மா(ஏ)ற்றத்தை நோக்கி...| இந்திய கம்யூ. பொதுச் செயலராக டி. ராஜா 2ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்த தலையங்கம்

மா(ஏ)ற்றத்தை நோக்கி...| இந்திய கம்யூ. பொதுச் செயலராக டி. ராஜா 2ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்த தலையங்கம்

 காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப் பழைமையான கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தேசிய மாநாடு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளராக தமிழரான டி. ராஜா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தேசிய கட்சியின் அகில இந்தியத் தலைவராக தமிழர் ஒருவர் திகழ்வது, தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிவிடவில்லை என்பதன் அடையாளம்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலகத்துக்கு பொதுச் செயலாளர் அல்லாமல் கே. நாராயணா, அதுல் குமார் அஞ்சான், அமர்ஜீத் கெளர், கானம் ராஜேந்திரன், பினோய் விஸ்வம் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 99 உறுப்பினர்கள் கொண்ட தேசிய குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
 எஸ்.ஏ. டாங்கே, ராஜேஸ்வர ராவ், பூபேஷ் குப்தா, ஹிரேன் முகர்ஜி, இந்திரஜித் குப்தா, ப. ஜீவானந்தம், எம். கல்யாணசுந்தரம், சி. அச்சுத மேனன், எம்.என். கோவிந்தன் நாயர், ஏ.பி. பரதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரால் வழிநடத்தப்பட்ட இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இப்போதும்கூட நல்லகண்ணு போன்ற நேர்மைக்கும், நாணயத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தலைவர்கள் இருக்கும் கட்சியாக அந்த இயக்கம் தொடர்கிறது.
 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயரில் சில மூத்த தலைவர்களும், தொண்டர்களும் பிரிந்ததைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலிமை இழந்திருக்கிறது என்றாலும்கூட, இயக்கம் தனது தத்துவம் சார்ந்த நிலைப்பாட்டில் பயணத்தைத் தொடர்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
 மதச்சார்பற்ற தேசிய ஜனநாயகம் என்கிற குறிக்கோளை முன்னிறுத்தி அரசியல் பயணத்தை வகுத்துக் கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தேசிய மாநாடு சில முக்கியமான கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் முன்னெடுத்திருக்
 கிறது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒன்றுபட்டிருந்தபோது கட்சியின் சக்தி கேந்திரமாக இருந்த ஆந்திரத்தில் ஐந்து நாட்கள் நடந்த தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் முக்கியமானது. இடதுசாரி கட்சிகளை ஒருங்கிணைத்து பலப்படுத்துவது மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைத்து விசாலமான கூட்டணியை அமைப்பதை அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
 தேசிய அளவில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வின் கொள்கைகளுக்கும், செயல்களுக்கும், திட்டங்களுக்கும் எதிராக ஒவ்வொரு மாநில அளவிலும் மாற்று சக்தியை உருவாக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரித்து வழிமொழிகிறது.
 காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களிலிருந்து மாநாட்டில் எழுப்பப்பட்டது. நேரடியாக காங்கிரஸýடன் மோதலில் இருக்கும் கேரள மாநில பிரிவின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதே நேரத்தில், அந்தந்த மாநில அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறது அரசியல் தீர்மானம்.
 தமிழ்நாட்டில் சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் இருப்பதுபோல, ஏனைய மாநிலங்களிலும் கூட்டணி அமைப்பதை கட்சி வரவேற்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது அரசியல் தீர்மானம்.
 தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்த கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, அடுத்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தோல்வியைத் தழுவும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மோடியின் ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்கள் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கு ஜி.என். சாய்பாபாவின் அனுபவத்தை உதாரணம் காட்டியும் பேசினார் அவர்.
 அரசியல் தீர்மானத்தில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் பாஜக அரசின் முயற்சிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் என்கிற கோஷத்தின் மூலம் மொழி ரீதியாக, பண்பாடு ரீதியாக, இன ரீதியாக இந்திய அளவில் காணப்படும் பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சியில் பாஜக அரசு தீவிரம் காட்டுவதாக தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. அரசியல் சாசனம் அங்கீகரித்திருக்கும் கூட்டாட்சித் தத்துவத்தை உதாசீனப்படுத்தும் போக்கையும் கண்டிக்கிறது 24-ஆவது தேசிய மாநாட்டின் அரசியல் தீர்மானம்.
 நூற்றாண்டு காண இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கட்சியில் வயதானவர்களை அகற்றி நிறுத்தி இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பும் அங்கீகாரமும் வழங்க முடிவெடுத்திருப்பது வரவேற்புக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, தேசிய - மாநில பொறுப்புகளில் உள்ள உறுப்பினர்களுக்கு வயதுவரம்பை 75 வயதாக நிர்ணயித்திருக்கிறது. கட்சியின் அனைத்து நிலைகளிலும் இளைஞர்களையும் மகளிரையும் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதன் மூலம்தான் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர முடியும் என்கிற உண்மையை காலதாமதமாக இப்போதாவது உணர முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
 இரண்டாவது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டி. ராஜாவின் தலைமையில், மாற்றத்துக்கும் வளர்ச்சிக்குமான முனைப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com