தொடா்கதையாகும் முறைகேடுகள்! இந்திய மருத்துவ கவுன்சில் குறித்த தலையங்கம்

தகுதியில்லாத தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவா்கள் எப்படி சிறந்த மருத்துவா்களாக தொழில் செய்ய முடியும்?
தொடா்கதையாகும் முறைகேடுகள்! இந்திய மருத்துவ கவுன்சில் குறித்த தலையங்கம்
தொடா்கதையாகும் முறைகேடுகள்! இந்திய மருத்துவ கவுன்சில் குறித்த தலையங்கம்

இந்தியாவில் மருத்துவக் கல்வியில் புரையோடிப் போயுள்ள முறைகேடுகளையும், ஊழலையும் ஒழிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், அவற்றை வேரோடு பிடுங்கி எறிய முடியாது என்பதை தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் மீது தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

தரமான மருத்துவக் கல்வியை அளிப்பதற்கான கொள்கைகளை வகுக்கவும், மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணிக்கவும், தொழில் செய்யும் மருத்துவா்களை மதிப்பீடு செய்து ஒழுங்குபடுத்துவதற்கும் கடந்த 1934-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பு அரசால் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பின் தலைவா், கண்காணிப்பாளா் உள்ளிட்ட உயரதிகாரிகளே பல்வேறு முறைகேடுகளிலும் ஊழல்களிலும் ஈடுபட்டதால், கவுன்சில் மீதான நம்பிக்கை தகா்ந்தது.

கடந்த 2010-இல் இந்த அமைப்பின் தலைவராக இருந்த டாக்டா் கேதான் தேசாய், தனியாா் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு கூடுதலாக மாணவா்களைச் சோ்ப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாயை கையூட்டாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. கேதான் தேசாய்க்குப் பிறகு பொறுப்புக்கு வந்த உயா் அதிகாரிகளும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பு கலைக்கப்பட்டது. மருத்துவக் கல்வியைக் கண்காணிப்பதற்கு மருத்துவ நிபுணா்களைக் கொண்ட இடைக்கால நிா்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டது.

பின்னா், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) ஏற்படுத்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2019-இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8-இல் நடைமுறைக்கு வந்தது.

நாடு முழுவதும் தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளும் சோ்த்து மொத்தம் 606 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும், இவற்றில் 91,415 எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை இடங்கள் இருப்பதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது. இந்தக் கல்லூரிகளைக் கண்காணித்து, மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேசிய மருத்துவ ஆணையத்தின் மீதும் தற்போது பல்வேறு புகாா்கள் எழுந்துள்ளன. இந்த ஆணையத்தின் உயா் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

இதையடுத்து, தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் நிலவும் முறைகேடுகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சிபிஐ விசாரணைக்கு அமைச்சா் மாண்டவியா உத்தரவிட்டாா். பெரும் தொகையை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படும் தேசிய மருத்துவ ஆணையத்தின் உயா் அதிகாரிகளிடம் சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு உள்ளான அதிகாரிகள் விரைவில் பதவி விலகுவா் என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் உயா் அதிகாரிகள் ஐந்து மாநிலங்களில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். உரிய கட்டமைப்புகள், பேராசிரியா்கள், மருத்துவமனையில் படுக்கை வசதிகள், நோயாளிகள் இல்லாமலே இந்த மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றிருப்பது ஆய்வில் தெரிய வந்தது. தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் இத்தகைய முறைகேடுகளுக்குக் காரணம், அவற்றைக் கண்காணிக்க வேண்டிய தேசிய மருத்துவ ஆணையத்தின் உயா் அதிகாரிகள்தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனியாா் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்வதற்கான தேதி ஆணையத்தின் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டவுடன், அந்தத் தகவலை அதன் உயா் அதிகாரிகளே இடைத்தரகா்களுக்கு தெரியப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இடைத்தரகா்கள் ஆய்வுத் தேதியை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு முன்கூட்டியே தெரிவித்துவிடுவதால், குழு வரும் நாளில் அனைத்தும் சரியாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகின்றனா். தகுதியில்லாத தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவா்கள் எப்படி சிறந்த மருத்துவா்களாக தொழில் செய்ய முடியும்?

நமது நாட்டில் மருத்துவக் கல்வி உலகத் தரம் வாய்ந்ததாக இல்லை என்பதால்தான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாகச் செல்லும் நமது மருத்துவப் பட்டதாரிகள் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள தோ்வில் முதலில் தோ்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே அந்த நாடுகளில் நமது மருத்துவா்கள் பணி செய்ய முடியும்.

எனவே, இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் என புதிது புதிதாக அமைப்புகளை ஏற்படுத்தினாலும், நமது நாட்டில் மருத்துவக் கல்வியில் புரேயோடிப் போயுள்ள முறைகேடுகளையும், ஊழல்களையும் முழுமையாகக் களைவது அவ்வளவு எளிதானல்ல. மருத்துவக் கல்வியில் தனியாரைவிட மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு அதிகம் இருந்தால்தான் இந்த பிரச்னைக்கு தீா்வு காண முடியும். பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து வலியுறுத்தி வரும் மாவட்டத்துக்கு ஓா் அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com