சந்தை அதர்மம்! ரஷியா தொடர்பான பண அட்டைகள் முடக்கம் பற்றிய தலையங்கம்

சந்தை அதர்மம்!  ரஷியா தொடர்பான பண அட்டைகள் முடக்கம் பற்றிய தலையங்கம்

 உக்ரைன் மீதான ரஷியத் தாக்குதலை உலகம் முழுவதும் கண்டித்து வருகிறது. அதேசமயம், இந்தப் போரின் மறுபக்கமாக, சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் எதேச்சதிகார நடவடிக்கை பெரிய அளவில் விவாதிக்கப்படாமல் இருக்கிறது. தனது முன்னாள் கூட்டாளியும் அண்டை நாடுமான உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-இல் திடீரென போரைத் தொடங்கியது. சொல்லப்போனால் இது போரே அல்ல. உக்ரைன் மீதான ரஷியாவின் ஒருதலைபட்சமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்தான் இது.
 ரஷியாவுக்கு எதிரான நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயன்றதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம். கடந்த இரு வாரங்களில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், கனடா உள்ளிட்ட நாடுகள், ரஷியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளன. ரஷியாவுடனான விமானப் போக்குவரத்து, வர்த்தக நடவடிக்கைகள், இரு தரப்பு உறவுகளை நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. ரஷியா மீது பொருளாதாரத் தடைகளையும் இந்நாடுகள் அறிவித்துள்ளன. இவை நியாயமானவையே.
 அதேசமயம், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்பட்டு, சில பன்னாட்டு நிதி சேவை நிறுவனங்களும் ரஷியாவுடனான தங்கள் சேவையை முடக்கி வைத்துள்ளன. குறிப்பாக, "விசா', "மாஸ்டர் கார்ட்', "அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' ஆகிய சர்வதேச கடன் - பற்று அட்டைகளை செயல்படுத்தும் நிதி சேவை நிறுவனங்கள், ரஷிய நாட்டுடனான தங்கள் செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன.
 மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியாது. ஆனால், தங்கள் சேவையை ரஷிய மக்களுக்கு நிறுத்திவைக்க பன்னாட்டு நிதி சேவை நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. "விசா', "மாஸ்டர் கார்ட்', "அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' ஆகியவை அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டவை. அதேசமயம், இவற்றின் வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்த வாடிக்கையாளர்களின் நிதிச் செயல்பாடுகளில் உதவுவதன் மூலமாக பல கோடி டாலர்களை இவை ஈட்டுகின்றன. இந்த உறவு, வாடிக்கையாளர் சேவை தொடர்பானது.
 நாடுகளிடையிலான ஒப்பந்தங்கள் இதற்குக் காரணமாக இருந்தாலும், வாடிக்கையாளர் சேவையே அடிப்படை அலகு. தற்போது அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே நடைபெறும் மறைமுக யுத்தத்துக்காக, இந்த நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு சாதகமாகச் செயல்படக் கூடாது. ஏனெனில் இந்தத் தடைகள் ஐ.நா.சபையால் விதிக்கப்பட்டவை அல்ல. ஐ.நா. சபையால் ரஷியாவுக்கு எதிராக இன்னமும் தீர்மானம் நிறைவேற்ற முடியாத சூழலில், நேட்டோ நாடுகளின் கட்டளைப்படி பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இயங்குவது, அவற்றின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும்.
 உலக அளவில் சீனா தவிர்த்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பண அட்டை வர்த்தகத்தில் 90% பங்களிப்பவை அமெரிக்காவைச் சேர்ந்த இந்த மூன்று நிறுவனங்கள்தான். சீனா மட்டுமே தனக்கென்று பிரத்யேகமாக "யூனியன்பே' என்ற பண அட்டையைக் கொண்டுள்ளது. பிப். 26-இல் நேட்டோ நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடையை ஏற்று, கடந்த மார்ச் 5-இல் இந்த பன்னாட்டு நிதி சேவை நிறுவனங்கள் தங்கள் ரஷியா தொடர்பான பண அட்டைகளின் செயல்பாட்டை முடக்கிவைப்பதாக அறிவித்தன. இந்தப் பண அட்டைகளுக்கு ரஷியாவின் வர்த்தகப் பங்களிப்பு உலக அளவில் சுமார் 10 சதவீதமாகும்.
 இதன் காரணமாக, ரஷியாவிலுள்ள ஏடிஎம் இயந்திரங்களிலும், விற்பனை முனையங்களிலும் (பிஓஎஸ்) நிதிப் பரிமாற்றம் தடைபட்டதால் லட்சக்கணக்கான ரஷிய மக்கள் பாதிக்கப்பட்டனர். தங்கள் அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிரான நேட்டோ நாடுகளின் எதிர்ப்புக்காக, தங்கள் பண அட்டைகளை பன்னாட்டு நிறுவனங்கள் முடக்கியது ஏன் என்று அவர்கள் கோபமடைந்ததில் நியாயம் இருக்கிறது.
 இதேபோன்ற அனுபவம் 2014-இலும் ரஷியாவுக்கு ஏற்பட்டது. அப்போதும் ரஷிய- உக்ரைன் போர்ச்சூழல் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையின்போது, "விசா', "மாஸ்டர் கார்ட்' நிறுவனங்கள் செயல்பட மறுத்ததால் ரஷியர்கள் அவதிக்குள்ளாகினர்.
 அதன் எதிரொலியாக, ரஷியாவின் முதன்மை வங்கியான ஸ்பெர் வங்கி, 2015-இல் ரஷியாவுக்கென பிரத்யேகமான "மிர்' என்ற கடன்- பற்று அட்டைகளை உருவாக்கியது. 2021-ஆம் ஆண்டிலேயே ரஷியாவின் பண அட்டை வர்த்தகத்தில் 32 சதவீதத்தை "மிர்' பிடித்துவிட்டது. "மிர்' இருப்பதால்தான் தற்போது ரஷியர்கள் 2014-ஆம் ஆண்டுபோல கடுமையாக பாதிக்கப்படவில்லை. எனினும் முதல் மூன்று நாள்களுக்கு அதன் தாக்கம் இருந்தது.
 தவிர, இந்தியாவின் "ரூபே', சீனாவின் "யூனியன்பே' பண அட்டைகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ரஷிய அரசு தயாராகி வருகிறது. இந்தியாவில் 2014 மே மாதம் முதல் செயல்பட்டு வரும் "ரூபே' பண அட்டையின் முக்கியத்துவம் இப்போது புரிந்திருக்கும்.
 உலகை ஆட்சி செய்யத் துடிக்கும் நாடுகளுக்குக் கட்டுப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நெறி பிறழ்கையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தமது நிதிச் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு கூடுகிறது. இன்று ரஷிய மக்களுக்கு ஏற்பட்ட பண அட்டை அவதி, நாளை பிற நாட்டு மக்களுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com