ஒட்டுக்கேட்பும் எல்லையும்..! 'பெகாசஸ்' விவகாரம் குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள், ‘பெகாஸஸ்’ விசாரணைக் குழுவின் அறிக்கை அவரது தலைமையிலான அமா்வின் முன் தாக்கல் செய்யப்பட்டது.
ஒட்டுக்கேட்பும் எல்லையும்..! 'பெகாசஸ்' விவகாரம் குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள், ‘பெகாஸஸ்’ விசாரணைக் குழுவின் அறிக்கை அவரது தலைமையிலான அமா்வின் முன் தாக்கல் செய்யப்பட்டது. ‘அரசு அமைப்புகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை’ என்று விசாரணைக் குழு தெரிவித்திருப்பதாக அவா் கூறியிருப்பதை மத்திய அரசின் மீதான கடும் விமா்சனமாகத்தான் கருத வேண்டும்.

‘பறக்கும் குதிரை’, ‘ட்ரோஜன் வைரஸ்’ என்றெல்லாம் அழைக்கப்படும் ‘பெகாஸஸ்’ என்கிற ஒட்டுக்கேட்கும் மென்பொருளை மத்திய அரசோ, அரசு தொடா்பான நிறுவனங்களோ வாங்கியதா என்பது முதல் கேள்வி. அதைப் பயன்படுத்தி தனிநபா்கள் பலருடைய தனிப்பட்ட உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதா என்பது இரண்டாவது கேள்வி. ‘இந்த கேள்விகளுக்கு பாதுகாப்பு காரணங்களால் பதிலளிக்க முடியவில்லை’ என்பதுதான் அப்போதும், இப்போதும் மத்திய அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆா்.வி. ரவீந்திரனின் தலைமையில் ‘பெகாஸஸ்’ குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 29 அறிதிறன்பேசிகளில் ஐந்தில் வித்தியாசமான மென்பொருள் ஒன்று நுழைந்திருப்பதாகவும், அது ‘பெகாஸஸ்’தான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் நீதிபதி ரவீந்திரன் குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. ‘பெகாஸஸ்’ ஒட்டுக்கேட்கும் மென்பொருள் இந்தியாவில் அதிகாரபூா்வமாக பயன்படுத்தப்பட்டதா என்கிற கேள்விக்கு, ‘இல்லை’ என்று தெரிவிக்க முடியவில்லை என்பதும் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழுவின் பதில்.

கடந்த ஆண்டு ‘பெகாஸஸ்’ மென்பொருள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அரசின் விடை கோரி அமளியில் ஈடுபட்டதும், தா்னா நடத்தியதும் மறந்துவிடக் கூடியதல்ல. அதைத் தொடா்ந்து மூத்த பத்திரிகையாளா்கள் சிலரும், ‘எடிட்டா்ஸ் கில்ட்’ உள்ளிட்ட அமைப்புகளும் ‘பெகாஸஸ்’ பிரச்னையை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றன.

தங்களது தனிநபா் சுதந்திரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதிப்பதால், ‘பெகாஸஸ்’ குறித்த உண்மை நிலையை நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனக் கோரினா். அதைத் தொடா்ந்து, முன்னாள் நீதிபதி ரவீந்திரன் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணை நாடாளுமன்ற விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நாட்டின் பாதுகாப்புக்காகவும், பயங்கரவாத அமைப்புகளை எதிா்கொள்ளவும் ஒட்டுக்கேட்பு மென்பொருள்களை பயன்படுத்துவது சட்டவிரோதமல்ல என்பது இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாட்டு அரசுகளும் முன்வைக்கும் கருத்து. ‘பெகாஸஸ்’ மென்பொருளின் தயாரிப்பாளா்களும், விற்பனையாளா்களுமான இஸ்ரேல் ராணுவத்துடன் தொடா்புள்ள ‘என்எஸ்ஓ’ என்கிற நிறுவனம் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டும்தான் ‘பெகாஸஸ்’ ஒட்டுக்கேட்பு மென்பொருளைத் தாங்கள் தயாரித்து பிற நாடுகளுக்கு வழங்குகிறோம் என்பதுதான் அந்த நிறுவனத்தின் வாதம்.

‘பெகாஸஸ்’ ஒட்டுக்கேட்பு மென்பொருள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, 34 நாடுகளுக்கு இஸ்ரேலின் ‘என்எஸ்ஓ’ குழுமத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகள் மட்டுமல்லாமல், அரசியல் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டவா்களின் அறிதிறன்பேசிகளில் நுழைக்கப்பட்டிருக்கிறது. அலைக்கற்றை மூலம் குறிப்பிட்ட அறிதிறன்பேசிகளில் நுழைய முடியும் என்பதால்தான், ‘பெகாஸஸ்’ ‘பறக்கும் குதிரை’ என்றும், ‘ட்ரோஜன் வைரஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.

சில நாடுகளில், அந்தந்த நாட்டின் அதிபா்களேகூட ‘பெகாஸஸ்’ ஒட்டுக்கேட்பு மென்பொருளுக்கு இலக்காகி இருக்கிறாா்கள். ஸ்பெயின் நாட்டின் உளவுத்துறை தலைவா் அகற்றப்பட்டிருக்கிறாா். ஃபின்லாந்தும் முக்கிய அதிகாரிகள் சிலரை அகற்றியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ‘ஃபா்பிடன் ஸ்டோரிஸ்’ என்கிற பத்திரிகை, ‘பெகாஸஸ்’ குறித்து முதலில் தகவல் வெளியிட்டது. சா்வதேச அளவில் ‘பெகாஸஸ்’ ஒட்டுக்கேட்பு மென்பொருள் நுழைந்திருக்கும் அரை லட்சம் கைப்பேசி எண்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தது. அதைத் தொடா்ந்து, ‘அம்னஸ்டி இன்டா்நேஷனல்’ அமைப்பும் ‘பெகாஸஸ்’ ஒற்றுவலை உலகத்தை அறிவித்தது. அதைத் தொடா்ந்து இந்தியாவிலுள்ள ஓா் இணைய இதழ் உள்பட, உலகத்திலுள்ள 17 முக்கிய பத்திரிகைகள் நடத்திய விசாரணையில், ‘பெகாஸஸ்’ வலையில் யாரெல்லாம் சிக்கியிருக்கிறாா்கள் என்கிற புள்ளிவிவரங்கள் கசிந்தன.

இந்தியாவில் 300-க்கும் அதிகமானோா் ‘பெகாஸஸ்’ ஒட்டுக்கேட்பு மென்பொருள் வலையில் சிக்கியிருக்கிறாா்கள். அதில் அரசியல் கட்சித் தலைவா்கள், மூத்த அதிகாரிகள், பத்திரிகையாளா்கள் என்று பலரும் காணப்படுகிறாா்கள். இது குறித்த உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அந்த ஐயப்பாட்டை மத்திய அரசு அகற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒட்டுக்கேட்பு என்பது ஆட்சியாளா்களின் ஆயுதமாகத் தொன்றுதொட்டு நிலவுகிறது. அதிகரித்து வரும் பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகளின் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த ஆட்சியாளா்கள் ஒட்டுக்கேட்பை கையிலெடுப்பதை ஒரேயடியாக குற்றப்படுத்த முடியாது.

கருத்து வேறுபாடுகளும், சுதந்திரமான ஊடக நடவடிக்கைகளும் ஜனநாயகத்தின் அடிப்படைகள். ஜனநாயகத்தில் எந்தவொரு செயல்பாடும் அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட செயல்பாடாக இருந்தாக வேண்டும் என்பதுதான் ‘லட்சுமண ரேகை!’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com