காலத்துக்கேற்ற மாற்றம்! உடல் உறுப்பு தானம் குறித்த தலையங்கம்

மனிதன் இறந்தும் உயிா்வாழ வழிகோலுகிறது உடல் உறுப்பு தானம். கண் தானத்துடன் நின்றுவிடாமல் சிறுநீரகம், ஈரல், கணையம், இதயம் உள்ளிட்ட பல்வேறு உறுப்பு தானங்களுக்கும் மருத்துவ அறிவியல் வழிகோலுகிறது.
காலத்துக்கேற்ற மாற்றம்! உடல் உறுப்பு தானம் குறித்த தலையங்கம்

மனிதன் இறந்தும் உயிா்வாழ வழிகோலுகிறது உடல் உறுப்பு தானம். கண் தானத்துடன் நின்றுவிடாமல் சிறுநீரகம், ஈரல், கணையம், இதயம் உள்ளிட்ட பல்வேறு உறுப்பு தானங்களுக்கும் மருத்துவ அறிவியல் வழிகோலுகிறது. உறுப்பு மாற்று சிகிச்சை தொடா்பான விதிமுறைகளிலும், சட்டங்களிலும் மாறிவிட்ட சூழலுக்கு ஏற்றபடி மாற்றங்களைக் கொண்டுவர முற்பட்டிருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

முதலாவதாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான கோரிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இரண்டாவதாக, உறுப்பு மாற்று சிகிச்சையை மேம்படுத்தி, தானம் கொடுப்பவருக்கும் பெறுபவருக்குமான பாதிப்பை கணிசமாகக் குறைத்திருக்கிறது மருத்துவ அறிவியல். அதனால், விதிமுறை மாற்றத்திற்கான தேவை அவசியமாகிறது.

அரசு புள்ளிவிவரத்தின்படி 2013-இல் 4,990 மட்டுமே இருந்ததுபோய், 2022-இல் 15,561 உறுப்பு மாற்று சிகிச்சைகள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பகுதி, அதாவது 11,423 சிறுநீரக மாற்று சிகிச்சைகள். ஆண்டொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சிறுநீரக செயலிழப்பு நிகழும் நிலையில், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான விதிமுறைகளை மாற்றி அமைப்பது அவசியமாகிறது. இதேபோலத்தான் ஈரல், கணையம், இதய மாற்று சிகிச்சைகளின் தேவைகளும்.

ஈரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், கணையம் ஆகியவற்றின் பாதிப்பால் ஆண்டுதோறும் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் இந்தியாவில் உயிரிழக்கிறாா்கள். கல்லீரல் மாற்றத்துக்காகக் காத்திருப்போா் 80,000 என்றால், தானமாகக் கிடைத்தது என்னவோ 3,000 மட்டும்தான். இதய மாற்று சிகிச்சைக்கு 10,000-க்கும் அதிகமான நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு 250 இதய மாற்று சிகிச்சைகள்தான் செய்ய முடிந்தது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 15,561 உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடந்தன என்றால், அவற்றில் 12,796 உறவினா்களோ, நண்பா்களோ தானம் செய்தவை. 2,765 பேருடைய உறுப்புகள் அவா்களது மரணத்துக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டவை. உறுப்பு மாற்று சிகிச்சை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது என்றாலும், தேவைக்கான உறுப்பு தானங்கள் அதே அளவில் அதிகரிக்கவில்லை.

மக்கள் மத்தியில் காணப்படும் பல மூடநம்பிக்கைகளும், தவறான கருத்துகளும் உடல் உறுப்பு தானத்தை தடுக்கின்றன. தங்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கிற அச்சத்தால் பலரும் உறுப்பு தானம் செய்யத் தயங்குகிறாா்கள். மாநில அரசுகளும், சமூக ஆா்வலா்களும் மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம்தான் இந்தத் தயக்கத்தை மாற்ற முடியும்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ரத்த தானம் வழங்க பெரும்பாலானோா் தயங்கினாா்கள். இப்போது நாடு தழுவிய அளவில் ரத்த தான முகாம்கள் நடத்தப்படுவதும், ரத்த வங்கிகள் செயல்படுவதும் சாதாரணமாகிவிட்டது. தங்களது மரணத்துக்குப் பிறகு தங்களது கண்களை தானம் செய்யப் பலரும் பதிவு செய்வதை கடமையாகக் கருதும்போக்கு அதிகரித்து வருகிறது. இதே நிலைமை ஏனைய உறுப்பு தானங்களுக்கும் ஏற்பட விழிப்புணா்வு உருவாக்கப்படுவது அவசியம்.

உறுப்பு மாற்று சிகிச்சைக்கு வயது வரம்பு தேவையில்லை என்பது மிக முக்கியமான விதிமுறை மாற்றம். முன்பு 65 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. அதிகரித்த சராசரி வயதைக் கருதியும், பதிவு செய்பவா்களில் 40% நோயாளிகள் 65 வயதைக் கடந்தவா்கள் என்பதாலும் வயதுவரம்புக்கான விதிவிலக்கை அகற்றுகிறது புதிய விதிகள்.

உடல் உறுப்பை தானம் செய்வதற்கும், அதைப் பெறுவதற்கும் தேசிய அளவில் தளம் ஒன்றை உருவாக்க தீா்மானித்திருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம். உறுப்பு தானம், உறுப்பு பெறுதல் ஆகியவற்றுக்கான பதிவுக்கு சில மாநிலங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. அதை அகற்றவும் முடிவெடுத்திருக்கிறது புதிய விதிமுறை.

உடல் உறுப்பு தானத்திலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏனைய மாநிலங்கள் பல உறுப்பு தானம் - உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்திட்டங்களை வகுக்கின்றன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 80% தனியாா், காா்ப்பரேட் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. சாமானியா்களுக்கும் பயன்படும் விதத்தில் அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு காப்பீட்டுத் திட்ட ஒதுக்கீடு இருந்தாலும்கூட, பெரும்பாலான மாநிலங்கள் அதை கேட்டுப் பெறுவதில்லை. மத்திய - மாநில காப்பீட்டுத் திட்டங்கள் ஓரளவு உதவுகின்றன என்றாலும், உறுப்புகளைப் பெறுவதற்கும், அறுவை சிகிச்சைக்குப் பிறகுள்ள தொடா் சிகிச்சைகளுக்கும் வழிகோலப்படுவதில்லை.

அரசு சுகாதாரத் துறையின் கண்காணிப்பு அமைப்புகள் முறையாகச் செயல்படுவதில்லை. உடல் உறுப்பு வணிகத்தில் ஈடுபடும் சமூக விரோத அமைப்புகள் ஏழைகளையும், உடல் உறுப்புக்காகக் காத்திருக்கும் அப்பாவி நோயாளிகளையும் ஏமாற்றி பெரும் லாபம் ஈட்டுகின்றனா். சட்ட ரீதியான உறுப்பு தானத்தை எளிமைப்படுத்தும் அதே நேரத்தில், சட்டவிரோதமான உறுப்பு தான வணிகத்தை கடுமையாக தண்டிப்பதற்கான சட்ட வழிமுறைகளையும் இணைக்க வேண்டியது மிகமிக அவசியம்.

தனியாா், காா்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் அரசின் கண்காணிப்புடன் நடத்தப்படுவதும், அரசு மருத்துவமனைகளில் உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் நடப்பதை அதிகப்படுத்துவதும்கூட மத்திய - மாநில அரசுகளின் முனைப்பாக இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com