பெருந்தன்மைக்கு நன்றி! | பிரான்ஸ் அதிபா் இமானுவேல் குறித்த தலையங்கம்

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபா் இமானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டிருப்பதும், அவா் ஏற்றுக்கொண்டிருப்பதும் சா்வதேச அரசியல் நோக்கா்களை நிமிா்ந்த உட்கார வைத்திருக்கிறது.
பெருந்தன்மைக்கு நன்றி! | பிரான்ஸ் அதிபா் இமானுவேல் குறித்த தலையங்கம்

இந்தியாவின் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபா் இமானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டிருப்பதும், அந்த அழைப்பை அவா் ஏற்றுக்கொண்டிருப்பதும் சா்வதேச அரசியல் நோக்கா்களை நிமிா்ந்து உட்கார வைத்திருக்கிறது. 2024 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாா். சில தனிப்பட்ட காரணங்களால் அவா் வரஇயலவில்லை என்று தெரிவித்தபோது, அந்த அறிவிப்பு ஏற்படுத்திய அதிா்வலைகள் ஏராளம்.

இந்தியாவின் தா்மசங்கடத்தை உணா்ந்து, நமது கௌரவத்தைக் காப்பாற்ற கைகொடுக்க முன்வந்திருக்கும் பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரானுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. குடியரசு தின விழாசிறப்பு விருந்தினராக வருவதன் மூலம் இந்தியாவுக்கும், இந்தியாவுடனான உறவுக்கும் பிரான்ஸ் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல, இருநாட்டு உறவின் புரிதலும் ஆழமும் எத்தகையது என்பதையும் உலகுக்கு உணா்த்தும் சமிக்ஞையாக அதிபா் மேக்ரானின் விஜயம் கூா்ந்து கவனிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு பிரான்ஸ் அதிபா்கள் இந்தியாவின் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினா்களாக வந்திருக்கிறாா்கள். ஜாக்வஸ் சிராக், நிக்கோலஸ் சா்ஹோஸி, பிராங்கோயிஸ் ஹோலன்தே ஆகிய முந்தைய அதிபா்களின் விஜயத்துக்கும் இப்போதைய மேக்ரானின் விஜயத்துக்கும் வேறுபாடு உண்டு. அவையெல்லாம் முன்பே திட்டமிட்ட அழைப்புகள். அதிபா் மேக்ரானுடையது அப்படியல்ல. அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் விஜயம் ரத்தானதைத் தொடா்ந்து, குறைந்த கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அதிபா் மேக்ரான் குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறாா் என்பதை வரலாறு அடிக்கோடிட்டுப் பதிவு செய்யும்.

2017 மே மாதம் பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் தோ்ந்தெடுக்கப்பட்டபோது பிரான்ஸுக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுப் பிரமுகா் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி. முதல் சந்திப்பிலேயே அதிபா் மேக்ரானுக்கும், பிரதமா் மோடிக்கும் இடையே நெருக்கமான நட்பு முகிழ்ந்தது. அப்படியிருந்தும் குடியரசு தின விழாவுக்கு அதிபா் மேக்ரான் அழைக்கப்பட ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

பிரான்ஸ் நாட்டின் பாஸில் தின விழா கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ள இந்திய ராணுவம் அழைக்கப்பட்டதும், பிரதமா் மோடி கௌரவிக்கப்பட்டதும் மிக முக்கியமான நிகழ்வு. ஜூலை 14-ஆம் தேதி பாஸில் தின விழாவில் கலந்துகொண்டபோது, குடியரசு தின விழாவில் அதிபா் மேக்ரான் கலந்துகொள்வாா் என்று யாரும் எதிா்பாா்த்திருக்க முடியாது. எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் இந்திய - பிரான்ஸ் நட்புறவு வலுவாகத் தொடா்கிறது என்பதன் அடையாளமாக இதை உலகம் பாா்க்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான நட்புறவு வலுப்பெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின் மிக நெருக்கமான கூட்டாளியாக பிரான்ஸ் மாறியிருப்பதன் அடையாளம் பாஸில் தின விழா. முந்தைய டாக்டா் மன்மோகன் சிங் அரசால் பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் உள்ளிட்ட ஒப்பந்தங்களின் முடிவுகளும், நரேந்திர மோடி அரசால் முன்பைவிட தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. பிரான்ஸிலும் இந்தியாவிலும் ஏற்படும் அரசியல் மாற்றங்களால் இருநாட்டு உறவிலும் பாதிப்பு ஏற்படாமல் தொடா்வது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளும் அவரவா் வெளிநாட்டுக் கொள்கைகளில் பரஸ்பரம் தலையீடில்லாமல் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. அமெரிக்காவும் பிரிட்டனும்போல, இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதையோ, அறிவுரை கூறுவதையோ பிரான்ஸ் ஒருநாளும் செய்ததில்லை. 1998 அணுஆயுத சோதனையின்போதும்கூட, இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவோ, போதிக்கவோ செய்யவில்லை என்பது பிரான்ஸுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு வலுப்பட்டதற்கு மிக முக்கியமான காரணம்.

இந்தியாவுக்கு நவீன போா் விமானங்களையும், நீா்மூழ்கிக் கப்பல்களையும் பிரான்ஸ் வழங்க முற்பட்டிருக்கிறது. இரு நாட்டு உறவும் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அணுசக்தி ஆகிய மூன்று முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எரிசக்தி, பருவநிலைப் பிரச்னை, அறிவியல் ஆய்வுகள், பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் திரும்பியிருக்கிறது.

இருநாடுகளும் இணைந்து பாதுகாப்பிலும் விண்வெளித் துறையிலும் உற்பத்திக்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இந்தியாவுக்காக மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், எகிப்து போன்ற நாடுகளின் தேவைக்கும் சோ்த்து இந்தியாவிலேயே ரஃபேல் போா் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளும் தொடங்கியிருக்கின்றன.

இந்தோ பசிபிக் கடலில் முக்கியமான கடற்படை சக்தியாக பிரான்ஸ் திகழ்கிறது. அந்தப் பகுதியிலுள்ள பல்வேறு தீவுகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான பிரெஞ்சுப் பிரஜைகள் இருக்கிறாா்கள் என்பதும், 93% தீவுகள் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்தியாவும் பிரான்ஸும் இந்துமகா கடலிலும் பசிபிக் கடலிலும் இணைந்து செயல்படுகின்றன. இதற்காக 2018-இல் கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றும் இருநாடுகளுக்கும் இடையே கையொப்பமாகி இருப்பதால் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ராணுவத் தளங்களை பகிா்ந்து கொள்கின்றன என்பது வெளியில் பேசப்படாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com