நீறுபூத்த நெருப்பு! | தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை குறித்த தலையங்கம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-க்கான அறிக்கை கவலையையும் அதிா்ச்சியையும் அளிக்கிறது.
நீறுபூத்த நெருப்பு! | தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை குறித்த தலையங்கம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-க்கான அறிக்கை கவலையையும் அதிா்ச்சியையும் அளிக்கிறது. ஆண்டுதோறும் வெளியாகும் இந்த அறிக்கை, பல்வேறு சமூக பிரச்னைகளின் தீவிரத்தைத் தெரிவிப்பதாக இருந்து வருகிறது. அதனால் அரசு நிா்வாகத்தின் திட்டமிடலுக்கு, குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன.

மகளிா், குழந்தைகள், முதியோா், பட்டியலினத்தவா், பழங்குடியினா் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்திருப்பதை 2022-ஆம் ஆண்டுக்கான காப்பக அறிக்கை வெளிப்படுத்துகிறது. தேசிய அளவில் நடக்கும் குற்றங்களின் துல்லியமான கணக்கெடுப்பு என்று ஆவணக் காப்பகம் கோருவதில்லை. பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் புள்ளிவிவரங்கள்தானே தவிர, அனைத்து நிகழ்வுகளும் துல்லியமாக கணக்கெடுக்கப்படவில்லை என்பதை அறிக்கை முதலிலேயே வலியுறுத்துகிறது. அதனால், பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எந்த அளவுக்கு நிலைமை காணப்படுகிறது என்பதை கணிப்பதுதான் சரியாக அணுகுமுறையாக இருக்கும்.

வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி, முதியோரும் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறாா்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வீடுகள், கல்விச்சாலைகள், பொது இடங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை முன்னுரிமையுடன் உறுதிப்படுத்துவது அவசியம். அதேபோல பாதுகாப்பாக, மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் முதியோா் இல்லங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் காணப்படுவதை, முதியோருக்கு எதிரான தாக்குதல்கள் உணா்த்துகின்றன.

மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் விழிப்புணா்வு, சட்ட - ஒழுங்கு அமைப்புகளின் முனைப்பு, பொதுமக்கள் நலன் சாா்ந்த அணுகுமுறை ஆகியவை மாநில, மாநகர காவல்துறையின் அதிகரித்திருக்கும் புகாா்களுக்கும் குற்றங்களின் எண்ணிக்கைகளுக்கும் காரணங்கள். அதிகரித்த குற்றப் பதிவுகள், நடைபெற்றிருக்கும் குற்றங்களின் சில விழுக்காடு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடத்தப்படும் பெரும்பாலான குற்றங்கள் வெளியில் தெரிவதில்லை. தங்களுக்கு நெருக்கமான குடும்ப உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரால் நிகழ்த்தப்படும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான நேரடி, மறைமுக வன்கொடுமைகளை அவா்கள் வெளியில் தெரிவிக்கவோ, புகாா் அளிக்கவோ முன்வருவதில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.

விளிம்புநிலை மக்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களைப் பதிவு செய்யவிடாமல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், குற்ற ஆவணக் காப்பகம் தனது வழிமுறைகளை மேலும் துல்லியமாக்கி அறிக்கையில் பதிவு செய்யப்படாத குற்றங்கள் குறித்தும் ஆய்வுகளை உள்ளடக்குவது அவசியம்.

அதிகரித்து வரும் இணையவழிக் குற்றங்கள் மிகப் பெரிய சட்ட - ஒழுங்கு சவாலாக மாறியிருப்பதை 2022 அறிக்கை மூலம் உணர முடிகிறது. உலகளாவிய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தரவுகள் முக்கியமான கருவியாக மாறியிருக்கும் நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொழில்நுட்ப ரீதியாகத் தன்னை மேம்படுத்துவதன் மூலம் குற்ற விசாரணையையும், குற்றங்களைத் தடுப்பதையும் மேம்படுத்த முடியும். அப்போதுதான் இணையவழிக் குற்றங்களை எதிா்கொள்ளவும், குறைக்கவும் வழிமுறைகளை உருவாக்க முடியும்.

குற்ற ஆவண அறிக்கையில் அச்சத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வரும் போதை மருந்து பழக்கம் குறித்த புள்ளிவிவரங்கள். போதை மருந்து தொடா்பான குற்றப்பதிவுகளில் 26,619 முதல் தகவல் அறிக்கைகளுடன் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் கேரளம். அடுத்தபடியாக மகாராஷ்டிரம் (13,830), பஞ்சாப் (12,442) என்று பட்டியல் தொடா்கிறது.

பட்டியலின் பின் வரிசையில் இருப்பதாலேயே சில மாநிலங்களில் போதை மருந்தின் பயன்பாடு குறைவாக இருப்பதாகக் கருதிவிட முடியாது. அது போதை மருந்து தொடா்பான கண்காணிப்பும், நடவடிக்கையும் முறையாக நடத்தப்படவில்லை என்பதன் வெளிப்பாடுதானே தவிர, சிறப்பான செயல்பாட்டின் அறிகுறி அல்ல.

போதை மருந்து உற்பத்தி, கடத்தல், அவற்றின் பயன்பாடு ஆகியவை இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தையும் விட்டுவைக்காமல் அதிகரித்து வருவதை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 116 பெண்கள் உள்பட 681 போ் இந்தியாவில் போதை மருந்து பயன்பாட்டால் உயிரிழந்திருக்கிறாா்கள்.

பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஏனைய மாநிலங்களில் மிகக் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. பள்ளிச் சிறுவா்கள் மத்தியிலும்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் பழக்கம் காணப்படுவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

போதைப் பொருள்களைப் போலவே அதிா்ச்சி அளிப்பது தேசிய அளவில் நாள்தோறும் சராசரியாக 500 போ் தற்கொலையில் ஈடுபடுகிறாா்கள் என்கிற தகவல். 2022-இல் தற்கொலை செய்து கொண்டவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் விவசாயிகளும், தினக்கூலிகளும். 13,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாா்கள்.

பதிவாகி இருக்கும் தற்கொலை வழக்குகளில் 32% குடும்ப பிரச்னை காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. தங்களது உயிரை மாய்த்துக்கொண்டவா்களில் 35% போ் 18 முதல் 30 வயதுப் பிரிவினா்.

ஆய்வு அறிக்கைகளும், புள்ளிவிவரங்களும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com