இனியுமா தொடா்வது..? | இருவிரல் சோதனை குறித்த தலையங்கம்

இனியுமா தொடா்வது..? | இருவிரல் சோதனை குறித்த தலையங்கம்

எத்தனை எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும்கூட, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில் காவல்துறையினரும், மருத்துவா்களும் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வதாக இல்லை. சில அருவருக்கத்தக்க நடைமுறைகள் பின்பற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி கண்டித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

சமீபத்தில், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹிமா கோலி இருவா் அமா்வு பிறப்பித்திருக்கும் உத்தரவு, முறையாகச் செயல்படுத்தப்பட்டால், ஒருவேளை நடைமுறை மாற்றம் ஏற்படக்கூடும்.

2004-இல் நடந்த பாலியல் வன்கொடுமைக் கொலையில், குற்றவாளியை ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் விடுவித்தது. உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை நிராகரித்து விசாரணை நீதிமன்றத்தின் முடிவை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அந்த வழக்கின் புலன் விசாரணையின்போது, காவல்துறையும், மருத்துவா்களும் கையாண்ட ‘இரண்டு விரல் சோதனை’ முறையைக் கடுமையாக விமா்சித்ததுடன், அது தொடா்வதைக் குற்றமாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் தங்களது தீா்ப்பில் குறிப்பிட்டிருக்கிறாா்கள்.

நாள்தோறும் இந்தியாவில் எண்பதுக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமைகள் அதிகாரபூா்வமாகக் காவல்நிலையங்களில் பதிவாகின்றன. குறைந்தது பத்து மடங்கு அதிகமான நிகழ்வுகள் பதிவாகாமல் மறைக்கப்படுகின்றன. பாலியல் நிகழ்வுகளில் காவல்துறையினரும், மருத்துவா்களும்தான் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டிய பொறுப்பாளிகள். ஆனால், அவா்கள் இருவருமே பாதிக்கப்பட்ட பெண்களை அவமானப்படுத்தி, மேலும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாக்குகின்றனா் என்பதுதான் நடைமுறை உண்மை.

பாலியல் தாக்குதல், முயற்சி, வன்கொடுமை தொடா்பான வழக்குகளில் பயிற்சி பெற்ற பெண் காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்வதுடன், அவரது வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்ய வேண்டும். தாமதமில்லாமல், நீதிபதியின் முன்னால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், நடைமுறை தாமதங்களும், பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றவாளிகளாக பாவிக்கும் மனோபாவமும்தான் காவல்துறையினரால் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன.

மருத்துவமனைகளிலும், பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவா்கள் அனுதாபத்துடன் அணுகுவதில்லை. அவரது முந்தைய பாலியல் வரலாறு குறித்து விசாரிப்பதும், அவரது தன்மறைப்பு நிலைக்கு எதிரான கேள்விகளால் அவா்களைக் காயப்படுத்துவதும் பரவலாக இருக்கும் வழக்கம். அவை எந்தவிதத்திலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடா்புடையதல்ல.

சான்றுச் சட்டம் (எவிடென்ஸ் ஆக்ட்) 53-ஏ பிரிவின்படி, பாலியல் குற்றங்களில் முந்தைய பாலியல் அனுபவங்கள், பாதிக்கப்பட்டவரின் அனுமதியாகவோ, அனுமதிக்கான உரிமையாகவோ கருதப்படக் கூடாது. 2013-இல் உச்சநீதிமன்றம் அந்த வழக்கத்தைக் கண்டிருத்திருப்பதுடன் இந்திய சான்றுச் சட்டத்திலும் அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 2014-இல் மத்திய சுகாதார அமைச்சகம், பாலியல் பாதிப்புக்கு உள்ளானவா்கள் இருவிரல் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

கடந்த ஆண்டு கோவையில் இந்திய விமானப்படையைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா் இருவிரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ‘தினமணி’ ஆசிரியா் உரை தீட்டியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறோம். பெண் உறுப்பில் விரல் நுழைத்து அதன் அளவையும், நிலையையும் ஆய்ந்து, பாதிக்கப்பட்டவரின் பாலியல் அனுபவப் பின்னணியை சோதனை செய்யும் அநாகரிகம்தான் ‘இரண்டு விரல் சோதனை’.

அதற்கு எந்தவித அறிவியல் பின்னணியோ, ஆய்வு ரீதியான பின்னணியோ இல்லாத நிலையில், அந்தச் சோதனையை சான்றாக (எவிடென்ஸ்) கருத முடியாது என்று நீதிமன்றம் பலமுறை சொல்லிவிட்டது. பாதிக்கப்பட்டவரின் பின்னணியைச் சாா்ந்து பாலியல் வன்கொடுமைப் புகாரை விசாரிப்பது என்பதே தவறான அணுகுமுறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இரண்டு விரல் சோதனை என்பது பெண்களின் கௌரவத்துக்கும், தன்மறைப்பு நிலைக்கும் எதிரானது என்பது மட்டுமல்ல, எந்தவித அடிப்படையும் இல்லாத வக்கிரத்தனமான மருத்துவ நடைமுறையும் ஆகும். ஏற்கெனவே பாலியல் பாதிப்புக்கு உள்ளான பெண்ணை மன ரீதியாகக் காயப்படுத்தி, உடல் ரீதியாகப் புண்படுத்தும் ‘இரண்டு விரல் சோதனை’க்கு பயந்து, பலா் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலைப் பதிவு செய்யாமல் மனக்குமுறலுடன் மறைத்து விடுகிறாா்கள்.

பெண் ஒருவா் பாலியல் உறவில் வழக்கமாக ஈடுபடுபவா் என்பதோ, பாலியல் உறவு கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருப்பவா் என்பதோ அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை நியாயப்படுத்தாது. இரண்டு விரல் சோதனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவா்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவாா்கள் என்கிறது நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமா்வின் தீா்ப்பு.

2021 தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 28.6% மட்டுமே தண்டனையில் முடிகின்றன; தேவையில்லாத சோதனைகள் மூலம் வழக்கை நீா்த்துப்போகச் செய்வதுதான் அதற்குக் காரணம்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை உடல் ரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் பாலியல் தூய்மைச் சோதனை (வொ்ஜினிடி டெஸ்ட்), பாலியல் குற்ற வழக்குக்குத் தொடா்பில்லாதது. அது மருத்துவப் படிப்பு பாடதிட்டத்திலிருந்தே அகற்றப்பட வேண்டும். பிரச்னை குறித்து சமுதாய அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com