கல்விக்கான வரவேற்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
2019-20 கல்வியாண்டில் 18 பொறியியல் கல்லூரிகளிலும், 2020-21-இல் 29 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் சேர்க்கைக்காக தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்டை மாநிலங்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஏஜென்டுகளை நியமித்து பல்வேறு சலுகைகளை அறிவித்து மாணவர்களை அழைத்து வரும் அவலமும் காணப்படுகிறது.
அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்ததுடன், அவர்களது கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதால் 7,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாக சேர்ந்தனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பட்டியலின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்வதன் மூலமும் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தி கல்லூரிகள் மூடப்படாமல் அரசு பாதுகாக்கிறது.
தகுதியற்ற பேராசிரியர்கள், ஊதியம் குறைவாக இருப்பதால் திறமைசாலிகள் போதிய ஆர்வம் காட்டாதது, மாணவர்களின் செயல் திறன் குறைவு போன்றவையே பொறியியல் மாணவர்கள் தகுந்த வேலை பெறாததற்கு காரணங்கள் என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வேலைவாய்ப்புக்காக பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
காரணம் எதுவாக இருந்தாலும், தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரம் உயராமல் இருப்பதும் மாணவர் சேர்க்கை இல்லாமல் இருப்பதும் உண்மை. இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.