அகதிகளின் அபயக் குரல்..! புலம்பெயரும் பெண்கள், குழந்தைகள் குறித்த தலையங்கம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 
அகதிகளின் அபயக் குரல்..! புலம்பெயரும் பெண்கள், குழந்தைகள் குறித்த தலையங்கம்


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய அகதிகள் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த எண்ணிக்கை, வரும் ஜூலை மாதத்துக்குள் 40 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர், அதாவது 59% பேர் அண்டை நாடான போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மற்றவர்கள் ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா, ஸ்லோவேகியா ஆகிய நாடுகளில் புகலிடம் தேடியுள்ளனர்.

2015-ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போரால் அகதிகள் பிரச்னை எழுந்தபோது, அங்கிருந்து குடும்பம் குடும்பமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். ஆரம்பத்தில் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதில் ஆர்வம் காட்டிய ஐரோப்பிய நாடுகள், பின்னர் வேறுவிதமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிட்டது. அப்போதுகூட ஓராண்டில் 10 லட்சம் அகதிகள்தான் இடம்பெயர்ந்தனர். இப்போது இரண்டே வாரங்களில் இடம்பெயர்ந்த அகதிகள் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டியிருக்கிறது.

2021-ஆம் ஆண்டு ஜூன் வரையிலான நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கும் அதிகமானோர் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 86% பேருக்கு வளரும் நாடுகளும், 14% பேருக்கு வளர்ந்த நாடுகளும் புகலிடம் அளித்துள்ளன. 73% அகதிகள், தங்களது அண்டை நாடுகளிலும், 27% பேர் வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அகதிகளில் 68% பேர் ஐந்தே நாடுகளைச் சேர்ந்தவர்கள். 
சிரியாவை சேர்ந்த 60 லட்சம் (27%) பேர், வெனிசுலாவை சேர்ந்த 40 லட்சம் (16%) பேர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 26 லட்சம் (5%) பேர், மியான்மரை சேர்ந்த 11 லட்சம் (5%) பேர், தெற்கு சூடானை சேர்ந்த 22 லட்சம் (9%) பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். 

மீதமுள்ள 79 லட்சம் (32%) பேர் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக துருக்கி 37 லட்சம் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. கொலம்பியா 17 லட்சம் பேருக்கும், பாகிஸ்தான் 14 லட்சம் பேருக்கும், உகாண்டா 14 லட்சம் பேருக்கும், ஜெர்மனி 12 லட்சம் பேருக்கும் அடைக்கலம் அளித்துள்ளன.

உலக மக்கள்தொகையில் 30% பேர் குழந்தைகள். ஆனால், வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டவர்களில் 42% பேர் குழந்தைகள் என்பதிலிருந்து அகதிகள் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவோர் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும். உக்ரைன் பிரச்னையும் இதற்கு விதிவிலக்கல்ல.

உலகம் முழுவதும் அகதிகள் பிரச்னை இருக்கிறது என்றாலும், உக்ரைன் நாட்டு அகதிகள் இப்போது எதிர்கொண்டுள்ள துயரம் வித்தியாசமானது. உக்ரைனில் 18 வயது முதல் 60 வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்துள்ள அந்நாட்டு அரசு, அவர்களை ரஷியப் படையினருக்கு எதிராக போரில் ஈடுபடுமாறு வலியுறுத்தி வருகிறது. இதனால் இப்போது அகதிகளாக வெளியேறியுள்ள 25 லட்சம் பேரில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும்தான்.

உக்ரைனிலிருந்து அகதிகளாக வருவோர் தனது 27 உறுப்பு நாடுகளிலும் - புகலிடம் கோரி விண்ணப்பிக்காமலே - மூன்று ஆண்டுகள் வரை தங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்திருக்கிறது. இதுவரை ஐரோப்பிய யூனியன் அளிக்காத இந்தச் சிறப்பு அனுமதியானது, ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கும், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாதவர்களுக்கும் இடைக்கால பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு விதிவிலக்கான நடவடிக்கையாகும். 

இதன்மூலம் உக்ரைன் அகதிகள், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தங்குவதோடு மட்டுமின்றி, பணி வாய்ப்பையும், கல்வி கற்கும் வாய்ப்பையும் பெற முடியும். ஆனாலும், குடும்பத் தலைவர் இன்றி வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் கொடுமையை எல்லையைக் கடந்து செல்லும் பெண்கள் மன வலியுடன் வெளிப்படுத்துவது பெரும் சோகம். "எங்கே போகிறோம்' என சின்னஞ்சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பொய்களைச் சொல்லி அழைத்துச் செல்வது சகிக்கவொண்ணாக் கொடுமை.

உக்ரைன் அகதிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும் இதுவரை 1.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,000 கோடி) நிதியைப் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் இந்த நிதியை அளித்துள்ளன. இது ஐ.நா. எதிர்பார்க்கும் நிதியில் வெறும் 7%தான். 
இந்த அகதிகள் பிரச்னை இடைக்காலமானதுதானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாத நிலையில், லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன, அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பதெல்லாம் பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

"போரை நிறுத்துவதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த பரிசாக இருக்கும். எங்களது குழந்தைகள் ஏன் சாக வேண்டும்' என உக்ரைன் பெண்கள் கேட்கிறார்கள். வல்லாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் தலைவர்களின் காதுகளுக்கு இந்தக் குரல் ஏனோ கேட்பதே இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com