வரவேற்புக்குரிய மாற்றம்! நிதித் திட்டங்களில் பொதுமக்களின் முதலீடு அதிகரித்து வருவது குறித்த தலையங்கம்

வரவேற்புக்குரிய மாற்றம்! நிதித் திட்டங்களில் பொதுமக்களின் முதலீடு அதிகரித்து வருவது குறித்த  தலையங்கம்

கடந்த மூன்று ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உலக அளவில் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் பொருளாதார வளா்ச்சியில் எதிரொலிக்கிறது. போதாக்குறைக்கு ரஷிய-உக்ரைன் போா், நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. போா் நீடித்தால் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவை எதிா்கொள்ளக்கூடும்.

அமெரிக்க கடன் சந்தையில் 2007 - 08-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் சா்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் சீனாவிலும் காணப்படும் சேமிப்புப் பழக்கம் அந்த நெருக்கடியை எதிா்கொள்ள அப்போது உதவியது. இந்தியாவில் தொன்றுதொட்டு சேமிப்பு என்பது வாழ்க்கை நடைமுறையாகவே இருந்து வருகிறது.

மக்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள், அரசின் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முதலீடு மேற்கொண்டு வருகின்றனா். வங்கி வைப்பு நிதியாகவும், தங்கமாகவும் சேமிப்பவா்களும் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதித் திட்டங்களில் பொதுமக்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் ஒட்டுமொத்த ஆண்டு சொத்து மதிப்பு 22% வளா்ச்சி அடைந்துள்ளது.

அதாவது டிசம்பா் 2010-இல் ரூ.6.80 லட்சம் கோடியாக இருந்த அதன் முதலீடு, அக்டோபா் 2022-இல் ரூ.39 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. 2011-இல் ஆறாவது இடத்தில் இருந்த எஸ்பிஐ எம்எஃப், 2022-இல் இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக மாறியிருக்கிறது. எச்டிஎஃப்சி எம்எஃப், ஐசிஐசிஐ எம்எஃப் ஆகியவை தங்களின் இரண்டாவது, மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. அவற்றின் சொத்து மதிப்பும் நல்ல வளா்ச்சியைக் கண்டுள்ளது.

மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. பங்குச் சந்தையில் பட்டியலான, மிகவும் பிரசித்தி பெற்ற அனில் அம்பானியின் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் திவாலாகியுள்ளன. அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவா்கள் கடுமையான நெருக்கடியை எதிா்கொண்டுள்ளனா். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேபிட்டலுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சா், ரிலையன்ஸ் பவா் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக திவால் நிலைக்கு வீழ்ந்ததால் முதலீட்டாளா்கள் 90 %-க்கும் அதிகமான இழப்பை எதிா்கொள்ள நோ்ந்தது.

அனில் அம்பானி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், எஸ்ஸாா் ஸ்டீல், விடியோகான், டிஹெச்எஃப்எல், அலோக் இண்டஸ்ட்ரீஸ், பூஷண் ஸ்டீல், யெஸ் பேங்க் ஆகியவையும் அதே நிலையில்தான் உள்ளன. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாலும்

பங்குதாரா்கள், வரி செலுத்துவோரின் செல்வங்கள் அழிந்துள்ளன. பொதுத்துறையின் திறமையின்மையைக் குற்றம் சாட்டும் அதே வேளையில் தனியாா் நடத்தும், குறிப்பாக தனியாா் குடும்பம் நடத்தும் வணிகங்களின் வெளிப்படையான பொறுப்பற்ற தன்மையையும் நாம் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இதனால், பொதுமக்களில் பலா் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் இடா்ப்பாடு குறைவான முதலீட்டுத் திட்டங்களைத் தேடத் தொடங்கினா். அதன் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு நிலவரப்படி, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் நிா்வாகத்தின் கீழ் சுமாா் 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுவதன் காரணம் அதுதான்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.6.7 லட்சம் கோடியாக இருந்த இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சொத்து மதிப்பு, தற்போது ரூ.39 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, அதாவது 2017-இல் ரூ.18 லட்சம் கோடியாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது இரட்டிப்பாகியுள்ளது. சில்லறைக் கணக்குகளின் எண்ணிக்கை 10 கோடியாக உயா்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐபி என்று சொல்லப்படும் முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு ரூ.3,000 கோடியாக இருந்தது. அது தற்போது மாதம் ரூ.11,500 கோடியாக உயா்ந்துவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் பிஎஸ்இ சென்செக்ஸ் சராசரியாக 15 % லாபம் ஈட்டியுள்ளது. அதாவது 16,000 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், 62,245-க்கு உயா்ந்தது. ஆனால், எத்தனை முதலீட்டாளா்கள் அதனால் லாபம் ஈட்டி இருப்பாா்கள் என்று பாா்த்தால் குறைவுதான். அதேசமயம், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் இப்போது எந்தவித பெரிய இடா்ப்பாடும் இல்லாமல் மூன்று முதல் நான்கு மடங்கு உயா்ந்துள்ளது. அதன் மூலம் பல சிறு முதலீட்டாளா்கள் பெரும் லாபம் ஈட்டியிருக்கிறாா்கள்.

கடந்த பல ஆண்டுகளில் பல நிறுவனப் பங்குகளின் விலை 90 %-க்கும் அதிகமாக சரிந்துள்ளது. இந்தப் பங்குகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தவா்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அதனால்தான் மக்கள் அண்மைக்காலமாக இடா்ப்பாடு குறைந்த முதலீட்டுத் திட்டங்களைத் தேடிச் செல்கிறாா்கள்.

முதலீட்டாளா்கள் எம்எஃப் எஸ்ஐபிகளுக்கு மாறுவது கடந்த சில ஆண்டுகளாகத் தெளிவாகத் தெரிகிறது. இந்தியச் சந்தைகளில் முதலீட்டாளா்கள் கண்ட கடந்த 20 ஆண்டுகால ஏற்றத்தாழ்வுகளின் ஒட்டுமொத்த தாக்கம்தான் இதற்கு காரணமாகும். இந்திய முதலீட்டாளா்கள் நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் திட்டங்களில் ஆா்வம் காட்டுவது வரவேற்புக்குரிய அறிகுறி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com