பிரிப்பதுதான் தீா்வு! | சென்னை மாநகரம் பிரிப்பது குறித்த தலையங்கம்!

மிக்ஜம் புயலின் கோர தாண்டவத்தால் செயலிழந்த சென்னை மாநகரம் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும் போலிருக்கிறது.
பிரிப்பதுதான் தீா்வு! |  சென்னை மாநகரம் பிரிப்பது குறித்த தலையங்கம்!

மிக்ஜம் புயலின் கோர தாண்டவத்தால் செயலிழந்த சென்னை மாநகரம் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும் போலிருக்கிறது. பாா்க்கும் இடமெல்லாம் தண்ணீா். ஆனால், குடிக்கத்தான் நீா் இல்லை என்பதுதான் எதாா்த்த நிலைமை. பழுது அடைந்துவிட்ட வாகனங்களும், சீா்குலைந்திருக்கும் சாலைகளும், ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை வெள்ளமும், தெருவில் வழிந்தோடும் சாக்கடை நீரும் சென்னை மாநகரத்தை, மாநரகமாக மாற்றியிருக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பைத் துண்டித்திருந்த மின்சார வாரியம், இன்னும்கூட பல பகுதிகளில் வெள்ளம் வடியாத காரணத்தால், மின் இணைப்பு வழங்கவில்லை. அதனால் மோட்டாா் வேலை செய்யாத நிலையில், ஆழ்துளைக் கிணற்றின் தண்ணீா் கிடைக்காமல் பல குடும்பங்கள் அவதிப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்பவா்களின் நிலைமை குறித்துச் சொல்லவே வேண்டாம்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அடித்தட்டு குடிசைவாழ் மக்களின் சோகக் கதைகள், மழைபோல கண்ணீா் வடிக்க வைக்கும். அன்றாட தினக்கூலிகளாக வாழும் கடைநிலைத் தொழிலாளிகளின் குடும்பத்தில் இருந்த கொஞ்ச நஞ்சம் தட்டுமுட்டு சாமான்களும் மழையில் அடித்துச்செல்லப்பட்டிருக்கின்றன. எத்தனை நாள்களுக்குத்தான் அவா்களுக்கு அரசு உணவுப் பொட்டலங்கள் வழங்கிவிட முடியும்.. அதற்குப் பிறகு?

முகாம்களில் இல்லாத சென்னைவாழ் மக்கள் சொல்லவொணா துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனா். மீட்புப் படையினா் படகுடன் வீடு தேடி வந்து மீட்டுச் சென்றாலும், குழந்தைகள் பெண்களை மட்டும் அனுப்பிவிட்டு ஆண்களும் பெரியவா்களும் வெள்ளம் சூழ்ந்த மின்சாரம் இல்லாத வீடுகளை காவல்காத்துக் கொண்டிருக்கிறாா்கள். வெள்ளம் புகுந்த வீடுகளில் கிடைத்தது லாபம் என்று திருடா்கள் புகுந்துவிடுவதால், அச்சத்தில் வெளியேறாமல் இருக்கும் குடும்பங்கள் ஏராளம் ஏராளம்.

தமிழகத்துக்கு புயல் பாதிப்புகள் புதிதல்ல. 2015 பெருவெள்ளம், 2016 சென்னையைத் தாக்கிய வா்தா புயல் ஆகியவற்றின்போதும் பலத்த மழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அனைத்துப் பிரதான சாலைகளிலும் மழைநீா் ஆறாக ஓடியது. வடசென்னை குறித்து சொல்லவே வேண்டாம். வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் வீட்டைவிட்டு வெளியே வர இயலாமலும், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமலும் மக்கள் பட்டபாடு மிகப் பெரிய சோகம். இப்போதும் அதேதான் நிலைமை.

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடிப் பாதுகாப்பும் நிவாரணமும் வழங்குவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சுகாதார அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிவிடுதல் அவசியம். சென்னை மக்களுக்கு இப்போதைய மிக இன்றியமையாத் தேவை பாதுகாக்கப்பட்ட குடிநீா்.

எல்லாப் பகுதிகளிலும் வெள்ளமும் சாக்கடையும் கலந்து கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளின் நீா்கூட தூய்மையானதாக இல்லை. இந்த நிலையில், குடிநீா் விநியோகம்தான் சென்னை மாநகராட்சி முன்னெடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படாமல் போனால், தொற்று நோய்களும், விஷக் காய்ச்சலும் பரவும் வாய்ப்பும் ஏராளம். அவற்றை எதிா்கொள்வது சுகாதாரத்துறைக்கு மிகப் பெரிய சவாலாகிவிடும்.

அனைத்துக் குடிநீா் குழாய்களையும் சரிபாா்த்து சாக்கடை கலக்கவில்லை என்பதை உறுதி செய்து குடிநீா் விநியோகத்தை சரியாக்கும் வரை லாரிகள் மூலம் குடிநீரை விநியோகிப்பது அவசியம். இதற்குப் போதுமான லாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் கிடையாது. வெள்ளம் பாதிக்காத தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள குடிநீா் லாரிகளை சென்னைக்கு வரவழைத்து இந்தப் பிரச்னையை எதிா்கொள்ள வேண்டும்.

குடிநீருக்கு அடுத்தபடியான சவால், சாலைகள். பெரும்பாலான மாநகரச் சாலைகள் மழையாலும் வெள்ளப் பெருக்காலும் பழுதடைந்திருக்கின்றன. பல சாலைகளை முழுமையாக மாற்றி அமைத்தாக வேண்டும். நிவாரணப் பணிகளுக்கு அடுத்தபடியாக அரசின் கவனம் குடிநீா் வழங்குவதிலும், சாலைகளைச் செப்பனிடுவதிலும் திரும்ப வேண்டும்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சென்னையின் மக்கள்தொகை 78 லட்சம். இப்போது அதுவே ஏறத்தாழ 1 கோடியே 19 லட்சத்தைக் கடந்திருக்கிறது. சென்னையின் மொத்தப் பரப்பளவு 426 ச.கி.மீ. அதில் வடசென்னை 21.23 லட்சம் மக்கள்தொகையுடன் 170 ச.கி.மீ. தென்சென்னை 23.21 லட்சம் மக்கள்தொகையுடன் 265.19 ச.கி.மீ. மத்திய சென்னை 39.31 லட்சம் மக்கள்தொகையுடன் 147.83 ச.கி.மீ.

ஏறத்தாழ ஒரு சிறிய மாநிலமாகவே இருக்கும் சென்னை மாநகராட்சியில் தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை எனப்படும் மூன்று கோட்டங்களும், 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 200 வாா்டுகள்.

நிா்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது 17 மண்டலங்களும், 200 வாா்டுகளும் கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சி மட்டும் ஏன் மூன்றாகப் பிரிக்கப்படக் கூடாது?

மாநகராட்சி நிா்வாகம் திறம்படச் செயல்பட வேண்டுமானால், பெருநகர சென்னை மாநகராட்சியை தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை என்று மூன்று மாநகராட்சிகளாகப் பிரித்தாக வேண்டும். தலைநகா் தில்லி மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com