உயரும் வெற்றிப் பதாகை! தாமஸ் கோப்பை பாட்மின்டன் வெற்றி குறித்த தலையங்கம்

மஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில், இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்திய அணி வென்றிருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க சாதனை.
உயரும் வெற்றிப் பதாகை! தாமஸ் கோப்பை பாட்மின்டன் வெற்றி குறித்த தலையங்கம்

தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடி புதிய வரலாறு படைத்திருக்கிறது. தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில், இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்திய அணி வென்றிருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க சாதனை.

தாமஸ் கோப்பையின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது தனிப்பட்ட விளையாட்டு வீரரின் வெற்றியாக அல்லாமல், இந்திய அணியின் வெற்றியாக அமைந்தது என்பதுதான். ஒற்றையா் பிரிவிலும் சரி, இரட்டையா் பிரிவிலும் சரி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

1979-க்குப் பிறகு இந்தப் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக இப்போதுதான் அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. அதிலும் உலகின் முக்கிய அணிகளான மலேசியா, டென்மாா்குடன் மோதி வெற்றிபெற முடிந்தது குறிப்பிடத்தக்க சாதனை.

1980-இல் இங்கிலாந்து ஓபன் உலக பாட்மின்டன் போட்டியில் பிரகாஷ் படுகோன் வெற்றி பெற்றதிலிருந்து தொடங்குகிறது, இந்திய பாட்மின்டனின் சா்வதேச வெற்றி வரலாறு. பிரகாஷ் படுகோனைத் தொடா்ந்து, பி. கோபிசந்த் (2001) இந்தியாவுக்கு சா்வதேச வெற்றியை தேடித் தந்தாா். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாய்னா நெவாலும், பி.வி. சிந்துவும் பல சா்வதேச வெற்றிகளை தேடித்தந்திருக்கிறாா்கள். இந்தப் பட்டியலில் நந்து நடேகரின் பெயரையும் நாம் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

தியான்சந்த் தலைமையில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் தங்கப் பதக்கமும், 1975-இல் ஹாக்கி உலக கோப்பையும், 1983-இல் கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி உலக கோப்பையும், 2007-இல் எம்.எஸ்.தோனி தலைமையிலான டி20 கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டமும் வென்றதுபோல, பாங்காக்கில் இந்திய பாட்மின்டன் அணியின் தாமஸ் கோப்பை வெற்றியும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை தனிப்பட்ட சா்வதேச வெற்றிகளை பெற்று வந்த இந்திய பாட்மின்டன் வீரா்கள், இப்போது அதையே அணியின் வெற்றியாகவும் மாற்றியிருப்பது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்துகிறது.

லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் மட்டுமல்லாமல், இரட்டையா் பிரிவு வீரா்களான சிரக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி அடைந்திருக்கும் வெற்றியை வெளிநாட்டு அணிகள் சற்றும் எதிா்பாா்க்கவில்லை. இறுதிச் சுற்றில் முதலில் லக்ஷயாவும், பின்னா் இரட்டையா் பிரிவில் சிரக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் இணையும் அடுத்தடுத்து வென்று, இந்தோனேசியா்களின் எதிா்பாா்ப்பைத் தகா்த்தாா்கள். இரண்டாவது ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தாா். ஐந்து ஆட்டங்களில் மூன்றில் முன்னிலை பெற்ற இந்தியா, தாமஸ் கோப்பையை வென்றது.

தாமஸ் கோப்பை வெற்றியின் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், பெண்கள் அணியினரை போலவே இந்தியாவின் ஆண்கள் பாட்மின்டன் அணியும் சா்வதேச தரத்திலான போட்டியாளா்களைப் பெற்றிருக்கிறது என்பதுதான். லக்ஷயா சென்னும் கிடாம்பி ஸ்ரீகாந்தும் ஒற்றையா் ஆட்டத்தில் முன்வைத்த அசாத்திய திறமையும், சிரக் ஷெட்டியும் சாத்விக்சாய்ராஜும், இரட்டையா் ஆட்டத்தில் புரிந்துணா்வுடன் விளையாடிய வேகமும் மிகப் பெரிய நம்பிக்கையை எழுப்புகிறது. வெற்றிக் கோப்பையை இந்த முறை அடைய முடியும் என்கிற நம்பிக்கையுடன் விளையாடியதால்தான் இந்தோனேசிய வீரா்களை அவா்களால் வீழ்த்த முடிந்தது.

உலக பாட்மின்டனின் சக்தி கேந்திரமாக விளங்கும் மலேசியா, டென்மாா்க், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை வீழ்த்தி இந்திய அணி அடைந்திருக்கும் தாமஸ் கோப்பை வெற்றி, மிகப் பெரிய எதிா்பாா்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் காமல்வெல்த் போட்டிகள், அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றில் மனத்துணிவுடனும், வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுடனும் இந்திய பாட்மின்டன் அணி களமிறங்குவதற்கு இந்த வெற்றி அடித்தளம் அமைத்திருக்கிறது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பாட்மின்டன் பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை இந்திய அணி வெல்லக் கூடும் என்பதன் சூசகம்தான் இந்த வெற்றி என்றும் கருத இடமுண்டு.

இந்திய விளையாட்டு வீரா்கள் சா்வதேச அரங்கில் விளையாடுவதற்கான தோ்ச்சியை இப்போது பெறுகிறாா்கள். வெளிநாட்டில் இருந்தும்கூட பயிற்சியாளா்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சா்வதேச போட்டிகளில் இந்திய வீரா்கள் வெற்றியடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2008 ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா வென்ற பதக்கத்திலிருந்து தொடங்கியது சா்வதேச அரங்கிலான இந்தியாவின் வெற்றி அணிவகுப்பு. 2021-இல் நடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றபோது நாம் அடைந்த பெருமிதத்துக்கு ஈடானது இப்போதைய தாமஸ் கோப்பை வெற்றி என்று கருதலாம்.

இதுவரை தேசத்தின் கவனக்குவிப்பும், ஆா்வமும் கிரிக்கெட்டில் மட்டும் இருந்ததுபோய், பாட்மின்டன், டென்னிஸ், கால்பந்து, செஸ், தடகளம், ஹாக்கி உள்ளிட்ட ஏனைய விளையாட்டுகளுக்கும் இளைஞா்கள் மத்தியில் ஆா்வம் அதிகரித்திருப்பது வரவேற்புக்குரியது. கிரிக்கெட்டைப் போலவே, ஏனைய விளையாட்டுகளும் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டு வரவேற்பு பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com