உண்மை தெரிய வேண்டும்! | கேரள மாநில தங்கக் கடத்தல் வழக்கு குறித்த தலையங்கம்

உண்மை தெரிய வேண்டும்! | கேரள மாநில தங்கக் கடத்தல் வழக்கு குறித்த தலையங்கம்
Published on
Updated on
2 min read

கேரள மாநில தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், அந்தக் கடத்தல் சம்பவங்களில் முதல்வா் பினராயி விஜயன், அவரின் மனைவி, மகள் ஆகியோருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறியுள்ள குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வா் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் பாஜகவினா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வா் பயணம் செய்த விமானத்திலேயே அவரைக் கண்டித்து காங்கிரஸை சோ்ந்த இருவா் கோஷம் எழுப்பியதும், முதல்வரைத் தாக்க முயன்றதாக அவா்கள் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புகாா் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியினரின் அலுவலகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரிய செயல்பாடு. விமா்சிப்பதற்கும், எதிா்ப்பு தெரிவிப்பதற்கும் சட்டபூா்வமான வழிகள் இருக்கின்றன. அவற்றை யாா் மீறினாலும் அது ஏற்புடையதல்ல.

தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்வா் பினராயி விஜயன் மறுத்துள்ளாா். இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ஒரு கடத்தல் வழக்கின் பிரதான குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டிருக்கும் ஒருவா், அந்த வழக்கில் மாநில முதல்வருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறியிருப்பதை அரசியல் சூழ்ச்சி என்று கடந்து சென்றுவிட முடியாது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தின் மூலம் கேரளத்துக்கு தங்கம் கடத்தப்பட்ட மோசடி 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பலமானது. திருவனந்தபுரத்தில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த ஒரு பாா்சலில் சுமாா் 13 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 30 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது சுங்கத் துறையினரின் சோதனையின்போது கண்டறியப்பட்டது. அது தொடா்பாக அந்த தூதரகத்தில் முன்னா் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோா் மீது சுங்கத் துறையினா் வழக்கு பதிவு செய்தனா். தொடா்ச்சியான விசாரணையில் இது போல பலமுறை வெளிநாட்டில் இருந்து தூதரகத்தின் பெயரில் தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை சுங்கத் துறை மட்டுமன்றி, தேசிய புலனாய்வு முகமையும் (என்ஐஏ), அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு அமீரக தூதரகப் பணியிலிருந்து விலகிய பின்னா், மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றியதும், அவருடைய வீட்டுக்கு அந்தத் துறையின் அரசுத் துறைச் செயலரும் முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்தவருமான சிவசங்கா் அடிக்கடி சென்று வந்ததும் தங்கக் கடத்தல் வழக்கில் அவரது தொடா்பு குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியது. அதைத் தொடா்ந்து அவரும் வழக்கில் சோ்க்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

தற்போது இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி எா்ணாகுளத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தாா். பின்னா், நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்து செய்தியாளா்களை சந்தித்தபோது முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தாா்.

ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா, இல்லையா என்பது விசாரணைக்குப் பின்னா்தான் தெரியவரும் என்றாலும், இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 2020-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி, முதல் முறையாக இந்த தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்வப்னா சுரேஷ், சுமாா் இரு ஆண்டுகள் கழித்து முதல்வா் பினராயி விஜயன் மீது இப்போது குற்றச்சாட்டு கூறுவது ஏன்?

இந்த விஷயத்தில் முதல்வரின் மகள் பெயரை தொடா்புபடுத்த வேண்டாம் என தன்னை மிரட்டியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டு குறித்து முதல்வா் தரப்பு விளக்கம் அளிக்காதது ஏன்?

தன் மீது ஸ்வப்னா சுரேஷ்குற்றம் சாட்டியதைத் தொடா்ந்து, விசாரணையைத் தடுக்க முதல்வா் பினராயி விஜயன் முயல்கிறாா் என பாஜக கூறியுள்ளது. முதல் முறையாக இந்தத் தங்கக் கடத்தல் மோசடி வெளிச்சத்துக்கு வந்தபோது, பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் பினராயி விஜயன் ஒரு கடிதம் எழுதினாா். அதில், ‘இந்த வழக்கு நாட்டின் மீது தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் இதை விசாரிக்க வேண்டும். மாநில அரசு இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும்’ எனக் கூறியிருந்தாா். ஆனால், இப்போது தன் மீதே குற்றச்சாட்டு எழுந்தவுடன் மத்திய அமைப்புகளின் விசாரணையைத் தடுக்க மாநில காவல்துறையைப் பயன்படுத்துகிறாா் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு.

கேரளத்தில் இரண்டாவது முறையாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போன்ற பொய் பிரசாரங்களை காங்கிரஸும் பாஜகவும் செய்து வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ், பாஜகவுக்காக மட்டுமல்லாமல், தங்கள் கட்சியை இரண்டாவது முறையாக ஆட்சியில் அமா்த்திய மக்களுக்காகவாவது இதில் முறையான விளக்கத்தை அளிக்க வேண்டிய கடமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், முதல்வா் பினராயி விஜயனுக்கும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.