அதிகரிக்கும் தன்னுயிர் மாய்த்தல்! | தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை குறித்த தலையங்கம்

அதிகரிக்கும் தன்னுயிர் மாய்த்தல்! | தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை குறித்த தலையங்கம்

நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் கடந்த ஆண்டில் அதிக அளவில் தற்கொலைகள் பதிவானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் 2-ஆம் இடத்திலும், மத்திய பிரதேசம் 3-ஆம் இடத்திலும் உள்ளன.
என்சிஆர்பி அறிக்கையின்படி, மகாராஷ்டிரத்தில் 22,207 (13.5%) தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 18,925 (11.5%), மத்திய பிரதேசத்தில் 14,965 (9.1%), மேற்கு வங்கத்தில் 13,500 (8.2%), கர்நாடகத்தில் 13,056 (8%) தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் பதிவான ஒட்டுமொத்த தற்கொலை வீதத்தில், மேற்கண்ட 5 மாநிலங்களும் 50.4 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
மீதமுள்ள 49.6 % தற்கொலைகள் 23 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 16.9 % ஐ உள்ளடக்கிய உத்தர பிரதேசத்தில், தற்கொலை வீதம் 3.6 % ஆகப் பதிவாகியுள்ளது.
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, மக்கள்தொகை அதிகம் நிறைந்த தில்லியில் 2,840 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக புதுச்சேரியில் 504 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலைகளில் 33 %, படிப்பறிவிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் மகாராஷ்டிரம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
நாட்டில் கடந்த 2021-இல் 1,64,033 தற்கொலைகள் பதிவாகின. இது 2020-இல் (1,53,052) பதிவானதைக் காட்டிலும் 7.2 % அதிகமாகும். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த ஒரே நாளில் 11 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.
இதே போன்று, ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்புத் தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 3-ஆம் தேதி வெளியான நிலையில், 2 லட்சம் மாணவ, மாணவிகள் தோல்வியைத் தழுவினர். தமிழகத்தைப் போன்றே அங்கும் ஒரு சில நாள்களில் 8-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
படிப்பு தொடர்பாக பெற்றோர் தங்களின் விருப்பங்களைப் பிள்ளைகளின் மீது திணித்து மன ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது. நீட் தேர்வுக்கு முன்பும், பின்பும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதன் பின்னால் பெற்றோர் ஏற்படுத்தும் மன ரீதியான அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் சென்னையில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெற்றோர் தங்கள் ஆசைகளைப் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என வலியுறுத்தியிருக்கிறார்.
குடும்பங்களில் ஏற்படும் தகராறு காரணமாக குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு பொருளாதார ரீதியான காரணங்கள் இருந்தாலும், ஆண்கள் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபடுவது மிக முக்கிய காரணமாக உள்ளதை பல செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்துகொள்வது என்பது இந்தியாவில் மட்டும்தான் என்றல்ல, உலகம் முழுவதுமே பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 113 நாடுகளில் 89 நாடுகளில் கொலையைவிட தற்கொலைகள் அதிகமாக உள்ளன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
உலகிலேயே அதிகபட்சமாக, ஜப்பானில்தான் கொலையைவிட தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 56.8 மடங்காக உள்ளது. அங்கு ஒரு லட்சம் பேருக்கு 14.2 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றால், அதுவே 4 லட்சம் பேருக்கு ஒருவர் கொல்லப்படுகிறார். அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு 4.9 பேர் கொல்லப்படுகின்றனர் என்றால், 11.7 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் பேருக்கு 2.2 பேர் கொலை செய்யப்படுகின்றனர் என்றால், 11.3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதிலும் படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் கேரளம் (ஒரு லட்சம் பேருக்கு 24 பேர் தற்கொலை), தெலங்கானா (21.5), தமிழ்நாடு (22.2), மகாராஷ்டிரம் (16.1), கர்நாடகம் (18.4) ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.
பின்தங்கிய மாநிலங்களான பிகார் (0.7), உத்தர பிரதேசம் (2.1), ஜார்க்கண்ட் (5.6), கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை, போராட்டம் ஆகியவையே வாடிக்கையான வாழ்க்கையாகி உள்ள ஜம்மு - காஷ்மீர் (2.2) போன்ற மாநிலங்களில் தற்கொலை விகிதம் குறைவாக உள்ளது என்பது வியப்பளிப்பதாகும்.
தொழில்சார்ந்த பிரச்னைகள், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, இழிவுபடுத்தப்படுதல், வன்முறை, குடும்ப பிரச்னை, மனநல பிரச்னை, மதுப் பழக்கத்துக்கு அடிமையாகுதல், நிதி இழப்பு, நாள்பட்ட நோய் போன்றவை தற்கொலைக்கு காரணங்களாகின்றன. பிரச்னைகளை மறக்க மது, போதைப் பொருள் போன்றவற்றை நாடினால் புதிய பிரச்னைகள்தான் உருவாகுமேயொழிய இருக்கும் பிரச்னை தீராது.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை இளைஞர்கள் உள்பட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் புரிய வைக்க வேண்டும்.



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com