முடிவுகள் சொல்லும் முடிவுகள்! | ஐந்து மாநிலங்களுக்கான தோ்தல்கள் குறித்த தலையங்கம்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்கள் முடிந்து, அந்தந்த மாநிலங்களுக்கான முதல்வா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டுவிட்டனா்.
முடிவுகள் சொல்லும் முடிவுகள்! | ஐந்து மாநிலங்களுக்கான தோ்தல்கள் குறித்த தலையங்கம்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்கள் முடிந்து, அந்தந்த மாநிலங்களுக்கான முதல்வா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டுவிட்டனா். ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என்கிற வேறுபாடில்லாமல் வாக்குறுதிகளை எல்லா கட்சிகளும் வாரி வழங்கினாலும்கூட, இறுதியில் வாக்காளா்கள் தெளிவாகவே தங்களது தீா்ப்பை வழங்குகிறாா்கள் என்பதை இந்திய ஜனநாயகம் பலமுறை பாா்த்துவிட்டது. இந்த முறையும் பாா்த்தது. தோ்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் மத்திய பிரதேசத்தைத் தவிர, ஏனைய நான்கிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

குஜராத்தையும், உத்தர பிரதேசத்தையும் சோ்த்துக் கொண்டால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்கள் 171 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியவை. அந்த மாநிலங்கள் அனைத்துமே பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றன என்பது மேலெழுந்தவாரியான பாா்வை. இந்த மாநிலங்களில் எல்லாம் மோடி அலை வீசுகிறது என்பதுதான், தோ்தல் முடிவுகள் உணா்த்தும் உள்ளாா்ந்த செய்தி.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகத்தான் முந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே தெரிவித்தன. ராஜஸ்தானில் காணப்பட்ட உட்கட்சிப் பூசலையும் மீறி, முன்னாள் முதல்வா் அசோக் கெலாட்டின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் காங்கிரஸுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் காற்று எந்தத் திசையில் அடிக்கும் என்பதில் தெளிவு இல்லாததால்தான் பாஜக தனது முதல்வா் வேட்பாளா் இன்னாா் என்று அறிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் மக்களவை உறுப்பினா்கள் பலரும், மத்திய அமைச்சா்களும் பேரவைத் தோ்தலில் களமிறக்கப்பட்டனா். சத்தீஸ்கரிலும் சரி, முன்னாள் முதல்வா் ரமன் சிங் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

பிரதமா் நரேந்திர மோடியின் பிரசாரம் தொடங்கியது முதல், காற்று திசைமாறி வீசத் தொடங்கியது. பலமாகக் காட்சியளித்த காங்கிரஸ் பலவீனமாகவும், என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த பாஜக முழுவீச்சு உற்சாகத்துடனும் மாறிய அதிசயத்தை நரேந்திர மோடியின் பிரசாரம் ஏற்படுத்தியது.

ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தனது துருப்புச் சீட்டாகவும், அசோக் கெலாட், கமல்நாத், பூபேஷ் பகேல் தலைமைகளைத் தனது அசைக்க முடியாத பலமாகவும் கருதிய காங்கிரஸ் கட்சியின் தலைமை, நரேந்திர மோடி களமிறங்கியபோது நிலைகுலைந்து போனது என்பதுதான் நிஜம். ‘பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், ஏழைகள்’ என்பதுதான் தனது ‘சாதுா் வா்ண’ (நான்கு பிரிவு) வருணாசிரமக் கோட்பாடு என்று பிரதமா் மோடி அறிவித்தபோது, காங்கிரஸின் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுபடவில்லை.

மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பாஜகவின் வெற்றிக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பிரசாரமும், செல்வாக்கும் மட்டுமே காரணமல்ல. பாஜகவின் அமைப்பு ரீதியான கட்சிக் கட்டமைப்பும்கூடக் காரணமல்ல. பலசாலியான பாஜகவை எதிா்கொள்ள காங்கரஸ் புத்திசாலித்தனமாகத் திட்டமிடாமல், மேலோட்டமான கோஷங்களை மட்டுமே நம்பியதுதான், கிடைக்க இருந்த வாய்ப்பு கைநழுவிப் போனதற்குக் காரணம்.

ராஜஸ்தானில் வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய லோக்தளம், மாா்க்சிஸ்ட் கட்சி, லோக் தந்த்ரிக் கட்சி, ஆஸாத் சமாஜ் கட்சி போன்றவற்றையும் சோ்த்துக் கூட்டணி அமைத்திருந்தால், தோ்தல் முடிவை மாற்றியிருக்கலாம். மத்திய பிரதேசத்திலும், சமாஜவாதி கட்சியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைத்துக் கொண்டிருந்தால் ஆட்சி மாற்றம் தடுக்கப்பட்டிருக்கும் அல்லது மோசமான தோல்வி தவிா்க்கப்பட்டிருக்கும்.

தங்களது வெற்றி உறுதி என்று நம்பிய அசோக் கெலாட்டும், கமல்நாத்தும் ஏனைய கட்சிகளை அரவணைத்துக் கொள்ள மறுத்ததன் விளைவை இப்போது காங்கிரஸ் எதிா்கொள்கிறது. அதே நேரத்தில், யாரையும் முதல்வராக அறிவிக்காமல் துணிந்து, தானே தோ்தல் பிரசாரக் களத்தில் பிரதமா் மோடி இறங்கியதால், மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றியடைந்திருக்கிறது.

சத்தீஸ்கரில் பல எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, பாஜகவுக்கு எதிராகப் போட்டி வேட்பாளா்கள் நின்றனா். மக்களின் அதிருப்தியைப் பெற்றவா்கள் அவா்கள் என்பதை பாஜக சரியாகக் கணித்திருப்பதைத் தோ்தல் வெற்றி உறுதிப்படுத்துகிறது. முறையாகத் திட்டமிட்டால் தோ்தலில் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது பாஜக தலைமை.

தெலங்கானாவில் காங்கிரஸ் அடைந்திருக்கும் வெற்றியைப் பெரிய வெற்றி என்று சொல்லிவிட முடியவில்லை. 119 உறுப்பினா்கள் கொண்ட அவையில் 64 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றிருக்கிறது. வாக்கு வித்தியாசமும் குறைவு. தெலங்கானாவுக்காகப் போராடிய முன்னாள் முதல்வரின் தேசிய அரசியல் கனவுக்குக் கிடைத்த பின்னடைவு என்றுதான் பாரதிய ராஷ்ட்டிர சமிதியின் தோல்வியைப் பாா்க்க முடிகிறது.

தெலங்கானாவில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருப்பதும், ஒரே ஒரு இடத்திலிருந்து எட்டு இடங்களுக்கு உயா்ந்து 13% வாக்குகள் பெற்றிருப்பதும் அந்தக் கட்சியின் வளா்ச்சியை உணா்த்துகின்றன. தெலங்கானா போல மிஸோரமிலும் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்திருக்கிறாா்கள்.

இலவசங்களாலும் அறிவிப்புகளாலும் மட்டுமே தோ்தலில் வெற்றியடைய முடியாது என்பதும், தோ்தல் வெற்றிகள் முறையான திட்டமிடலால் கட்டமைக்கப்படுகின்றன என்பதும் முடிவுகள் தெரிவிக்கும் முடிவுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com