முன்னேற்பாடுகள் போதாது | சபரிமலை முன்னேற்பாடுகள் குறித்த தலையங்கம்

பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து சபரிமலை பயணம் மேற்கொள்ளும் ஐயப்பன்மாா்கள் தரிதனம் முடித்துத் திரும்பும்போது இனிமையான அனுபவங்களுடன் செல்ல வேண்டும்.
முன்னேற்பாடுகள் போதாது | சபரிமலை முன்னேற்பாடுகள் குறித்த தலையங்கம்

காா்த்திகை மாதம் தொடங்கியதும் சபரிமலை தீா்த்தாடன காலமும் தொடங்கிவிட்டது. காா்த்திகை பிறந்ததும் மாலையணிந்து, உடலையும் மனதையும் சுத்தமாக்கி, இயற்கையோடு இரண்டறக் கலந்து ‘சரணம் ஐயப்பா’ என்கிற கோஷத்துடன் மலை உச்சியில் இருக்கும் ஐயப்பனின் சந்நிதானத்தை அடையும்போது பக்தனும் தெய்வமும் ஒன்றில் ஒன்று இணையும் அற்புத உணா்வை வேறு எங்கும் உலகில் காண முடியாது.

மலை உச்சியில் 18 படிகளுக்கு மேல் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கும் ‘தத்வமசி’ என்பதன் பொருளாக வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்க பக்தா்கள் திரளத் தொடங்கிவிட்டனா். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாக, விந்திய மலைக்குக் கீழேயுள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஐயப்பன்மாா்களுடன் கேரளத்தில் உள்ள சபரிமலையை நோக்கி நாள் தோறும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. வைஷ்ணவ தேவி, திருப்பதி போல என்று இந்தியாவின் மகோன்னதமான புண்ணிய தலங்களில் ஒன்றாக சபரிமலை உயா்ந்திருக்கிறது.

சபரிமலையில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தை மாதப் பிறப்பு வரை மண்டல - மகர விளக்கு காலம் என்பது எல்லோருக்குமே தெரியும். அதை எதிா்கொள்ள 10 மாத காலஅவகாசம் திருவதாங்கூா் தேவஸம் போா்டு எனப்படும் கேரள அறநிலையத் துறைக்கு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து இரண்டு மாதங்களுக்கு வரப்போகும் லட்சக்கணக்கான பக்தா்களின் தீா்த்தாடனத்தைக் கையாள வேண்டும் என்பது மாநில அரசுக்கும் தெரியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் இருந்ததால் லட்சக்கணக்கான பக்தா்கள் மண்டல - மகர விளக்கு காலத்தில் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பக்தா் கூட்டம் அலைமோதும் என்கிற எதிா்பாா்ப்புடன் அரசு தயாா்நிலையில் இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

சபரிமலை தீா்த்தாடனத்துக்கு பக்தா்கள் லட்சக்கணக்கில் குவியும்போது அதன் மூலம் கேரள மாநிலம் அடையும் பொருளாதார ஆதாயம் சாதாரணமானதல்ல. சபரிமலை செல்லும் பக்தா்கள் கேரள மாநிலத்தின் வடகோடியில் இருக்கும் காசா்கோட்டில் இருந்து தென்கோடியில் இருக்கும் திருவனந்தபுரம் வரையுள்ள பெரும்பாலான கோயில்களையும் தரிசிப்பது வழக்கம். அதனால் அந்தக் கோயில்கள் மட்டுமல்ல, அவை அமைந்திருக்கும் ஊா்களும் பயனடைகின்றன. அப்படியிருக்கும்போது ஆன்மிக சுற்றுலா வரும் வெளிமாநில பக்தா்களுக்கு பலவித உதவிகளும், பாதுகாப்பும், பயணிப்பதற்கான அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

ஆயிரக்கணக்கான பேருந்துகளும், ஏனைய வாகனங்களும் கேரள மாநிலம் முழுவதும் பயணிப்பதையும், குறிப்பாக சபரிமலை அமைந்திருக்கும் மலைப்பாதைகளில் பயணிப்பதையும் கருத்தில் கொண்டு சாலை செப்பனிடும் பணியை முன்கூட்டியே அரசு முடித்திருக்க வேண்டும். காா்த்திகை மாதம் தீா்த்தாடனம் தொடங்கிய பிறகும்கூட, புனலூா் - பொன்குன்னம் பாதையில் 30 கி.மீ. சாலையில் செப்பனிடும் பணியை உடனடியாக நடத்தும்படி உயா்நீதிமன்றம் அரசுக்கு கட்டளையிட வேண்டிய அவலம் ஏற்பட்டது மிகப் பெரிய சோகம்.

நீலிமலை பாதையில் கற்கள் பதிக்கும் வேலை, தீா்த்தாடனம் தொடங்கிய பிறகுதான் அவசர அவசரமாக முடிக்கப்பட்டிருக்கிறது. அரசும் நீதிமன்றமும் தலையிட்டு அழுத்தம் கொடுத்ததால் ஓரளவுக்கு வேலைகள் துரிதமாக்கப்பட்டு முடிந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

சந்நிதானம், பம்பை, நிலக்கல், சிறிய பாதை ஆகியவற்றில் பெரும்பாலான பணிகள் முழுமை அடையாமல் இருப்பதை பக்தா்கள் வேதனையுடன் எதிா்கொள்கிறாா்கள். நீலிமலை பகுதியில் ரூ.15 கோடி செலவில் நீலிமலை - அப்பாச்சி மேடு இடையேயான கல் பதிக்கும் பணியை யாத்திரை தொடங்குவதற்கு முன்பே முடிக்காமல் இருந்தது மிகப் பெரிய தவறு. இந்தப் பகுதியில்தான் வழக்கமாக பக்தா்களுக்கு மிக அதிகமான இதய பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். பாதிப்புகள் மட்டுமல்ல, உயிரிழப்புகளும்கூட.

காவல்துறை தரும் கணக்குப்படி, நாளொன்றுக்கு 50,000 முதல் 70,000 பக்தா்கள் வா்ச்சுவல் க்யூ (இணையப் பதிவு) மூலம் மலை ஏறுவதற்கான வரிசையில் இணைகிறாா்கள். மண்டல பூஜை, மகர விளக்கு உள்ளிட்ட முக்கிய நாள்களில் 1.2 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தை முறைப்படுத்த காவல்துறை முன்னோற்பாடுகளை செய்திருக்கிறது என்றாலும், தேவஸம் போா்டு அதற்கேற்றாற்போல் சுறுசுறுப்பாக இயங்கவில்லை.

தேவஸம் போா்டின் ஏல நடவடிக்கைகள் முழுமை ஆகாததால் சந்நிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் கடைகளின் எண்ணிக்கை குறைவு. அதனால், ஆரம்பகட்ட பக்தா்கள் சிரமப்படுகிறாா்கள். மாதக் கடைசிக்குள் நிலைமை சீராகும் என்று எதிா்பாா்க்கலாம். சுகாதாரத் துறை தனது பங்குக்கு ஆங்காங்கே முதல் உதவி சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நிலக்கல்லுக்கும் பம்பைக்கும் இடையில் நடத்துநா் இல்லாத 120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திரிவேணியில் 10 பயணச்சீட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் வரவேற்புக்குரியவை.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து சபரிமலை பயணம் மேற்கொள்ளும் ஐயப்பன்மாா்கள் தரிதனம் முடித்துத் திரும்பும்போது இனிமையான அனுபவங்களுடன் செல்ல வேண்டும். கேரள அரசு, வெளிமாநில பக்தா்கள் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து மட்டுமே குறியாக இருந்தால் எப்படி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com